Monday, July 27, 2015

ஜகம் போற்றும் ஜனனீ!

சுமையெல்லாம் சுகமாகும் உன்னை நினைத்தால்
உமையவளே உன் தாளில் எண்ணம் பதித்தால்
(சுமையெல்லாம்)

ஜகம் போற்றும் ஜனனீ என் அகம் போற்றும் ஜகம் நீ
இக பர சுகமெல்லாம் தரும் சிவ காமினீ
(சுமையெல்லாம்)

நாயேன் எனினும் உன்னை நினைத்து விட்டேன்
நாயகி உன் பாதம் நெஞ்சினில் பதித்து விட்டேன்
சேயே என ஓடி தாயே வர வேண்டும்
மாயை மருள் நீக்கி அருளைத் தர வேண்டும்
(சுமையெல்லாம்)


--கவிநயா 
 

Friday, July 24, 2015

ஆடி வெள்ளி: மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே!

ஆடி முதல் வெள்ளி வணக்கம் = ஆத்தாளுக்கு, அண்டமெல்லாம் பூத்தாளுக்கு!

கவிக்கா என்னை மன்னிக்க, நான் அவசரப்பட்டு முந்திக்கிட்டு இருந்தா..
எட்டிப் பார்த்தேன்.. எந்தப் பதிவும் இல்லையென்பதால் நானே இட்டுவிட்டேன்..

* மாயி என்றால் என்ன?
* மணி மந்திர சேகரி என்றால் என்ன பொருள்?
- யாரேனும் சொல்லி உதவுங்கள்!

”மாரியம்மன் தாலாட்டு” என்னும் நாட்டுப்புறப் பாடலைச் சுருக்கி, ஆக்கிய திரைப்பாடல் இது..படம்: ஆதி பராசக்தி
குரல்: பி. சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்

ஆயி மகமாயி.. ஆயிரம் கண்ணுடையாள்
நீலி திரிசூலி.. நீங்காத பொட்டுடையாள்
சமயபுரத்தாளே.. சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தை விட்டுச் சடுதியிலே வாருமம்மா..

--

மாயி மகமாயி, மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே, ஆத்தா.. என் மாரிமுத்தே

(மாயி)

சிலம்பு பிறந்ததம்மா, சிவலிங்கச் சாலையிலே
பிரம்பு பிறந்ததம்மா, பிச்சாண்டி சன்னிதியில்
உடுக்கை பிறந்ததம்மா, உருத்திராட்ச பூமியிலே
பம்பை பிறந்ததம்மா, பளிங்குமா மண்டபத்தில்

(மாயி)

பரிகாசம் செய்தவரைப் பதைபதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டுவிட்டா, பக்கத்துணை நீ இருப்பே
மேனாட்டுப் பிள்ளையிடம், நீ போட்ட முத்திரையை
நீ பார்த்து மாத்தி வச்சா, நாள் பார்த்து பூசை செய்வான்
(மாயி)

குழந்தை வருந்துவது, கோவிலுக்குக் கேட்கலையோ?
மைந்தன் வருந்துவது, மாளிகைக்குக் கேட்கலையோ?
ஏழைக் குழந்தையம்மா.. எடுத்தோர்க்குப் பாலனம்மா
உன் தாளைப் பணிந்து விட்டால், தயவுடனே காருமம்மா!


கத்தி போல் வேப்பிலையாம்.. காளியம்மன் மருத்துவராம்
ஈட்டி போல் வேப்பிலையாம்.. ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்.. விந்தைதனை யார் அறிவார்

ஆயா மனமிரங்கு - என் ஆத்தா மனமிரங்கு
அன்னையே நீ இரங்கு என் அம்மையே நீ இறங்கு!

Monday, July 20, 2015

ஆடி மாசம் வந்தது!


ஆடி மாசம் வந்ததடி
ஆத்தா நெனப்பு தந்ததடி
(ஆடி)

கூழு காச்சிக் குடுத்தாலும்
குளிர்ந்திடுவா மகமாயி
வேப்பிலையின் நுனியினிலும்
குடியிருக்கும் கருமாரி
(ஆடி)

கோடிக் கோடி பக்தரெல்லாம்
குமரி அவளைப் பாடிடுவார்
ஓடு என்று வினை விரட்டும்
தேவியைக் கொண் டாடிடுவார்
(ஆடி)

நம்பி வரும் பிள்ளைகளை
தாங்கிக் கொள்ளும் தாயவளாம்
வெம்பி வருந்தும் உள்ளங்களில்
சந்தனமாக் குளிர்பவளாம்
(ஆடி)


--கவிநயா

 

Monday, July 13, 2015

அஞ்சலென அருள வருவாய்!
தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியது...மிக்க நன்றி தாத்தா!


என் மன  ஊஞ்சலிலே உன்னை வைத்தேன்

உந்தன் திருப் பாதங்களில் என்னை வைத்தேன்

(என்)நிலையில்லாத நெஞ்சம் நித்தியக் கூத்தாட

விலையில்லா உனை மறந்து வேதனையில் வாட

சிலை கொண்ட கரத்தாளே சிக்கென உனைப் பிடித்தேன்

சிந்தையிலே உன்னைச் சிக்க வைத்தேன்

(என்)சஞ்சலம் மிகக் கொண்ட நெஞ்சகந்தனைக் கொண்டேன்

அஞ்சுகம் உன்பதமே தஞ்சம் எனக் கண்டேன்

குஞ்சித பாதனவன் கொஞ்சிடும் பைங்கிளியே

அஞ்சலென அருள வருவாயே

(என்)


--கவிநயா 

Monday, July 6, 2015

உன்னன்பால்...உன்னன்பால் உயிர் வாழுகிறேன்

உன்னருளால் கவி பாடுகிறேன், உன்

நினைவைக் காற்றாய் சுவாசிக்கிறேன்

நீ என் முன் வர யாசிக்கிறேன்!தேவரும் முனிவரும் போற்றிடுவார்

தேவியுன் பதம் பணிந்தேற்றிடுவார்

பேதையும் உன்னடி போற்றுகின்றேன்

புன்மொழியாயினும் ஏற்றருள்வாய்!கரமலரினிலே கரும்பிருக்கும்

ஐம்மலர்கள் மறு கரமிருக்கும்

அங்குச பாசமும் உடனிருக்கும்

திருவடி அருள்நிழல் தந்திருக்கும்!நிறைமதி வதனத்தில் திலகமுமே

கதிரவனெனவே ஒளிர்ந்திருக்கும்

சிறு இதழ் மலரும் புன்னகையோ

கவலை ஏன் என மொழிந்திருக்கும்!காதணி அசைந்து ஆமென்கும்

காற்சிலம்பொலித்து ஓமென்கும்

அசையும் அசையாப் பொருள் யாவும்

அன்னையுன் அருளில் திளைத்திருக்கும்!நான்மறை போற்றும் நாயகியே

நான்முகியே ஜகன் மோகினியே

நாராயணியே சிவ சக்தி

நம்பியவர்க் கருள் நவ சக்தி!


--கவிநயா