Monday, December 31, 2018

ஒரு முறை பாரேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!


உன்னிரு விழியாலே என்திசை பாராயோ?
விண்மதி முகத்தாளே தண்ணொளி தாராயோ?
(உன்னிரு)

கனவிலும் நினைவிலும் கருத்தினில் இருப்பவளே
கடைவிழிப் பார்வையினால் அகிலத்தைக் காப்பவளே
(உன்னிரு)

ஒருமுறை நீ பார்த்தால் சலனங்கள் சரியாகும்
சஞ்சலங்கள் யாவும் சடுதியில் கரைந்தோடும்
தஞ்சமென உனை அடைந்தேன் நெஞ்சில்குடி யிருப்பவளே
அஞ்சலென கஞ்சமலர்ப் பதமெனக்  ளிப்பாயே
(உன்னிரு)


--கவிநயா

Monday, December 24, 2018

வரமொன்று வேண்டும்!


அம்மா உன்னிடம் வரம் கேட்டேன்
அன்பால் அளிப்பாய் அருள் கேட்டேன்
என்னிதழ் மெல்ல
உன்பெயர் சொல்ல
உன்புகழ் பாடும் மனம் கேட்டேன்
(அம்மா)

மதுரையை ஆள மனம் வைத்தாய்
காஞ்சியில் காலடி தனை வைத்தாய்
மயிலையில் மயிலாய்
கயிலையில் ஒயிலாய்
கற்பகமே அருள் வடிவெடுத்தாய்
(அம்மா)

தில்லை நாதனின் சிவகாமி
திருக்கடவூரினில் அபிராமி
காளி கபாலினி
நீலி த்ரிசூலினி
சிம்ம வாஹினி அருள்வாய்நீ
(அம்மா)


--கவிநயா

Monday, December 17, 2018

கண் பாராய்; மயல் தீராய்!



அம்மா உன்பெயர் அனுதினம் உரைத்தேன்
அன்பால் உனையே தினந்தினம் அழைத்தேன்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)

உலகினில் உழலும் உன்பிள்ளைகள் கோடி
உன்பிள்ளை நானோ அதிலொரு கோடி
எனை நீ பார்த்திடும் நாளும் வருமோ?
என்குரல் கேட்க உன்செவி சாய்ந்திடுமோ?
(அம்மா)

பலநாள் ஏக்கம் மனதினைத் தாக்கும்
உன் நினைவொன்றே உயிரினைக் காக்கும்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)



--கவிநயா

Monday, December 10, 2018

என் மனமே கோவில்



அம்புய விழியாலே அபயம் அளிப்பாள்
பங்கய மலர்க்கரத்தாள் பயம் நீக்கிடுவாள்
செம்புலப் பெயல்நீர்போல் என்னுயிரில் கலந்தாள்
என்மனமே கோவில், அவள் நினைவே தீபம்
(அம்புய)

சிந்தையில் பலப்பல சிந்தனை வந்தாடும்
நடுவினில் அவள்வதனம் மடுமலராய் வாழும்
என்மனமே காடு, அவள்முகம் முழுநிலவாம்
என்மனமே சேறு, அவள்தா மரைமலராம்
(அம்புய)

தில்லையில் சிவனுடன் திருநடனம் புரிவாள்
எல்லையில்லா அன்பால் என்னுளம் குடிபுகுந்தாள்
என்மனமே அரங்கம், அவள் நினைவே நடனம்
என்தமிழின் நாதம், அவள் புகழை ஓதும்
(அம்புய)


--கவிநயா



Monday, December 3, 2018

ஒரு முறை பார்த்தால்...



ஒரு முறை முகம் பார்த்தால்
பழவினை பறந்தோடும்
திருப் பெயரைச் சொன்னால்
பெருந் துயரும் ஆறும்
(ஒரு)

அன்பு ததும்பும் வதனம்
அருள் ததும்பும் விழிகள்
இதழ் வழியும் முறுவல்
அபயம் தரும் பதங்கள்
(ஒரு)

சிந்தையில் அவள் முகமே
தினம் தினம் வந்தாடும்
சொந்தமென அவளை
நெஞ்சமும் கொண்டாடும்

தஞ்சமென அவள் பதமே
அடைந்து விட்ட போது
பஞ்சமென்று ஏதுமில்லை
அவள் புகழைப் பாடு!
(ஒரு)


--கவிநயா