Monday, March 25, 2019

சுவாசக் காற்று



எத்தனை துன்பங்கள் வந்தாலும் உன்
பதமே எந்தன் கதியாகும்
எத்தனை சோதனை வந்தாலும் உன்முகமே
மனதில் நிலையாகும்
(எத்தனை)

உனையே தினமும் நினைந்திடவும், உன்
புகழே தினமும் நவின்றிடவும்
உன்னருள் தந்தாய் நீயம்மா
பிறகென்னை மறந்ததும் ஏனம்மா?
(எத்தனை)

நீயே கருணையின் வடிவன்றொ?
கடலும் அளவினில் சிறிதன்றோ?
உன் நினைவே என் தாலாட்டு, உன்
பெயரே எந்தன் சுவாசக் காற்று
(எத்தனை)


--கவிநயா

Monday, March 18, 2019

வரவேண்டும் சிவகாமி



அம்மா, எனை ஆளும் அபிராமி
உன்பாலே எனை ஈந்தேன் சிவகாமி
(அம்மா)

அண்டமெல்லாம் படைத்த அற்புதமே
உனையன்றி எவரெனக்கு அடைக்கலமே
(அம்மா)

அம்மா என உனைத்தான் அனுதினமும் அழைத்தேன்
அன்றாடம் உன் பதமே கதியெனவே துதித்தேன்
மன்றாடும் பிள்ளைக் கிரங்க ஏன் இன்னும் தாமதமோ?
கன்றின் கதறல் கேட்டும் வாராவிட்டால் தகுமோ?
(அம்மா)


--கவிநயா

Tuesday, March 12, 2019

சிக்கெனப் பிடிக்க வேண்டும்



சிக்கென உனைப் பிடிக்க அருள்வாயே, எந்தன்
சிந்தையிலே தங்க வருவாயே
(சிக்கென)

பித்தனின் இடப்புறம் அமர்ந்தவளே, அவன்
சித்தமெல்லாம் நிறைந்து கலந்தவளே
(சிக்கென)

பரமன் விடம் உண்டான், பதறி விட்டாய், உந்தன்
கரத்தால் கண்டத்துடன் நிறுத்தி வைத்தாய்
மும்மலம் என்னும் விடம் எனைத் தாக்க, நீ
என்று வந்து நிறுத்திடுவாய் எனைக் காக்க?
(சிக்கென)



--கவிநயா

Tuesday, March 5, 2019

சிவகாமி...அபிராமி...



தில்லை நாதனுடன் திகழ்ந்திடும் சிவகாமி
திருக்கடவூரினிலே அவள் பெயர் அபிராமி
(தில்லை)

தத்தோம் தத்தோம் என்று நடமிடும் சிவசாமி
தந்தோம் தந்தோம் என்று அவனுடன் அருள்வாமி
(தில்லை)

மலயத்துவசன் மகள் மதுரையில் மீனாக்ஷி
கடைவிழியால் காப்பாள் காஞ்சியின் காமாக்ஷி
கதிமோக்ஷம் தருவாள் காசி விசாலாக்ஷி
கள்ளமில்லா உள்ளங்களில் அனுதினம் அவள் ஆட்சி
(தில்லை)


--கவிநயா