Monday, July 25, 2016

காமாக்ஷி தாயே!


கீதா ரங்கன் அம்மா குந்தல வராளி ராகத்தில் இனிமை ததும்பப் பாடியது. மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!




காமாக்ஷி தாயே

கருணை செய்வாயே

(காமாக்ஷி)



காஞ்சியிலே வீற்றிருந்து

கண்களினால் ஆட்சி செய்யும்

(காமாக்ஷி)



கஞ்ச மலர்ப் பாதங்கள்

நெஞ்சினிலே ஒளிர்ந்திடவும்

விஞ்சும் அன்பின் காரணத்தால்

விழிநீர் பெருகிடவும்

(காமாக்ஷி)



நாவினிக்க உன் நாமம்

நாளும் நவின்றிடவும்

பாவினிக்க உன்புகழைப்

பண்ணில் வைத்துப் பயின்றிடவும்

(காமாக்ஷி)


--கவிநயா 


Monday, July 18, 2016

சோதனை ஏன்?


அமிர் கல்யாணி ராகத்தில், சுப்பு தாத்தாவின் இசையில், கீதாம்மா அவர்கள் மனமுருகப் பாடியிருப்பது... மிக்க நன்றி, சுப்பு தாத்தா, மற்றும் கீதாம்மா!



உன்னையன்றி ஒருவரையும்

நான் நம்புகிலேன் தாயே

உள்ளம் படுகின்ற வேதனையில்

மனம் வெம்புகிறேன் தாயே



அம்மா என நீ இருக்கையிலும்

சும்மா எனக்கேன் சோதனையோ?

விழிநீர் ஆறாய் வழிகையிலும்

வேடிக்கை பார்ப்பதுன் வாடிக்கையோ?

(உன்னை)



பிள்ளை மனந்தான் பித்தாச்சு, இங்கு

அன்னையுன் மனமோ கல்லாச்சு

உலகின் வழக்கம் மாறியதோ, இல்லை

மனதின் மயக்கம் கூடியதோ?

(உன்னை)


--கவிநயா

Monday, July 11, 2016

தேயாத மதி


வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக
நேசத்திலே பூத்திருக்கும் என்னிதயம் உனக்காக
இதயத்திலே சின்னஞ் சிறு கோயில் வைத்தேன் உனக்காக
உதயமென நீயெழுந்து அதில் உதிப்பாய் அதற்காக

சோலைமலர்த் தேனே, என் சொக்கத் தங்கத் தாயே
பாலையிலே தவித்தாலும், பக்கத் துணை நீயே
வேலை வேலை என்றலையும் வேளையிலும் தாயே
மாலகற்றிக் கால்பிடிக்க அருள வேணும் நீயே

உள்ளமெனும் வானில் வந்து உலவுகின்ற தாயே
ஒரு நொடியும் தேயாத முழு நிலவு நீயே
தேடுகின்ற உண்மை உன்னை உணர்ந்திடவே  தாயே
தேயாத மதி எனக்கு அருள வேணும் நீயே



--கவிநயா


Monday, July 4, 2016

உன்னை நம்பி...



சுப்பு தாத்தாவின் இசையில் நாட்டைக் குறிஞ்சி ராகத்தீல் கீதா ரங்கன் அவர்கள் பாடியிருப்பது. மிக்க நன்றி தாத்தா, கீதாம்மா!



நாடுகின்றேனே நாயகியே

பாடுகின்றேனே பூவிழியே

தேடுகின்றேனே திருவடியே

வாடுகின்றேன் இன்னும் வரவில்லையே

(நாடுகின்றேனே)



பச்சை நிறத்தில் மீனாக்ஷி

அந்திச் சிவப்பில் காமாக்ஷி

கருமுகிலாக காளியம்மா

இயற்கையெல்லாம் உன் வண்ணமம்மா

(நாடுகின்றேனே)



நறுமண மலர்களில் திரு வதனம்

முழுமதி எழிலிலும் உன் வதனம்

சிறுதுளி தேனினில் உன் இனிமை, பெருங் 
கடலையும் விஞ்சிடும் உன் கருணை

(நாடுகின்றேனே)



சோதனை கோடி வந்தாலும்

வேதனை அளவின்றித் தந்தாலும்

மாதுனை நம்பியே வாழ்கின்றேன்

மாதா உன்பதம் வீழ்கின்றேன்

(நாடுகின்றேனே)




--கவிநயா