Monday, September 29, 2008
துர்கா தேவி சரணம்!
துர்க்கை அம்மன் மீது சுசீலாம்மா பாடிய இந்த பாடலை அறியாதவர்கள் இருப்பது அரிது. அப்படி இருந்த போதிலும், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதானே?
ஒலி வடிவம் இங்கே...
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்(ஜெய)
துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்களம் கூடும்(ஜெய )
பொற் கரங்கள் பதினெட்டும்
நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும்
வெற்றி பாதையை காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மை காப்பவளே (ஜெய)
சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் ஏந்தி நிற்பாள் அம்மாதா...
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கண்ணியும் அவளே (ஜெய..)
***
அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/indianimages/832115886/in/set-72157600860832813/
Sunday, September 28, 2008
"தேவி திருக்கதை!" -- 1
[ நவராத்திரி தொடங்கிவிட்டது. ஒன்பது இரவுகள் ஒரு பகல் இனிக் கொண்டாட்டம்தான் !இந்தக் காலத்தில் தேவி மஹாத்மியம் என்னும் திருக்கதையைப் படித்தலும், கேட்டலும் முறையாகப் பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
இதையொட்டி, நூலில் சொல்லப்பட்டிருக்கும் கதையை என் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
அனைவருக்கும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் அருள் குறையின்றிக் கிடைக்க வேண்டி, இதைத் துவங்குகிறேன்.]
--காப்பு--
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த
உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன்
என்னவிங்கு சொல்வதுவோ எப்படித்தான் பாடிடவோ
என்னருமைத் தேவியிவள் செய்திருந்த அற்புதத்தை
அறியாதான் பாடவந்தேன் அம்மை திருக்கதையை
தெரியாதான் பாட வந்தேன் தேவி திருக்கதையை
குற்றமிங்கு கொள்ளாமல் குணம்மட்டும் கொண்டிருக்க
ஏற்றியும்மை வேண்டுகிறேன் கணபதியின் துணைகொண்டு
ஆனைமுகத்தோனை அகிலமெலாம் காப்பவனை
பானைவயிற்றோனை பக்தர்களைக் காப்பவனை
மூஷிகத்தில் வீற்றிருந்து மோனநிலை அருள்வோனை
வந்தித்துத் தொடங்கிடுவேன் கலைவாணி அருள்வாயே!
வெண்டாமரை வீற்றிருக்கும் வாணி சரஸ்வதியே
அண்டிவந்த பக்தருக்கு அருள்ஞானம் தருபவளே
சொற்குற்றம் பொருட்குற்றம் ஏதுமிங்கு வாராது
தேவிதிருக்கதையைத் திருத்தமாய் அருளிடம்மா!
குருவுக்கும் குருவாக என்னுள்ளில் இருப்பவனாம்
என்னப்பன் முருகனையும் இக்கணத்தில் துதித்திடுவேன்!
ஏறுமயில் ஏறிவந்து என்னுள்ளம் வீற்றிருப்போன்
ஆறுமுகசுவாமி நின்றன் அடிபணிந்து தொடங்குகிறேன்!
பாடலிலே பழுதின்றி பத்திரமாய்க் காத்திடுவாய்
நாடிவரும் என்நாவில் நல்லதமிழ் தந்திடுவாய்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!********************************************************
[தொடரும்]
Monday, September 22, 2008
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
காட்டுக்குள்ளே செடியாகி
தழைத்து வளர்ந்திருப்பாள்
கொடியாகி மரத்தின் இடையை
சுற்றிக் கட்டிக்கொண் டிருப்பாள்
சின்னச் சிட்டுக் குருவியாகி
கூட்டுக்குள்ளே ஒளிந்திருப்பாள்
காட்டரசன் சிங்கமாகி
கர்ஜித்து மகிழ்ந்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
காட்டுக்குள்ளே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
மலைமீது மரமாகி
வானம் தொட வளர்ந்திருப்பாள்
அசையாத பாறையாகி
படுத்து ஓய் வெடுத்திருப்பாள்
பாறையிலே பசுந்தளிராய்
துளிர்த்து சிரித்திருப்பாள்
சின்னக் குற்றுப் புதராகி
குனிந்து நிலம் பார்த்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
மலைமேலே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
கடல்மீது அலையாகி
துள்ளிக் குதித்திருப்பாள்
நீர் உவர்க்க உப்பாகி
காதலன்போல் கலந்திருப்பாள்
சின்னச் சின்ன மீனாகி
நீந்திக் களித்திருப்பாள்
கரையினிலே மணலாகி
பார்த்து ரசித்திருப்பாள் -
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
கடல்பக்கம் அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?
--கவிநயா
Monday, September 15, 2008
பூமணம் உனக்கின்னும் வீசலையோ?
