உபசாரம் - பாகம் 2 (முன்பு செளந்தர்யலஹரி வலைப்பூவின் நிறைவில் வந்தவை!)
முதல் பகுதி இங்கே!
தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!.
11. தைலம்
ஏதம்பக தைலமம்ப விவிதை: புஷ்பைர் முஹுர் வாஸிதம்ந்யஸ்தம் ரத்னமயே ஸுவர்ண சஷகேப்ருங்பைர் ப்ரமபிதர் விரதம் !ஸாநநந்தம் சுரஸுந்தரீ ப்ரபிதோஹஸ்தைச் த்ருதம் தேமபாகேசேஷுப்ரமரப்மேஷு ஸகலேஷ்வங்கேஷு சாலிப்பதே !!
ரத்னமிழைத்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருப்பதும், வண்டுகளால் சூழப்பட்டதும், வாசனையுள்ளதுமான தைலத்தை உங்கள் உடம்பிலும், கூந்தலிலும் பூசிடுங்கள் தாயே!
12. வாஸனைப்பொடி ஸ்நானம்
மாத:குங்கும பங்கநிர்மிதமிதம் தேஹே தவோத் வர்த்தனம்பக்த்யாஹம் கலயாமி ஹேமரஜஸா ஸ்ம்மீச்ரிதம் கேஸரை: !கேசாநாமல கைர்விசோத்ய விசதான் கஸ்தூரி கோரஞ்சிதை:ஸ்நானம் தே நவரத்னகும்ப ஸஹிதை ஸம்வ ஸீதேஷ்ணோதகை !!குங்குமப் பூ, மகிழம்பூ முதலிய வாஸனைப் பொடிகளை உம் உடம்பிற்கு அர்ப்பணம் செய்கிறேன். உங்கள் கூந்தலை சிக்கெடுத்து வாரி, ரத்ன கலசங்களில் வைக்கப்பட்ட வெந்நீரால் ஸானம் செய்விக்கிறேன்.
மேலே இருக்கும் இரு உபசராங்களுக்கான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!
கார்முகிலின் நிறங்கொண்ட கூந்தலிலே தைலமிட்டுதேன்மொழியாள் தேனினிய தேகத்திலும் தேய்த்துவிட்டுவாசம்மிகு பொடியெடுத்து வாகாகக் குழைத்துவிட்டுநேசமுடன் நீராட்ட நேரிழையே நீமகிழ்வாய்! (11)பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்தபஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்
சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்
செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்! (12)
13. அபிஷேகம்
ததிதுக்த க்ருதை: ஸமக்ஷினாக:
ஸீதபாசர்கரையா ஸமன்விதை: !
ஸ்நபயாமி தவாஹ மாதராத்
ஜனனித்வாம் புநர்ஷ்ண வாரிபி: !!
தயிர், பால், நெய், தேன், வெள்ளைச் சர்க்கரை முதலியவைகளால் உமக்கு அபிஷேகம் செய்து, மறுபடியும் வெந்நீரால் ஸ்நானம் செய்விக்கிறேன்.
காவிரியில் நீர்முகர்ந்து கதகதப்பாய் சூடேற்றி
மான்விழியாள் மேனியினை மென்மையுடன் நீராட்ட
விடங்கொண்ட கண்டனைதம் வலங்கொண்ட பைங்கிளியே
நிலங்கொண்டு வணங்குகின்றோம் நிரந்தரியே மகிழ்ந்திடுவாய்! (13)
14. ரத்ன ஸ்வர்ணோதக ஸ்நானம்
ஏலாசீரஸுவாஸிதை ஸகுஸுமை: கங்காதி தீர்த்தோதகை:
மாணிக்யாமல மெளதிகாம்ருதரஸை: ஸவர்சை: ஸுவர்ணோதகை: !
மந்த்ரான் வைதீக தாந்த்ரிகான் பரிபடன் ஸானந்த மத்யாதராத்
ஸ்நானம் தேபரிகல்பயாமி ஜனனி ஸ்நேஹாத்வமங்கிகுரு: !!
