முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே
முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கிணை வாழ்வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களும் முறையே நடப்பதால் தான் உலக இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்னையே. இந்த மூன்று தொழில்களையும் குறையின்றி செய்யும் வல்லமை உனக்கு உண்டு. ஆனால் அடியவர்களுக்கு அருள் கொடுப்பதே முதன்மைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்பதால் முப்பெரும் தேவர்களைப் படைத்து அவர்களிடம் இம்மூன்று தொழில்களையும் ஒப்படைத்தாய் போலும். அவர்கள் அவரவர் தொழில்களை குறையின்றி செவ்வனே செய்ய முன்னின்று அருள்கின்றாய் நீ. முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்.
பல்லாயிரம் கோடி அண்டங்கள் அனைத்திற்கும் விதையாக நின்றவளே. அவ்வித்திலிருந்து தோன்றிய அப்பல்லாயிரம் கோடி அண்டங்கள் அனைத்துமாக விளங்குபவளே. வித்தே விளைவே சரணம் சரணம்.
உன் அருளினைப் பெற நான் உன் அடி வணங்க வேண்டும். உன் அடிகளை வணங்க நான் உன் அருளினைப் பெற வேண்டும். உன் அடிகளை வணங்க உன் அருளே வித்தாக நிற்கின்றது. உன் அடிகளை வணங்கியதால் வரும் உனதருளே விளைவாக நிற்கின்றது. வித்தே விளைவே சரணம் சரணம்.
உலகத்தில் என்றும் நிலையாக நிற்கும் அறிவின் எல்லையே. அவ்வறிவின் தொகுப்பான வேதங்களின் எல்லையே. அவ்வேதங்களின் எல்லையாம் வேதாந்தங்களில் என்றும் நிலையாக வசிப்பவளே. வேதாந்த நிவாசினியே சரணம்.
உன்னையே தஞ்சம் என்று அடைந்தேன் அம்மா. வேறு தஞ்சம் எதுவும் இல்லாத நான் உன்னிடம் தத்துப்பிள்ளையாக வந்தேன் அம்மா. தத்து ஏறிய நான் தனயன்; தாய் நீ.
மீண்டும் பிறப்பு. மீண்டும் இறப்பு. மீண்டும் பிறப்பிற்காகத் தாய் வயிற்றில் வசிப்பு. இந்தச் சுழற்சியிலிருந்து நீங்கி என்றைக்கும் சாகாமல் உனதருளே சரணம் என்று வாழும் வரம் தருவாய். சாகாத வரம் தரவே வருவாய்.
மத்தில் அகப்பட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சுழலும் தயிரைப் போன்ற வாழ்வினை நான் அடைய விரும்பவில்லை. என்றும் நிலையான உன் திருவடி நிழலைத் தந்தருள்வாய். மத்து ஏறு ததிக்கு (தயிருக்கு) இணை வாழ்வடையேன்.
தாயே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.
4. பவளம்
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
சிற்றஞ்சிறுகாலையும் அந்திமாலையும் அனைவருக்கும் பிடிக்கும். அந்த அந்தி மயங்கிய பொழுதில் தெரியும் வானம் என்னும் கூரை அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை. கூரையை மேடை ஆக்கும் திறன் அன்னைக்கு மட்டுமே உண்டு. அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை.
மிகுந்த வளம் பொருந்தியது இந்தப் பூமி. இந்தப் பூமியில் வாழ்பவர்களின் சிந்தைகளை எல்லாம் கொள்ளைக் கொள்ளும் அழகு பொருந்தியது. அவர்களுக்கு தேன் காடாக இருக்கும் வளமும் அழகும் பொருந்தியது. இந்தப் புவியை செய்தவள் யாரோ? சிந்தை நிரம்ப வளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ? வேறு யார்? நம் அன்னை தான்.
என் தந்தையாம் சிவபெருமானின் இடப்பாகத்திலும் அவருடைய மனத்திலும் அகலகில்லேன் சிறிது நேரமும் என்று நீங்காது நிலைத்திருப்பாள். எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்.
தன்னை எண்ணும் எண்ணம் இருப்பவர்களுக்கு எல்லாம் அருள் செய்யும் உறுதி உடையவள் நம் அன்னை. எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் மிகுந்தாள்.
மந்திரங்கள் நிறைந்துள்ள வேதங்களின் உருவாகவும் அம்மந்திரங்களின் பொருளாகவும் இருப்பவள் நம் அன்னை. மந்திர வேத மயப் பொருள் ஆவாள்.
தாயே. லலிதாம்பிகையே. உனக்கே வெற்றி உண்டாகட்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.