Monday, September 30, 2013

உன் மணமே என் மனம்!



காலமெல்லாம் காலடியில் கிடந்திருப்பேன், அம்மா
கனிந்த முகம் பார்த்திடவே காத்திருப்பேன்
கோலமெல்லாம் மாலையிலே தொடுத்திருப்பேன், பா
மாலையிலே நீ மணக்க மகிழ்ந்திருப்பேன்

காட்டுவழி போறேனம்மா, கை பிடித்து வா
பாட்டுச் சொல்லி வாரேனம்மா நீ ரசித்து வா
வாட்டுந் துன்பம் யாவையுமே நீ பொசுக்க வா
கோட்டையென என் மனதில் நீ வசிக்க வா

காரிருளாய் இருந்தாலும் உன் துணை போதும்
கற்பகமே உன்னொளியே என் வழியாகும்
சேர்ந்து வரும் வினை யாவும் எனை வெறுத்தோடும்
செண்பகமே உன் மணமே என் மனமாகும்!


--கவிநயா

படத்திற்கு நன்றி: http://photofeature.templesonnet.com/aadi-month-2012/sri-durgai-patteeswaram-temple.shtml

Monday, September 23, 2013

அம்மா உனக்காக...




தேஷ் ராகத்தில் சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


கனவிலும் நினைவிலும் உன்னை நினைத்தேன் – என்றன்
சின்ன மனக் கோயிலிலே உன்னை அமைத்தேன்

இதயத் துடிப்பு உன்றன் பெயர் சொல்லும் – இசைத்
தமிழும் அதற்கிசைந்துன் புகழ் சொல்லும்
மதியினில் மதிமுகமே வளைய வரும் – அது
ஸ்ருதியுடன் லயம் போலே இனிமை தரும்

நடக்கையில் உன் நாமம் கூட வரும் – துன்பம்
கடக்கையில் கைபிடித்துத் தாங்கி வரும்
இடக்கையில் தீயேந்தும் அரன் மனையே – உன்னை
நினைக்கையில் விழிகளில் நீர் பெருகி வரும்

என்ணுகின்ற எண்ணமெல்லாம் உனதாக
பண்ணும்செய லெல்லாம் உன்றன் பணியாக
நாவுரைப்ப தெல்லாம் உன்றன் புகழாக
நானிருக்க வேண்டும் அம்மா உனக்காக…


--கவிநயா

 படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/09/azhagin-azhagu-sarva-alankaram.html

Monday, September 16, 2013

வாடியம்மா!


சுப்பு தாத்தாவும் மீனாட்சி பாட்டியும் புன்னாக வராளியில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்!




மாயத் திரைக்குப் பின் இருப்பவளே, என்றன்
மனசுக் குள்ளே வந்து சிரிப்பவளே
கானம் உனக்காகப் பாடி வந்தேன், நான்
காண என்றன் முன்னே வாடியம்மா!

இமய மலை தன்னில் பிறந்தவளே, அந்த
இமைய வர்கள் தொழக் கனிந்தவளே
இணையென்று எவரு மில்லாதவளே, என்றன்
துணையே என்றன் முன்னே வாடியம்மா!

ஈரேழு லகையும் ஈன்றவளே, அந்த
ஈசனின் சரிபாதி யானவளே
சேயென எங்களைக் காப்பவளே, என்றன்
தாயே என்றன் முன்னே வாடியம்மா!

செய்யப் பட்டு டுத்தி நின்றவளே, என்றன்
மனசைக் கொய்தெடுத்துச் சென்றவளே
பையப் பைந்தமிழால் பாடுகின்றேன், நான்
உய்ய என்றன் முன்னே வாடியம்மா!


--கவிநயா 

Monday, September 9, 2013

உன்னை மறவேன்!



அம்மா உன்னை எண்ணும் போதே உள்ளம் மலர்கிறதே
அறியாப் பெண்ணின் நெஞ்சம் எல்லாம் இன்பம் நிறைகிறதே
பரிவாய்ப் பார்க்கும் உன்றன் விழியில் பாசம் தெரிகிறதே
கனிவாய் இதழின் சிரிப்பில் இந்த உலகே ஒளிர்கிறதே!

வருவாய் என்றே வாசல் பார்த்துக் காத்துக் கிடக்கின்றேன்
கருவாய் உருவாய் பலவாய் ஆகி உழன்றே தவிக்கின்றேன்
வினையின் வருவாய் குறைந்திட வேண்டும் வேண்டிக் கேட்கின்றேன்
சுனையாய் வருவாய் அருளைத் தருவாய் அம்மா துதிக்கின்றேன்!

மறைவாய் நீயும் நின்றாலும் நான் உன்னை மறவேனே
மறைகள் போற்றும் பரமே உன்றன் பதங்கள் பணிவேனே
சிலையாய் நீயும் நின்றாலும் என் சித்தம் உன்னிடமே
மலையாய் உனையே நம்பி எனையே தந்தேன் உன்வசமே!


--கவிநயா
 

Monday, September 2, 2013

குறையெதும் இல்லையடி!





சுப்பு தாத்தா அடானாவில் பாடி அசத்தியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்!


கனிமுகங் காண வந்தேன் கற்பகமே
பனிமலர்ப் பதம் அருள்வாய் அற்புதமே
(கனிமுகம்)

அரையினில் அரவணிந்த சங்கரனின் பங்கு கொண்டாய்
பிறைமுடி சூடிக் கொண்டு பித்தனுடன் கூடிக் கொண்டாய்
கறைக்கண்டன் மனையெனவே இடப்புறம் இருப்பவளே
வரையெதும் இல்லாமல் கருணையைப் பொழிபவளே!
(கனிமுகம்)

மறைகளின் மறைபொருளே மாதவரில் மாமணியே
நிறைமதி முகத்தவளே நித்தம்தொழும் நித்திலமே
குறையெதும் இல்லையடி கோதையுன்னை நினைத்த பின்னே
பறைதர வேணுமடி பிள்ளையெனைக் காத்திடவே!
(கனிமுகம்)


--கவிநயா