Tuesday, August 31, 2010

நீ ஒன்றே ஆதாரம்!



அன்னை உன்னை எந்தன் நெஞ்சில்
ஏற்றி வைத்தேன் - பொங்கும்
அன்பி னாலே உன்னை தினம்
போற்றி வைத்தேன்

நீ ஒன்றே ஆதாரம்
கண்டு கொண்டேன் - உன்
நினைவை எந்தன் ஆகாரம்
ஆக்கிக் கொண்டேன்

முழுமதி போல் முகத் தழகி
வர வேணும் - வந்து
இருள் நீக்கி ஒளி யமுதம்
தர வேணும்

கா தணிகள் அசைந் தாட
வர வேணும் - வந்துன்
கடைக் கண்ணின் பார்வை கொஞ்சம்
தர வேணும்

வளை குலுங்க வஞ்சி இங்கு
வர வேணும் - வந்து
வளைக்கும் வினை களைந்து அருள்
தர வேணும்

காற் சதங்கை கிணு கிணுக்க
வர வேணும் - கண்ணில்
நீர் பெருக நிறைந்த அன்பு
தர வேணும்


--கவிநயா

Tuesday, August 24, 2010

நீ இருந்தால் போதும்!



அம்மா உன்னை நினைத்தாலே
ஆறுதலாய் இருக்குதடி
சும்மா உன்பேர் சொன்னாலும்
சுமையெல்லாம் இறங்குதடி

கற்பனையில் கண்டாலும்
கனிந்துமனம் மலருதடி
பொற்பதங்கள் பணிந்தபின்னே
பாரமெல்லாம் கரையுதடி

செய்யும்செயல் பலனெல்லாம்
உன்னிடத்தில் தந்துவிட்டேன்
உய்யும்உடல் உயிர்பொருளை
உனதென்று அளித்துவிட்டேன்

உனக்கென்று தருவதற்கு
வேறெதுவும் இல்லையடி
எனக்கென்று இன்றும்என்றும்
நீஇருந்தால் போதுமடி!


--கவிநயா

Monday, August 16, 2010

சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே!



சிந்தையில் நின்றிடுவாய் சிவகாமியே
முந்தைவினை ஓய அபிராமியே

(சிந்தையில்)

பரிபுரை பனிமொழி திரிபுரை தீங்கனி
எரிபுரை மேனியற்கு ஒருபுறம் அருள்சகி

(சிந்தையில்)

புவனங்கள் யாவையும் பூத்திட்ட பயிரவி
சலனங்கள் தீர்த்தெம்மை காத்திடும் சாம்பவி
ஜகமெல்லாம் நகக்கண்ணில் அடக்கிய மாலினி
உளமெல்லாம் புளகிக்க பணிந்திட்டோம் வாழிநீ

(சிந்தையில்)


--கவிநயா

Wednesday, August 11, 2010

மலயத்துவசன் மகள்

அனைவருக்கும் ஆடிப் பூரத் திருநாள் வாழ்த்துகள்!



பார்க்கும் திசையி லெல்லாம் பைங்கிளி உன்முகமே
கேட்கும் ஒலியிலெல்லாம் கோகிலம் உன்பெயரே
காக்கும் கரங்களெல்லாம் மரகத வளைக்கரமே
மீட்கும் கடலினின்றும் மீனாள்உன் கடைவிழியே!

காஞ்சன மாலைக்கென கனியமுதாய் உதித்தாய்
மாமதுரை மன்னன் மடியினிலே சிரித்தாய்
சேயெனவே வந்து சுவர்க்கசுகம் தந்தாய்
வையகம் போற்றிடவே ஆயகலை களில்தேர்ந்தாய்!

வீரத்தின் விளைநிலமே வேதங்களின் மறைபொருளே
நான்மாடக் கூடல்தன்னில் நலம்பல அருள்பவளே
திக்விஜயம் செய்து திசையெல்லாம் வென்றவளே
சுந்தரனைக் கண்டபின்னே சொக்கியங்கே நின்றவளே!

