Tuesday, September 28, 2010

கருமாரி அம்மா


கருமாரி .அம்மா ... நின்
கருணைவிழி அருள்  வேண்டி
காலடியில்
காத்திருப்பேன்..       கருமாரி. அம்மா,,,

அருள் மாரி பொழிவாய் நீ
அகிலமெல்லாம் காத்திடுவாய் !
ஆயிரம் கண் உடையாய் எங்கள்
அவலங்கள் தொலைத்திடுவாய்  = கருமாரி  அம்மா

இருள் இடர் இன்னல் இங்கே
இனி இல்லை எனச் சொல்வாய் !
ஈரேழு உலகத்தாரும் 
மீண்டுவரும் வழி சொல்வாய்  = கருமாரி  அம்மா

உள்ளத்திலே குடிபுகுந்து-=என்
உள்ளத்திலே குடி புகுந்து, அருள்
வெள்ளத்தி  லதையமிழ்த்தி   

உண்மையெது ? உணரச்செய்வாய் !
*மெய்யதனைச் சுட்டெரித்து
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி அம்மா

எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான்
ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி.அம்மா

ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி அம்மா

ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம . வழி காட்டும். ...கருமாரி.அம்மா

அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ...  கருமாரி .அம்மா

*மெய்  = உடல்    
கருமாரி அம்மன் கோவிலுக்குச் சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
நன்றி: தினமலர் நாள் இதழ் .
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்கள் அறிய  இங்கே கிளிக்கவும்.
அம்மன் சன்னதியில் மனம் உருகி பாடும் பாடல்களைக் கேட்க விருப்பமா ?
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா பாடுவதை கேட்க   பொறுமை தேவை.  விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டும்:
இங்கே

எழுதியது

சுப்பு ரத்தினம்










Monday, September 20, 2010

தஞ்சமென்று உனைஅடைந்தேன்...



தஞ்சமென்று உனைஅடைந்தேன் தாரகையே – என்றன்
நெஞ்சந்தனில் குடியிருக்க வாஉமையே

அஞ்சுகின்ற நெஞ்சமுடன் உன்னைஅடைந்தேன்
அஞ்சுகமே தஞ்சமென்று கண்டுதெளிந்தேன்

அஞ்சுமலர் அங்கையிலே ஏந்தியிருப்பாய்
அஞ்சேலென்று அன்புடனே அரவணைப்பாய்
பிஞ்சுமலர்ப் பதங்களையென் சென்னிபதிப்பாய்
பஞ்சிலிட்ட தீயாய்என்றன் வினையெரிப்பாய்!


--கவிநயா

Monday, September 13, 2010

அம்மா வருவாயோ?


அம்மா வருவாயோ - வந்தென்
அல்லல் களைவாயோ
அன்பைத் தருவாயோ - தந்தெனை
அணைத்துக் கொள்வாயோ

ஒன்றும் அறியாத பெண்ணாய்
என்னைப் படைத்தாயே
எல்லாம் அறிந்த அம்மா என்னை
அலைக் கழித்தாயே

முன்னம் வினையெல்லாம் அம்மா
முறித்து அருள்வாயே
கண்ணால் காப்பவளே கொஞ்சம்
கருணை செய்வாயே!


--கவிநயா


Tuesday, September 7, 2010

விழியழகி!



வெள்ளைப் பாற்கடலில் துள்ளுகின்ற மீனினமோ
கள்ளைக் கடிமலரில் தேடுகின்ற வண்டினமோ

முள்ளை மலராக்கி மாயம்செய்யும் மந்திரமோ
கல்லைக் கனியாக்கும் கனிவுமதன் தந்திரமோ

வில்லைக் கையேந்தும் மன்மதனின் அம்புகளோ
தில்லைச் சுந்தரனை துரத்திவரும் வம்புகளோ

காலைக் கதிரவனும் கடன்வாங்கும் சூரியரோ
மாலை முழுமதியும் மயங்குகின்ற சந்திரரோ

பால முருகன்கையில் வேலெனவே வந்தனவோ
கோல மயில்எழிலாய் அவனுடனே சென்றனவோ

நீல மயில்தோகை இமைகளென ஆனதுவோ
நீல கண்டனுக்கு விரித்திருக்கும் வலையதுவோ

கருணை பொழியவென்றே கருத்திருக்கும் முகிலதுவோ
மருளை நீக்கவென்றே காத்திருக்கும் ஒளியதுவோ

கருக மணியழகோ மருண்டுஓடும் மானழகோ
விரையும் எதிரியையும் வெல்லுகின்ற வாளழகோ

பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ
இறைவியுன் விழியழகை பாடுவதும் சாத்தியமோ!


--கவிநயா