பாராளும் பேரழகி !
(அன்னையின் கழல் முதல் குழல்வரை பொங்கும் அழகின் அலைகள்)
சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே கொலுவிருக்கும் அஞ்சுகமே!
அம்மா!அபிராமி!உந்தன் கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்.
[1] உந்தன் திருப்பாதங்களாம்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்.
[1] உந்தன் திருப்பாதங்களாம்
செங்கமலமலர்களினை
மொய்க்கும் கருவண்டுகளாய்த்
தெரிவதெங்கள் தலைகளன்றோ!
[2] வாழைத்தண்டொத்த உந்தன்
கால்களினழகைப்போற்றி
பாடிஉன்னைப் பணிகின்றோம்
தாயே!நீ அருள் புரிவாய்.
[3] பூரித்த பின்னழகை,
இல்லாத இடையழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
பேரருளைப் பொழிந்திடுவாய்.
[4] தாய்மை எனும் தனியழகுன்
மேனியிலே பொங்குதம்மா!
ஜகத்ஜனனி!மங்களமெங்கும்
பொங்கிடவே அருள் புரிவாய்.
[5] பூங்கணைகளைத்தாங்கும்
பூங்கரத்தின் பேரழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
தூயவளே!அருள்புரிவாய்.
[6] உந்தன் செந்தளிர்விறல்கள்
'அபயம்' காட்டும் அழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
அம்பிகையே!அருள்புரிவாய்.
[7] குஞ்சுக்கிளியும்,கரும்புமுன்
வேயுறு தோள்களிலே
கொஞ்சுகின்ற அழகுதனைப்
பாடியுன்னைப் பணிகின்றோம்.
[8] திருத்தாலி நெளிந்திடுமுன்
சங்குக்கழுத்தழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
அன்னையே!அருள்புரிவாய்.
[9] தண்ணொளி தவழுமுந்தன்
பொன்வதனம் கண்ட நிலா
முட்டாக்கு போட்டொளிய
முகில் தேடி ஓடுதம்மா!
[10] குங்குமப்பூவிதழில்
புன்னகை கண்டதாலே
உண்டான போதையிலே
உருண்டு பூமி சுழல்கிறதோ?
[11] முல்லைப்பூச்சரம்போலே
ஒளிர்ந்திடுமுன் பல்லழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
ஜகதம்பா!அருள்புரிவாய்.
[12] நட்சத்திரமாய் மினுக்கும்
மூக்குத்தி அணிந்த உந்தன்
மூக்கழகைத்துதிபாடி
பணிகின்றோம்.அருள்புரிவாய்
[13] காதளவு நீண்ட உந்தன்
கயற்கண்களில் பெருகும்
கருணையின் பேரழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்.
[14] காமன் கை வில்போலே
வளையமுந்தன் புருவங்களின்
பேரழகைப் பாடுகின்றோம்
சாம்பவியே!அருள்புரிவாய்.
[15] பனையோலைத் தாடங்கம்
அணிந்த உன் செவியழகை
பாடியுன்னைப் பணிகின்றோம்
சுந்தரியே!அருள் புரிவாய்.
[16] மதிநுதலில் ஒளிரும் உன்
'நெற்றிப்பொட்டு'அழகுதனை
பாடியுன்னைப் பணிகின்றோம்
சங்கரியே!அருள் புரிவாய்
[17] உந்தன் கருங்குழல் கண்டு
மழைமுகில் என்றே மயங்கி
வண்ணத்தோகை விரித்து மயில்
வட்டமிட்டு ஆடுதம்மா!
[18] முகிலிடை மின்னலென உன்
முடியிடையே வகிடுதனில்
சிந்தூர அழகு எங்கள்
சிந்தை கொள்ளை கொண்டதம்மா
சங்கரனின் பத்தினியே!கட்டழகுக் களஞ்சியமே!
எங்கள்மனக்கோயிலிலே கொலுவிருக்கும் அஞ்சுகமே!
அம்மா!அபிராமி!உந்தன் கழல் முதல் குழல் வரை பொங்கும்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்
அழகின் அலைகளைப் பாடி பாதமலர் பணிகின்றோம்