வெள்ளைப் பட்டாடை உடுத்தி
வெள்ளன்னம் மீதமர்ந்து
நான்முகன் நாயகி வலம் வருவாள் - அவள்
பூ மலர் விழி மலர்ந்து அருள் புரிவாள்
வெள்ளை மலர் அவள் மேடை
வெள்ளை உள்ளம் அவள் வீடு
கள்ளமில்லா உள்ளந்தனில் குடி புகுவாள் – அவள்
கொள்ளை இன்பங்கள் தந்து அருள் புரிவாள்
வீணைதனை மடியேந்தி
ஜப மாலை கரமேந்தி
ஞானத்தின் வடிவாக வீற்றிருப்பாள் – அவள்
அஞ்ஞானந் தன்னை வெல்ல அருள் புரிவாள்
ஆயகலை அனைத்துக்கும்
அரசியென ஆனாலும்
தாயெனவே பரிந்துவந்து அன்பு செய்வாள் – அவள்
தயவுடனே நமக்கு அருள் புரிவாள்
நான்முகனின் நாவில் இருப்பாள்
நான்மறையின் பொருளில் இருப்பாள்
நா ஒலிக்கும் தமிழிலும் அவள் இருப்பாள் – அவள்
நாத வடிவாக எங்கும் நிறைந்திருப்பாள்
--கவிநயா