Monday, June 29, 2020

தித்திக்கும் தேன் நீ


சித்திரப் பூவே சித்திரப் பூவே

தித்திக்கும் தேனே

உன்னை பத்திரமாயென்றன்

நெஞ்சுக்குள்ளே நான்

பூட்டி வைத்தேனே, தேனே, தேனே

(சித்திரப் பூவே)

 

உள்ளத்தில் பூவாசம் உன்னாலே, அது

எண்ணத்திலே வீசும் தன்னாலே

பள்ளத்தில் விழுந்து துவளும் போதும்

பிள்ளை போலக் காக்கும் அன்பாலே

(சித்திரப் பூவே)

 

தாயின் கர்ப்பத்திலே பிள்ளை உண்டு, இங்கே

பிள்ளை கர்ப்பத்திலே தாயும் உண்டு

உள்ளம் என்னும் கர்ப்பக் கிருகத்திலே

நாளும் உன்னைத் தானே பூசிக்கின்றேன்

(சித்திரப் பூவே)



--கவிநயா


Tuesday, June 23, 2020

ஆதி சக்தியே! அன்புத் தாயே!


மதுரையிலே நீ மீனாக்ஷி

காஞ்சியிலே நீ காமாக்ஷி

தில்லையில் உன்பேர் சிவகாமி

நெல்லையில் உன்பேர் காந்திமதி

(மதுரையிலே)

 

புதுக்கோட்டையிலே புவனேஸ்வரி நீ

திருமியச்சூரில் லலிதாம்பா

திருவேற்காட்டில் கருமாரி

திருக்கடவூரில் அபிராமி

(மதுரையிலே)

 

கிருஷ்ணா நதியின் தீரத்திலே

கனக துர்க்கையாய் வீற்றிருப்பாய்

கங்கைக் கரையின் ஓரத்திலே

காளி தேவியாய்க் கருணை செய்வாய்

 

நாயகி நீயே நான்முகி நீயே 

   நாராயணியும் நீயே

காளியும் நீயே நீலியும் நீயே 

   கருணையின் வடிவம் நீயே

சாம்பவி நீயே சங்கரி நீயே 

   சக்ரதாரியும் நீயே

ஆதியும் நீயே அந்தமும் நீயே 

   அன்பு வடிவான தாயே

(மதுரையிலே)



---கவிநயா


Tuesday, June 16, 2020

நின்னைச் சரணடைந்தேன்

வணக்கம். ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு என் சொந்தப் பாடல் இல்லாமல், எனக்குப் பிடித்த பாரதியார் பாடல்களில் ஒன்று:



நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
(நின்னை)

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் 
தின்னத் தகாதென்று
(நின்னை)

மிடிமையும், அச்சமும், மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன 
கொன்றவை போக்கென்று
(நின்னை)

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து 
நிறைவு பெறும் வண்ணம்
(நின்னை)

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
நல்லவை, தீயவை, நாமறியோம், நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட,
நல்லவை நாட்டுக, தீயவை ஓட்டுக்
(நின்னை)


அன்புடன்
கவிநயா

Monday, June 8, 2020

திரு நாள் என்றோ?



உனைக் காணும் நாள் என்றோ

தினம் ஏங்கினேன்

உன்றன் திருப்பதம் தானே

தினம் நாடினேன்

 

கணக்கில்லாக் கருவேறிப்

பிறந்தேனம்மா

இப்பிறப்பிலேனும் உன்னைத்

தொழுதேனம்மா

 

சிறுபிள்ளை செய்பிழைகள்

பொருட்டாகுமோ?

உலகேழும் (உன்) கடைப் பார்வைக்

கீடாகுமோ?

 

திருமுகம் நான் காண நீயும்

வரும் நாளென்றோ?

(நான்) உன் திருப்பாத மலர் சூடும்

திரு நாளென்றோ?



--கவிநயா


Monday, June 1, 2020

தூது செல், நிலவே


சன்னலுக்கு நடுவினில் வந்த நிலவே

உன்னிடத்தில் ஒன்று நான் சொல்ல வேண்டும், என்

அன்னையிடம் நீதான் தூது செல்ல வேண்டும்

(சன்னலுக்கு)

 

உன்றன் முகம் காணுகையில் செல்ல மதியே, என்றன்

அன்னை முகமே தோணும் சொல்லு மதியே

சின்னப் பிறை பார்க்கும் போதும் செல்ல மதியே, என்றன்

அன்னை முடிப் பிறை தோணும் சொல்லு மதியே

(சன்னலுக்கு)

 

சித்திரம் போல் நீ சிரித்தால் செல்ல மதியே, என்றன்

அன்னை சிரிப்பெழில் தோணும் செல்ல மதியே

நித்திலம் போல் நீ ஜொலிக்க செல்ல மதியே, அவள்

மூக்குத்தியின் ஒளி தோணும்  செல்ல மதியே

(சன்னலுக்கு)

 

காணுகின்ற திசை தோறும் செல்ல மதியே

தோணுவது அவள் முகம் சொல்லு மதியே

கூனற் பிறை மாதிடத்தில் செல்ல மதியே

வேகங் கொண்டு வரச் சொல்லிச் சொல்லு மதியே

(சன்னலுக்கு)



--கவிநயா