Monday, November 30, 2015

என் தேனே!

 
அருள் மழை பொழிந்திட வருவாயே
மருள் தரும் இருள் நீக்கி அருள்வாயே
(அருள்)

ஒரு மனதா யுன்னைப் பணிகின்றேன்
இரு விழியால் என்னைப் பாராயோ
(அருள்)

சிறகென உனதன்பைக் கொண்டேனே
உறவெது உனையன்றி என்றேனே
கனவிலும் நனவிலும் என் தேனே
உனை எண்ணிக் களி மிகக் கொண்டேனே
(அருள்)


--கவிநயா 


Monday, November 23, 2015

அம்மா உன் காலடியே...


சுப்பு தாத்தாவுடைய தாயாரின் நினைவு நாளாம்... அம்மாவை நினைத்து அருமையுடன் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா!



அம்மா உன் காலடியே
         நான் வாழும் குடிலாகும்
அம்மா உன் திருநாமம்
        என் னுயிருக் குணவாகும்
அம்மா உனை நம்பி விட்டால்
       குறையெல்லாம் நிறையாகும்
அம்மா உனைப் பணிவதுவே
      பிறவியிதன் பயனாகும்
அம்மா உனை அண்டி வந்தேன்
      அபயம் உந்தன் பதமாகும்
அம்மா உன்னைப் பாடுவதே
     என் வாழ்வின் தொழிலாகும்
அம்மா உனை எண்ணி விட்டால்
    உள்ளம் விரிந்த பூவாகும்
அம்மா நீ பரிந்து விட்டால்
     உலக வாழ்வும் சுகமாகும்


--வியா
 

Monday, November 16, 2015

நின்னைச் சரணடைந்தேன்...




சுப்பு தாத்தா புன்னாக வராளியில் இனிமையாகாப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)


--பாரதி


பி.கு. சும்மா ஒரு மாறுதலுக்காக. உங்களுக்கும் என் பாட்டையே படிச்சு அலுத்துப் போயிருக்குமில்ல? அதோட, இந்தப் பாட்டுக்கு நடனம் அமைக்கிற முயற்சியில் இருக்கறதால, இதுவே மனசுல ஓடிக்கிட்டிருக்கு... :)

Monday, November 9, 2015

காத்திருக்கேன்...

தீபாவாளி கொண்டாட்டத்துக்கிடையிலும் சுப்பு தாத்தா அன்புடன் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!



குஞ்சுக் குருவி என்ன
கூட்டுக்குள்ள விட்டுப்புட்டு
நீ மறஞ்சு போனதென்ன ஞாயமா??

பறக்கவும் ஏலாம
நடக்கவும் ஏலாம
வானம் பாத்துக் காத்திருக்கேன் நானம்மா!

காத்தடிக்கும் தெசையெல்லாம்
அலையுற கொடிபோல
கலையுற எம் மனசப் பாரம்மா

கொடி தாங்கும் மரமாக
மடி தாங்க வருவேன்னு
நொடி எண்ணிக் காத்திருக்கேன் நானம்மா!

தண்ணி விட்டுத் தத்தளிக்கும்
மீனப் போல ஒம் மகளும்
ஒன்ன விட்டுத் தத்தளிப்பது ஞாயமா?

உயிர் துடிக்கும் மீனக் காக்க
ஓடோடி வருவாயின்னு
ஓயாமக் காத்திருக்கேன் நானம்மா!



--கவிநயா 

(சில வருஷங்களுக்கு முன் எழுதிய பாடல்)

Monday, November 2, 2015

உனதருள் வேண்டும்!!



பிரபல ஹிந்தி பாடல் மெட்டில் பாடியிருக்கிறாராம் சுப்பு தாத்தா. எந்தப் பாட்டென்று உங்களுக்குத் தெரிகிறதா? மிக்க நன்றி தாத்தா!



என்னை மறந்து உன்னை நினைக்க உனதருள் வேண்டும்

உன்னை நினைந்து உலகை மறக்க உனதருள் வேண்டும்

(என்னை)



கண்ணை மறந்த இமையும் உண்டோ சொல்வாயே தாயே

உன்னை மறந்து நான் இங்கு வாழும் நிலை நீ தந்தாயே

உயிரே இன்றி உடல் வாழ்ந் திடுமோ சொல்வாயே தாயே

உன்னை மறந்து நான் இங்கு வாழும் நிலை நீ தந்தாயே

(என்னை)



எந்தன் தாயும் அன்புச் சேயும் நீயே என் தாயே

என் சோதரியும் உயிரின் தோழியும் நீயே ஆனாயே

உறவுகளாய் உனைக் கொண்டேன் நானும் அறிவாயோ தாயே

இரவாய்ப் பகலாய் உனையே துதிக்கும் வரமெனக் கருள்வாயே

(என்னை)

--கவிநயா