அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!
சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் ஆனந்தமாகப் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
தீபம் ஆகி எங்கள் நெஞ்சில் திகழ்ந்திடுவாய்
அம்மே!
தாபம் நீக்கி தாயாய் எங்களைத்
தேற்றிடுவாய் அம்மே!
கோபம் இன்றிக் குழந்தையாகக் குழைந்திடுவாய்
அம்மே!
பாபம் போக்கி பதங்களில் எம்மைச்
சேர்த்துக்கொள்வாய் அம்மே!
தீபம் ஆகி எம் இல்லங்களில் திகழ்ந்திடுவாய்
அம்மே!
தீய இருளை விரட்டி நல்லொளி தந்திடுவாய்
அம்மே!
தீயாய் வந்து தீமை யாவும் பொசுக்கிடுவாய்
அம்மே!
தீண்டும் துன்பம் எல்லாம் நீக்கி
சுகந்தருவாய் அம்மே!
தீபம் ஆகி உலகெங்கிலும் ஒளி யூட்டிடுவாய்
அம்மே!
நீபம் அடர்ந்த வனத்தி னுள்ளே
குடியிருக்கும் அம்மே!
இடபம் ஏறி பதியுட னிங்கே வந்திடுவாய்
அம்மே!
இன்பம் எல்லாம் நீயேயாக அருளிடுவாய்
அம்மே!
--கவிநயா