ஏலக்காய், வெட்டிவேர், வாஸனை புஷ்பங்கள் ஆகியவற்றுடன் கூடிய, கங்காதி தீர்த்தங்கள், மாணிக்கம் ஆகிவை கலந்த சுவர்ண ஜலத்தால் வைதீக, தாந்த்ரீக மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்விக்கிறேன் அம்மா!.
மணம்மிகுந்த மலர்களுடன் குளிர்ச்சிதரும் குருவேரும்குணம்மிகுந்த ஏலமுடன் புனிதகங்கை நீரிலிட்டுமந்திரங்கள் ஜெபித்தபடி சுந்தரிக்கு நீராட்டசந்திரனும் நாணுகின்ற சதுர்முகியே மகிழ்ந்திடுவாய்! (14)15. வஸ்த்ரம்
பாலார்க்க த்யுதி தாடிமீப குஸுமப்ரஸ்பர்த்தி ஸர்வோத்தமம்
மாதஸ்த்வம் பரிதேஹி திவ்யவஸனம் பக்த்யாமயா கல்பிதம் !
முத்தாபிர்க்ரதிதம் ஸுகஞ்சுகமிதம் ஸ்வீக்ருத்ய பீதப்ரபம்
தப்த ஸ்வர்ணஸமானவர்ண மதுலம் ப்ராவர்ண மங்கீ குரு !!
பாலசூர்யனின் வர்ணத்தில், மதுளம்பூ போன்ற சிவந்த பட்டாடைகளை உமக்கு அளிக்கிறேன். முத்துக்கள் சேர்க்கப்பட்ட தங்க நிறமுள்ள ரவிக்கையையும், உருக்கிய தங்கம் போன்ற மேலாடையையும் ஏற்றுக் கொள்வீர்களாக.
16. பாதுகை
நவரத்னமயே மயார்பிதே கமநீய தபநீய பாதுகே !
ஸவிலா ஸமிதம் பதத்வயம் க்ருபயாதேவி தயோர் விதியதாம் !!
நவரத்னமயமான அழகான பாதுகைகளை உமக்கு அளிக்கிறேன், அதில் உமது இருபாதங்களையும் அருள் கூர்ந்து வைத்து , அணியுங்கள் அம்பிகே!
கட்டித்தங்கம் வெட்டிவந்து கச்சிதமாய் நூலெடுத்து
சிப்பிகளைச் சேர்த்துவந்து முத்துகளைக் கோர்த்தெடுத்து
பொன்நிகர்த்த மேனிக்கு பொருத்தமான இரவிக்கை செய்ய
கண்நிகர்த்த காரிகையே களிப்புடனே அணிந்தருள்வாய்! (15)
செக்கர்வானம் அதுபோலே சிவந்திருக்கும் பட்டாடை
சொக்கர்பக்கம் வீற்றிருக்கும் சுந்தரியே உனக்காக
முத்துநவ ரத்தினங்கள் பதித்துவைத்த பாதுகைகள் (16)
வித்தாகி விளைவுமான நித்திலமே உனக்காக!
17. கூந்தல் ஒப்பனை
பஹுபி ரகரூ தூபை: ஸாத்ரம் தூபயித்வா
பகவதி தவ கோசான் கங்கதைர் மார்ஜயித்வா !
ஸுரபிபி ரரவந்தை: சம்பைகச் சார்ச்சயித்வா
ஜடிதி கனக ஸூத்ரை ஜூடயன் வேஷ்டயாமி !!
அகிற் புகையால் தூபங்காட்டி, கூந்தலை வாரி முடித்து, தாமரை, சம்பக மலர்களால் அர்ச்சித்து, ஸ்வர்ண சூத்திரத்தால் பின்னிக் கட்டிவிடுகிறேனம்மா.
