Monday, September 19, 2016

காசி நகர் மாதரசி!




கீதாம்மாவின் இனிய குரலில்....  மிக்க நன்றி கீதாம்மா! 

காசி நகர் மாதரசி

கனிவு மிகு பேரரசி

அகன்ற கரு விழிகளினால்

அருள் பொழியும் அன்பரசி



மன்னன் விஸ்வநாதனுடன்

மங்களமாய் வீற்றிருப்பாள்

விசாலாக்ஷி என்ற பெயர்

கொண்டுலகம் காத்திருப்பாள்



மலரடிகள் பற்றி விட்டால்

மனமயக்கம் தீர்த்திடுவாள்

மரணபயம் நீக்கிடுவாள்

பிறவிப் பயன் தந்திடுவாள்


--கவிநயா 


Monday, September 12, 2016

வார்த்தை வரவில்லை :(




என் உணர்வுகள் எல்லாம் கீதாம்மாவின் குரலில் வழிகின்றன. மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!

வார்த்தை வரவில்லையே

உன் எழில் பாட, திருப் புகழ் பாட, இன்று

(வார்த்தை)



சொல்லிச் சொல்லிப் பார்க்கின்றேன்,

சொற்கள் வரவில்லை

எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்,

எண்ணத்தில் நீ இல்லை

(வார்த்தை)



முழுமதி வதனத்தை மேகங்கள் மூடியதோ

தமிழ் விளையாடும் வேளை விதி விளையாடியதோ?

அருள் என்னும் கதிராலே……….

அருள் என்னும் கதிராலே மேகத்தை விலக்கிடுவாய்

உந்தன் திருநாமம் எந்தன் நாவினில் எழுதிடுவாய்

(வார்த்தை)


--கவிநயா

Monday, September 5, 2016

தில்லை வாழ் சிவகாமி!



ஆனந்த பைரவியில் சுப்பு தாத்தா ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!



கீதா ரங்கன் அவர்கள் வராளி ராகத்தில் இழைத்துப் பாடியிருக்கிறார்கள். மிக்க நன்றி கீதாம்மா!



என் மன இருள் அகற்றி அருள் தருவாய்

இருளுக்குள் ஒளியாக நீ வருவாய்

(என் மன)



சிதம்பர நடராஜன் இடமிருக்கும் தேவி

தில்லைநகர்க் கூத்தனுடன் திகழ்ந்திடும் சிவகாமி

(என் மன)



தத் தித் தோ மென்று நந்தி மத்தளங் கொட்ட

தக தித் தோ மென்று பிரம்மன் தாளந் தட்ட

ததிங் கிண தோ மென்று ஆடிடும் அரசனுடன்

தந்தோம் தந்தோ மென்று சிந்தை மகிழ வந்து

(என் மன)


--கவிநயா