Monday, February 24, 2020

சொத்தும் சொந்தமும்


சந்ததமும் உன்றன் புகழ் பாடுகிறேனே, என்றன்
வெந்தமனம் குளிர வைக்கும் சந்தனம் நீயே
(சந்ததமும்)

கஞ்ச மலர்ப் பாதம், அதை நெஞ்சில் வைத்தால் போதும்
விஞ்சி வளரும் வல்வினைகள் யாவும் பயந்தோடும்
(சந்ததமும்)

மத்திடையே ததியெனவே உழலும் வாழ்விதில்
சொத்தெனவே வந்த என்றன் சொந்தம் நீயன்றோ?
வித்துமாகி விளைவுமாகி நின்றவளே தாயே, பெரும்
பொக்கிஷமாய் என்னுயிரில் கலந்து நின்றாய் நீயே
(சந்ததமும்)



--கவிநயா

Monday, February 17, 2020

உன்னை எண்ணி...



உன்னை எண்ணும் போது
இந்த உலகை மறக்கிறேன்
உந்தன் பாதம் பற்றி என்றன்
கவலை கடக்கிறேன்
(உன்னை)

தாமரைப் பூம் பாதம்
அதைப் பற்றிக் கொண்டால் போதும்
பிறவிப் பிணியைத் தீர்ப்பதற்கு
அதுவே மருந்தாகும்
(உன்னை)

கருவிழியால் கண நேரம் என்னைப் பார்க்க வேணும்
சிமிழ் போன்ற நாசி என்றன் திசையை நோக்க வேணும்
முறுவலிக்கும் சிறு இதழ்கள் சற்றே விரிய வேணும்
“கண்ணே உனக்கு நானிருக்கேன்”, என்றே சொல்ல வேணும்
(உன்னை)



--கவிநயா

Monday, February 10, 2020

மறவா நிலை தா!


உனை மறவாத நிலை வேண்டும்
உன் நினைவே என்றும் மனதினில் வேண்டும்
(உனை)

பழவினையால் துன்பக் கடலினில் உழன்றாலும்
உனதருளால் இன்ப வாழ்வினை அடைந்தாலும்
(உனை)

இமயத்திலே பிறந்த உமையவளே, எந்தை
இடத்தினிலே அமர்ந்த மலைமகளே
உதயத்திலே தோன்றும் ஒளியினைப் போலென்றன்
இதயத்திலே வந்து அருளிடுவாயே
(உனை)



--கவிநயா

Monday, February 3, 2020

அபிராமி




சுப்புத்தாத்தா வின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா! வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகேழும் பெற்றவளே அபிராமி
ஒரு தாயே உத்தமியே அருள்வாமி
(உலகேழும்)

உதிக்கின்ற செங்கதிரோன் போலச் சிவந்தவளே
மலர்க்கமலை துதிக்கும் மங்கலையே சிவையே
(உலகேழும்)

பூங்கணையும் கரும்பும் ஏந்திய ஏந்திழையே
துணை நீயே தாயே, நான் தொழும் தெய்வம் நீயே
பாசமும் அங்குசமும் கரங்களில் நீ பிடிக்க
பாசமுடன் உன்னை நான் பிடித்தேன், அருள்வாய்
(உலகேழும்)


--கவிநயா