காற்றோடு மணம்பரப்பும் மலர்களெல்லாம் ஏங்குகின்ற
மாற்றேதும் இல்லாத மங்கையுந்தன் கூந்தலுக்கு
அகிலோடு சாம்பிராணி புகைபோட்டு மணம்சேர்க்க
புவியோரைக் காக்கவந்த பூவிழியே நீமகிழ்வாய்! (17)
18. கண்களுக்கு மையிடல்
ஸெளவிராஞ்ஜன மிதமம்ப சக்ஷஷோஸ்தே
விந்யஸ்தம் கனக சலாகயா மயாயத் !
தந்நுனம் மலினமபி த்வதக்ஷி ஸங்காத்
ப்ரும்மேந்த்ராத்வ பிஷைணீய தாமியாய !!
அம்மா!, இந்த ஸெளவீராஞ்சன மையை ஸ்வர்ணக் குச்சியால் உமது கண்களுக்கு தீட்டியது கருப்பானாலும், இது உமது கண்களில் சேர்க்கையால் பிரம்மாதி தேவர்களால் விரும்பப்படுவதாகவே இருக்கிறது.
அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்
நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட
கரந்தொட்டு பொற்கம்பி முனையினிலே மையெடுத்து
முகந்தொட்டு வாள்விழிக்கு மீன்போலே எழுதிவிட (18)
19. ஆபரணம்
மஞ்ஜீரே பதயோர் நிதாய ருசிராம்வின்யஸ்ய காஞ்சீம் கடெள
முக்தாஹார முரோஜயோ ரதுபமாம் நக்ஷத்ர மாலாம் கலே !
கோயூராணி புஜேஷா ரத்னவலயச் ரேணீம் கரேஷுக்ரமாத்
தாடங்கே தவகர்ணயோர்விததே சீர்ஷேச சூடாமணிம் !!
திருவடிகளில் பாதரசமும், இடுப்பில் ஒட்டியாணத்தையும், மார்பினில் முத்தாரமும், கழுத்துக்கு அட்டிகையும், தோள்களில் வாகுவலயங்களும், கைகளில் ரத்ன வளையல்களும், காதுகளில் அழகிய தோடுகளும்,தலையில் சூடாமணீயையும் அணிவிக்கிறேனம்மா.
இல்லாத கொடியிடையில் ஒய்யார ஒட்டியாணம்
இடைதாங்கும் மார்பகத்தில் தவழ்ந்திருக்க முத்தாரம்
சங்குக் கழுத்திற்கு சரியான அட்டிகையும்
வாழைத்தண்டு தோள்களுக்கு வாகு வலயங்களும்
இரட்சிக்கும் கரங்களுக்கு இரத்தினத்தால் கைவளைகள்
எழில்பொலியும் செவிகளுக்கு எடுப்பான காதணிகள்
முடிமீது சுடரொளியாய் அணிசெய்ய சூடாமணி
ஆசையுடன் அணிவிக்க அன்னைநீ மகிழ்ந்திடுவாய்! (19)
20. அலங்காரம்
தம்மில்லேதவ தேவி ஹேமகுஸுமான் யாதாய பாலஸ்தலே
முகதாராஜி விராஜமான திலகம் நாஸாபுடே மெளத்திகம் !
மாதாமெளத்திக ஜாலிகாஞ்ச குசயோ: ஸர்வாங்குளீஷுர்மிகா:
கட்யாம் காஞ்சன கிங்கிணீர் வினிததே ரத்னாவதம் ஸம்ச்ருதெள: !!
சொருக்கினில் மலர்கள் சூட்டி, நெற்றியில் திலகமிட்டு, மூக்கினில் புல்லாக்கு, மூக்குத்தி பொருத்தி, மார்புக்கு முத்து ஜாலங்களையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அணிவிக்கிறேன்.
பலநிறத்தில் புதுமலர்கள் கூந்தலிலே சூட்டிவிட்டு
பிறைநுதலில் சிறப்புடனே சிந்தூரத் திலகமிட்டு
சிமிழ்போன்ற நாசியிலே சிட்டுப்போல் புல்லாக்கும்
விதவிதமாய் மோதிரமும் வைஷ்ணவியே அணிந்தருள்வாய்! (20)
தொடரும்....