மதுரைநகர் ஆளவந்த மீனாக்ஷிதேவி போற்றி!
மாந்தர்தமைக் காக்கவந்த மங்கையர்க்கரசி போற்றி!
பச்சைக்கிளி ஏந்துகின்ற பசுங்கிளியின் தாள்கள் போற்றி!
பொற்றாமரைப் பூவேயுன்றன் பொற்பதங்கள் போற்றிபோற்றி!!


--கவிநயா

Thursday, August 5, 2010

அம்மன் பாட்டு 200! வருக! அவள் அருள் பெறுக!



அம்மா.


அன்பின் திருவுருவம். கருணையின் முழுவடிவம்.
அன்போடு எப்போது அழைத்தாலும் அவள் நிச்சயம் வருவாள்.
அதுவும் ஆடி மாதம் அழைத்தால்! உடனடியாக ஓடோடியும் வந்து விடுவாள்! இந்த சிறப்புப் பதிவிற்காக அவளை ஆடி வெள்ளியில் அழைப்பது இன்னும் சிறப்பல்லவா!

அவளுக்கு எல்லாமே பிடிக்கும்…
நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல், முந்திரி மின்னும் வெண் பொங்கல், காரசாரமான புளியோதரை, பால்வெள்ளை தயிரமுது, விதவிதமான பாயசங்கள், சுவைமிகுந்த சுண்டல்கள்,… இவை மட்டுமின்றி, ஏழைக்கேற்ற கூழும், அச்சு வெல்லப் பானகமும் கூட அவளுக்கு பிடிக்கும்.

அவளுக்கு என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியம் இல்லை; எவ்வளவு அன்போடு கொடுக்கிறோம் என்பதே முக்கியம்.

இதோ, இந்த அம்மன் பாடல்கள் வலைப்பூவில் இன்றோடு 200 பூக்கள் பூத்து விட்டன. என்றும் வாடாத பக்திப் பாடல் பூக்கள்.
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வடிவம்; ஒவ்வொரு நிறம்; ஒவ்வொரு மணம். அவள் ஒருவளே வித விதமான தோற்றங்களில் அருள் பாலிப்பதைப் போல.

ஆனால் எல்லாப் பூக்களையுமே அன்பென்ற நாரால்தான் தொடுத்திருக்கிறது. இப்போதும், எத்தனை பூக்கள் தொடுத்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு அன்போடு தொடுத்தோம் என்பதே முக்கியம், என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியதாகிறது.



இந்த 200-வது சிறப்புப் பதிவிற்கென, அவளுக்காக ஒரே மாலையை அம்மன் பாடல் குழுவினர் அனைவரும் சேர்ந்து தொடுத்திருக்கிறோம்.

அதாவது, இங்கே தருகின்ற பாடலை இரண்டிரண்டு பத்திகளாக, VSK என்று அன்புடன் அழைக்கப்படும் டாக்டர் சங்கர் குமார் அண்ணாவும், மாதவிப் பந்தல் கேயாரெஸும், கூடல் குமரனும், மற்றும் கவிநயாவாகிய நானும், எழுதி இருக்கிறோம். யார் யார் எந்த எந்த பத்திகள் எழுதினோம் என்று கண்டுபிடிப்பது உங்கள் சாமர்த்தியம் :)

நம்முடைய ஆஸ்தானப் பாடகி மீனா சங்கரன் அவர்கள் மனமுவந்து பாடித் தந்திருக்கிறார்.

இந்த நல்ல நாளில், அன்னையின் மீதான அன்பும் பக்தியும் அவள் பிள்ளைகளுக்கு பல்கிப் பெருகவும், அவள் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தைகளாக அவர்கள் இருக்கவும், அவளை மனமுருகப் பிரார்த்திக்கிறோம்.





நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே!.....(1)

கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே!.....(2)

பம்பை யொலித்திட சங்கம் முழங்கிட தண்டை குலுங்கிட வருபவளே!
உம்பர்கள் நாடிட உலகமே தேடிட எங்குமிலா தோடி மறைபவளே!
வம்பர்கள் வாடிட அன்பர்கள் ஆடிட ஆனந்த தரிசனம் தருபவளே!
அம்பரம் நடுவினில் பம்பரமாய் நின்று எங்களை யென்றும் காப்பவளே!.....(3)

சங்கரன் பாதியில் தங்கமாய்க் கலந்து கங்கையைக் கூடவே அணைத்தவளே!
சங்கரன் சுதனை மங்கலமாய்த் தந்து அடியவர் வினைகளைக் களைந்தவளே!
சங்கரன் புதல்வனாம் சண்முக நாதனைச் சரவணப் பொய்கையில் சேர்த்தவளே!
சங்கரன் குமரன் சந்ததம் கும்பிடும் அம்பிகையே எமைக் காப்பவளே!.....(4)

மங்கலம் பொங்கிடும் செங்கலசம் என எங்குமே இன்பமே அருள்பவளே
மங்கலக் கமலச் செல்வியாய் மாலவன் மார்பினில் பொலிந்திடும் திருமகளே
செங்கையில் நூலினை ஏந்தியே வேதங்கள் சீர்பெற யாழினில் இசைப்பவளே
மங்கையே நான்முகன் நாவினில் நிலைத்திடும் நாமகளே எமைக் காப்பவளே!.....(5)

இடமென வலமென இருபுறம் இறைவனை என்றுமே இருத்திடும் இளையவளே
இடமென அவனது மேனியில் அமர்ந்து இமையவர் போற்றிட இசைந்தவளே
படர்பொருள் யாவுமாய் பரிதியில் தோன்றி பார்மிசை ஒளியென விளைந்தவளே
உடல்மிசை உயிரென கரங்தெங்கும் பரந்துமே உலகையும் எம்மையும் காப்பவளே!....(6)

அயிகிரி நந்தினி, அகிலம் மகிழ்ந்து இனி, அடியவர்க்கு இனிமை சேர்ப்பவளே!
கிரிவர விந்திய, மலை தனில் வாசினி, வெற்றியின் முரசை ஆர்ப்பவளே!
பகவதி, போது மணிச் சடை நாயகி, மகிஷ மனம் தனில் வேர்ப்பவளே!
வெற்றி உனக்கென, வெற்றி உனக்கென, வேல்தரும் அன்னையே! காப்பவளே!....(7)

மாதொரு பாகனின், பாதி மதி நதி, பாயும் முகம் தனைக் கொண்டவளே!
தீதொரு பாகனாம், எந்தன் பிழை களை, வீயும் அகம் தனைக் கொண்டவளே!
கோகில வாணி, குழல் மொழி பாணி, நூபுரத்தில் மறை நூற்பவளே!
தந்திடு திருவடி, தந்திடு திருவடி, தாயவளே என்னைக் காப்பவளே!.....(8)

காப்பவளே! கதி சேர்ப்பவளே! விதி மாய்ப்பவளே! பதி வாய்ப்பவளே!
தீர்ப்பவளே! துயர் தீர்ப்பவளே! அகம் ஆர்ப்பவளே! முகம் பார்ப்பவளே!
நோற்பவளே! நுதல் வேர்ப்பவளே! சீர் சேர்ப்பவளே! சேய் மீட்பவளே!
ஏற்பவளே! எனை ஏற்பவளே! என் தாயவளே! என் தாய் இவளே!.....(9)

இத்துடன் சங்கர, குமரனும், மீனாள்,
இராகவ சேகரன் இயம்பித் துதித்திடு
இமைய வரம்பியின் இருநூறாம் துதி
அம்மன் பாட்டில் அமைந்தேலோ ரெம்பாவாய்!

***
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!