Monday, October 28, 2019

விழியின் ஒளி


விழியில் ஒளியாக இருப்பவளே, என்
கவியில் கருவாக நிலைத்தவளே
(விழியில்)

பக்திக்கும் பணிவுக்கும் பரிபவள் நீயே
முக்திக்கு வித்தான என்னுயிர்த் தாயே
(விழியில்)

தித்திக்கும் செந்தமிழில் உன்னைப் பாடும் வரம் தந்தாய்
எத்திக்கும் நிறைந்தவளே என் மனதிலும் நிறைந்தாய்
முத்துச் சிரிப்பழகால் அத்தன் மனங் கவர்ந்தாய்
வித்தகியே அவன் இடப்புறத்தில் அமைந்தாய்
(விழியில்)


--கவிநயா

Tuesday, October 22, 2019

புவனேஸ்வரி


அண்டமெல்லாம் காக்கும் அன்னை புவனேஸ்வரி
ஆனந்த பைரவி, ஆதி பரமேஸ்வரி
(அண்டமெல்லாம்)

அத்தனுடன் இருப்பாள், முக்தியினைக் கொடுப்பாள்
பக்தியுடன் ஞானம், பணிந்தவர்க்(கு) அவள் அளிப்பாள்
(அண்டமெல்லாம்)

தேவரும் மூவரும் அவள் பதம் பணிய
வேதங்கள் யாவையும் அவள் திருப்புகழ் மொழிய
தேனெனும் இன்னிசை திசையெங்கிலும் பொழிய
தொழுதிடும் அடியவர் விழிகளில் நீர் வழிய
(அண்டமெல்லாம்)

--கவிநயா

Tuesday, October 15, 2019

துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி



துர்கை என்பார் லக்ஷ்மி என்பார் வாணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
காளி என்பார் கமலை என்பார் வேணி என்பாரே
மூன்று வடிவம் ஆன சக்தி அன்னை சக்தியே
(துர்கை)

துர்கையாகத் தோற்றம் கொண்டாள் துயரங்களைத் தீர்க்க
காளியாகத் தோற்றம் கொண்டாள் அசுர்ர்களை மாய்க்க
சூலமேந்தி வந்திடுவாள் பிள்ளைகளைக் காக்க
நீலியாக மாறிடுவாள் நீசர்களைத் தீய்க்க
(துர்கை)

பாற்கடலில் பிறந்து வந்தாள் அலைமகளாக, அந்தப்
பரந்தாமைனைக் கரம் பிடித்தாள் மணமகளாக
இல்லந்தோறும் வந்தருள்வாள் திருமகளாக, அவள்
எட்டுவடிவமாகி நின்றாள் எழில்மகளாக
(துர்கை)

நான்முகனின் நாவினிலே நாமகளானாள்
ஆயகலை அனைத்துக்கும் அவள் அரசியுமானாள்
வேதங்களின் வடிவம் அவள் வேத ரூபிணி, நல்ல
ஞான ஒளி நல்கிடுவாள் ஞான ரூபிணி
(துர்கை)



--கவிநயா

Monday, October 7, 2019

தாமரை மலரே!

தாமரை மலரே தாமரை மலரே
தாயினைத் தாங்கிடும் பேறு கொண்டாய்
தாயவள் பூம்பதம் தாங்கிடத்
தாமரை மலரே நீயென்ன தவம் செய்தாய்?
(தாமரை)

தாமரை திருப்பதம் தாமரை தளிர்க்கரம்
திருமுகமும் எழில் தாமரையே
தேடிடும் என்மனம் நாடிடும் அவள்பதம்
பாடிடும் தினம் அவள் திருப்புகழே
(தாமரை)

அன்னங்கள் நாணிடும் நடையழகில்
சொர்ணமும் மயங்கிடும் அவள் எழிலில்
வீணை குழைந்திடும் அவள் கரத்தில்
வேதங்கள் கிடந்திடும் திருப்பதத்தில்

கலைகளின் ராணி கலைவாணி
காந்த விழிகொண்ட எழில்வேணி
நாளும் அவள் பாதம் போற்றிடுவோம்
ஞான ஒளி நம்மில் ஏற்றிடுவாள்
(தாமரை)


--கவிநயா

Friday, October 4, 2019

அழகு ராணி



செந்தாமரை எழில் ராணி, உந்தன்
கண் தாமரையால் அருள் பொழிந்திட வா நீ
(செந்தாமரை)

பாற்கடலில் உதித்தாய், பரந்தாமனை வரித்தாய்
எண் வடிவம் எடுத்தாய், செல்வம்பல அள்ளிக் கொடுத்தாய்
(செந்தாமரை)

மாதவன் மார்பினிலே மலர்ந்திருக்கும் கமலை
மாதவர் யாவருக்கும் மகிழ்ந்தளிப்பாள் அருளை
திருவடிச் சேவையினில் இலயித்திருக்கும் கோதை
திருவடி பணிந்து விட்டால் காட்டிடுவாள் பாதை
(செந்தாமரை)



--கவிநயா