Monday, July 29, 2013

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா!

ஆடி மாதம் - அம்மன் மாதம்!
ஆடி மாதம் - LR ஈஸ்வரியின் மாதமும் கூட:)

அப்படியொரு கூட்டணி, இந்த ஈஸ்வரிக்கும், அந்த ஈஸ்வரிக்கும்!
* எப்படி கவிநயா-அம்மன் = கவிதைக் கூட்டணியோ
* அப்படி LR ஈஸ்வரி-அம்மன் = இசைக் கூட்டணி

வெறுமனே பக்திப் பாடல்கள் மட்டுமல்லாது, சினிமா இசையில் கோலோச்சிய சிம்மக்-குரலி = LR ஈஸ்வரி!
அவர் குரல் மிக்க வித்தியாசமானது; பெண்-சீர்காழி என்று கூடச் சொல்லலாம்!

அத்தனை கனமான குரலென்றாலும்,
காதல் பாடல்களிலும் கலக்கியவர் என்பதை மெய்ப்பிக்கும் = ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல்!
மன்மத லீலை படத்தில், MSV இசையில், யேசுதாசுடன் சேர்ந்து பாடும், இனிய காதல் இசை!இன்னிக்கி அம்மன் பாட்டில், ஒரு "ஈஸ்வரி" பாட்டு பார்ப்போம்!
ஈஸ்வரியே, "ஈஸ்வரி" -ன்னு பாடுறாங்க:)

கேட்டுக்கிட்டே படிங்க: ஒலிச் சுட்டி இதோ

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க - வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி - ஏதம்மா 
(ஈஸ்வரியே மகமாயி)

சமயபுரம் சன்னதியின் வாசலிலே - லோக 
சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் - நாங்க 
கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் -  சிங்க 
வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்
(ஈஸ்வரியே மகமாயி)

படவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் -  நல்ல 
பத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்
மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே - அதை
குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே
(ஈஸ்வரியே மகமாயி)

வரிகள்: தவசீலன்
குரல்: LR ஈஸ்வரி

Monday, July 22, 2013

தாயவள் பக்தியில் ஊறு!தாயவள் பக்தியில் ஊறு!
(subbu sir  sings :- http://www.youtube.com/watch?v=LMqOZrQYuMA  )
வற்றாத பேரருளாறு-அன்னை
வரமருளும் கல்பத்தாரு.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.

அரனிலோர் பங்கான மங்கை -அவள்
அவ்யாஜ கருணைக்கங்கை .
அம்புயக்கண்ணனின் தங்கை-நமக்கு
அபயந்தரும் அவளங்கை.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.

மாமதுரையில் மீனலோசனி -காஞ்சி
காமகோடி பீட வாசினி.
மென்னகை பூக்கும் சுஹாசினி-அவள்
இன்னருளால் இயங்குது காசினி.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.

வற்றாத பேரருளாறு-அன்னை
வரமருளும் கல்பத்தாரு.
தாயவள் பக்தியில் ஊறு -அவள்
பூந்தாள் பற்றிக் கடைதேறு.

-----------------------------------------------------

அவ்யாஜ == pl see : (1)  http://kavinaya.blogspot.in/2012/03/blog-post_18.html 
(2) http://maduraiyampathi.blogspot.in/2011/11/blog-post_21.htmlMonday, July 15, 2013

மூவெழுத்தில் இருப்பாள்!
சுப்பு தாத்தாவின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!


பூவெழில் ஒளிர்முகம்
புன்னகை மிளிர்இதழ்
மானென மிரள்விழி
தேனெனும் தீங்குரல்

கார்முகில் கருங்கூந்தல்
தேரசை வெனும்நடை
வார்சடை முடியோனின்
வாமத்தில் அவள்இடம்

மார்தவழ் மணியாரம்
மரகதத் திருமேனி
பார்புகழ் பரமேசீ
பனிமலர் பொற்பாதம்

அழகெனும் சொல்லுக்கு
இலக்கணம் அவள்வடிவம்
அருளெனும் சொல்லுக்கு
இலக்கணம் அவளன்பு

மூவெழுத்தில் அவளிருப்பாள்
முன்னின்று சிரித்திருப்பாள்
நாவசைத்துச் சொல்லிவிட்டால்
நங்கைமனம் மகிழ்ந்திடுவாள்!


*மூவெழுத்து == அம்மா


--கவிநயா

Friday, July 12, 2013

MS அம்மா குரலில்: "நெஞ்சுக்கு நீதி"!

அம்மன் பாட்டில், பாரதியாரின் இந்தப் பாடல், இது வரை வராதது, வியப்பிலும் வியப்பே!
= அது என்ன நெஞ்சுக்கு நீதி?

இது, கலைஞர் கருணாநிதியின் சுயசரிதை (தன்வரலாறு) அல்ல!
அதனினும் கூர்மையான பாரதியின் வரி...
= அது என்ன நெஞ்சுக்கு நீதி? அன்னையிடம் பாரதி வேண்டுவது:மனம் என்பது ஆறாதது!
"ஆறு மனமே ஆறு" -ன்னு சொல்லுவாய்ங்க! ஆனா ஏதோ ஒரு விடயத்திலாவது, ஆறாமல் தான் இருக்கும்... பலருக்கும்!