ஏற்றுக் கொள்வாய் நீயம்மா
உந்தன் அன்புத் தளையினிலே
கட்டி வைப்பாய் எனையம்மா
ஆலயந் தோறும் குடி
இருப்பவளே - உன்னை
அண்டிய பேருக்கு
அருள்பவளே
பாலையைப் போலும் இந்த
உலகை விட்டு - பசும்
சோலையாம் உன்னடிகள்
தேடி வந்தேன் அம்மா
(உன்னடிமை)
உள்ளத்தில் உனக்கோர்
கோவில் வைத்தேன் - அம்மா
உனக்கென அதில்அன்பு
பூ வளர்த்தேன்
பூமணம் உனக் கின்னும்
வீசலையோ - எந்தன்
பாமணம் உன்னை யின்னும்
எட்டலயோ?
--கவிநயா
Monday, September 8, 2008
வேண்டுவது ஏதுமில்லை அம்மா...!
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உந்தன்திரு வடிகளிலே
அகலாத அன்பையன்றி
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
வெண்தா மரையின் மேலே
வீற்றிருக்கும் வெண் மதியே
வேண்டும் வரம் யாவையுமே
அள்ளித் தருவாய் என்றாலும்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
செந்தா மரையின் மேலே
சிரிக்கின்ற பெண் மயிலே
அன்னையாக நீ இருந்து
அன்பை அள்ளித் தருகையிலே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
சிம்மத்தின் மீ தமர்ந்து
சூரியனாய் ஜொலிப்ப வளே
சிந்தையி லே நிறைந்து
செந்தேனாய் இனிப் பவளே
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உன்னிடத்தில்
வேண்டுவது ஏதுமில்லை அம்மா
உந்தன்திரு வடிகளிலே
அகலாத அன்பையன்றி
உன்னிடத்தில் வேண்டுவது ஏதுமில்லை…!
--கவிநயா
Tuesday, September 2, 2008
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!
சமயபுரத்து நாயகியே சமயத்தில் காக்கும் நாரணியே!
காரணியே பவ தாரணியே அன்னபூரணியே!
வேப்பஞ்சேலை உடுத்திய பேருக்கு காப்பாய் நிற்கும் தயவல்லவோ?!
உரியவர்கருளும் பெரியபாளையத் திருநகர் வாழும் தாயல்லவோ?!
கேட்டை களையும் கோட்டை மாரியாய் சேலத்தில் வளரும் சுடரல்லவோ?!
பால் குடம் பொங்கல் படைப்பவர்க்குதவும் கோலவிழி அம்மன் அவளல்லவோ?! (சமயபுரத்து)
ஆடித் தேர் கொண்டு அழகாய் வலம் வரும் வேற்காடமர்ந்த அருளல்லவோ?!
ஆலயம் மன்ன திருப்பெயர் விளங்க அருமறை பாடும் பொருளல்லவோ?!
தருமத்தைக் காப்பாள் துயர்களைத் தீர்ப்பாள் துர்க்கை பவானி அவளல்லவோ?!
கருமத்தி நீக்கி கவலையைப் போக்கி கை கொடுக்கும் குளிர் நிழலல்லவோ?!
சிம்ம வாஹினி! ஜகன் மோகினி! தர்ம ரூபினி! கல்யாணி!
கமல வாசினி! மந்தஹாசினி! கால பயங்கரி! காமாக்ஷி!
மாலினி சூலினி ஜனனி ஜனனி சங்கரி ஈச்வரி மீனாக்ஷி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி! சமயபுரத்தாளே சாட்சி!
Monday, September 1, 2008
காடென்றால் வேற்காடு!
அதன் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.
வேத நதி மூலமே வேதாந்த ரூபியே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி மதி மீதிலே நாத வடிவாகினை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சௌந்தர்ய லஹரி நீ சுந்தர ஜடாதரி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
எங்கெங்கு காணினும் தேவி உன் ரூபமே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
காடென்றால் வேற்காடு
மரமென்றால் வேப்ப மரம்
ஊரென்றால் கொல்லூரு
உறவெல்லாம் உன்னோடு
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
மாங்காட்டு மீனாக்ஷி
மதுரையிலே மகமாயி
காஞ்சியிலே கருமாரி
தில்லையிலே கோலவிழி
சமயபுர காமாக்ஷி
மயிலையிலே ஸ்ரீகாளி
எப்படி நான் அழைத்தால் என்ன
நீதாண்டி என் தாயி
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
சூலமேந்தி ஆடுகின்ற மாரியம்மா
காலமெல்லாம் காவலாக வாடியம்மா
சடையாண்டி கோபிப்பான்
முருகனுக்கும் கோபம் வரும்
கணபதிக்கோ பிடிவாதம்
மாயவனோ பாராமுகம்
நாளெல்லாம் சோதனையோ
தாயுன்னை நோகவிடும்
வாடியம்மா வாவா உந்தன்
நிம்மதிக்கே பூலோகம்
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்
பரமசிவன் மேனியிலே
நாகரூபம் ஆனவளே
வேற்காட்டுப் புற்றினிலே
படமெடுத்து நின்றவளே
குழந்தையம்மா நான் இங்கே
பாலூட்ட வருகின்றேன்
மகுடி ஒலி போலே எந்தன்
உள்மூச்சை விடுகின்றேன்
சரணம் சரணம் தாயே சரணம்
வரணும் வரணும் அருளே தரணும்!