Plus Two-வில் இன்னும் சோம்பாமப் படிச்சிருந்தா, கூடுதலா மார்க் எடுத்திருக்கலாமோ?
எடுத்திருந்தா, அண்ணா பல்கலையில் முடிச்சி, நேரா வெளிநாடு போயிருப்பேன்;
ஆனா... இப்போ இந்த டொக்கு கம்பெனியில் வேலை பாக்குறேன்-னு, என்னிடம் அங்கலாய்த்தார் ஒரு சென்னை மேலாளர்;

அவருக்கு வயது 50:) Too much to think abt plus two:)
ஆறாமல் இருக்குது உள்ள ஒரு எண்ணம்!

* பெற்றோர் அன்பு இல்லாத குழந்தைகள்
* மனைவியின் மனதறியாக் கணவர்கள்
* கணவரின் மாண்பறியா மனைவிகள்
* தொழிலில் ஏமாற்றிய பங்குதாரர்கள்
இப்படி எத்தனையோ?

எல்லாத்தை விடவும்.........
தான் அன்பே செய்திடினும், அதை மதிக்காது எத்திய போது = நெஞ்சுக்குப் பசி; நீதி கிடைக்குமா? என்னும் பசி!


பசி-ன்னாலே அம்மா தானே!
அதான் நெஞ்சுக்கு நீதியை, அம்மாவிடமே கேட்கின்றான், தமிழ்க் கவி, பாரதி!


இன்பம் எங்கே இருக்கு? = Happiness Shop ன்னு விக்குறாங்குளா என்ன?
பத்து கிலோ வாங்கி வீட்டில் அடைச்சி வச்சிக்க முடியுமா?

இன்பம் / துன்பம் = ரெண்டுமே வெளியில் இல்ல; நம்ம நெஞ்சில் தான் இருக்கு!
= அதான் "நெஞ்சுக்கு" நீதி!

*அவள் பார்வை = தீ
*நம் துன்பம் = பஞ்சு

துன்பங்கள் எரிகையில், உள்ளத்தில் சமையல் நடந்து, உணர்விலே பசி அடங்குகிறது!
அப்படி நெஞ்சுக்கு நீதி செய்பவள் = அம்மா!

தாயே என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!


வரிகள்: சுப்பிரமணிய பாரதியார்
குரல்: எம்.எஸ். சுப்புலட்சுமி
நூல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
நிறைந்த சுடர்மணிப் பூண். 
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் 
பார்வைக்கு நேர் பெருந்தீ. 
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி 
வையக மாந்தர் எல்லாம், 
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர், சக்தி 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

நம்புவதே வழி என்ற மறைதன்னை 
நாம் இன்று நம்பி விட்டோம் 
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனைக் 
கும்பிடுவேன் மனமே! 
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் 
அச்சம் இல் லாதபடி 
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருள்
ஆக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்,
எள் அத்தனைப் பொழுதும் பயனின்றி
இராது என்றன் நாவினிலே
வெள்ளம் எனப் பொழிவாய் சக்தி வேல், 
சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்!!

தாயே... நெஞ்சுக்கு (அன்பெனும்) நீதியை வழங்கு!
தாயே... என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!

Monday, July 8, 2013

அம்மா... அம்மா... அம்மா...அம்மா என்றேன், கண்ணே என்றாய்
அம்மா என்றேன், ஓடி வந்தாய்
அம்மா என்றேன், அன்பைத் தந்தாய்
அம்மா என்றேன், அரவணைத்தாய்!

மாலை இல்லை, மலரைத் தந்தேன்
மகிழ்ந்ததனை ஏற்றுக் கொண்டாய்
கனியவில்லை, காயைத் தந்தேன்
கனிந்ததனை ஏற்றுக் கொண்டாய்!

அடுக்கடுக்காய்த் தீபம் இல்லை,
அகல் விளக்கில் ஒளிர்ந்திருந்தாய்
குறைகள் மிகுந்த என் மனதிலும்
குடியிருக்கச் சம்மதித்தாய்!

அம்மா உன்றன் அன்பைச் சொல்ல
வார்த்தையில்லை, வழியுமில்லை
அம்மா உனக்குத் தர என்னிடத்தில்
அன்பைத் தவிர ஏதும் இல்லை!


--கவிநயா


Monday, July 1, 2013

வரந் தருவாய் அன்னையே!


ஏக்கம் உண்டு மனதிலே
தூக்கம் இல்லை விழியிலே
வாக்கு நீயும் தந்து விட்டால்
வாழ்க்கை மலரும் நொடியிலே!

கண்ணில் உன்னைக் காணவும்
கருத்தில் உன்னைப் பேணவும்
நாளும் பொழுதும் நாடி உன்னை
நல்ல தமிழில் பாடவும்

வேதனைகள் மாறவும்
சோதனைகள் தீரவும்
தாயுன்றன் மடியினிலே
தலைவைத் திளைப் பாறவும்

வரந் தருவாய் அன்னையே
பரம் என்றேன் உன்னையே
கரங் கொடுத்துக் காத்திடவே
விரைந்திடுவாய் முன்னையே!


--கவிநயா