Monday, March 30, 2015

மலயத்வஜன் மகள்!


மணிராக் ராகத்தில் சுப்பு தாத்தா மணிமணியாய்ப் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



மாநிலம் ஆளுகின்ற மங்கல மீனாட்சி!

மலயத்வஜன் மகளே மனமெல்லாம் உனதாட்சி!

(மாநிலம்)



மதங்கரின் மகளாக அவதரித்த தேவி!

மதுரை நகர் தந்த மாமணியே ராணி!

(மாநிலம்)



காஞ்சன மாலையின் தவப் பயனாய் வந்தாய்!

கண்கவர் சுந்தரனின் மனங்கவர்ந்து வென்றாய்!

பக்தர்களின் குறை தீர்க்க பச்சைக்கிளி ஏந்தி நின்றாய்!

சித்தமெல்லாம் சிவனுடனே நர்த்தனங்கள் ஆடுகின்றாய்!

(மாநிலம்)


--கவிநயா

Monday, March 23, 2015

அன்னையென்று உனை அழைக்க...


சுப்பு தாத்தா மெல்லிசையில் மென்மையாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



அன்னையென்று உனை அழைக்க

அருந்தமிழ் நீ தந்தாய்

அன்னையென்ற சொல்லுக்கு

அரும்பொருளாய் நின்றாய்

(அன்னை)



எந்தை சிவனுக்கு ஏற்றம் தருபவளே

தந்தை தாயெனவே அவனுடன் அருள்பவளே

கந்தன் கணபதியை உலகிற்குத் தந்தவளே

விந்தை வாழ்விதிலே துணையென வருபவளே

(அன்னை)



பாசமும் அங்குசமும் பாவை உந்த கரமிருக்க

வாசமலர்ப் பாதங்கள் பிள்ளையெந்தன் சிரமிருக்க

தூசான துன்பம் எல்லாம் துரத்துதல் மறந்திருக்க

நேசம்மிகும் நெஞ்சமெல்லாம் உன்நினைவே நிறைந்திருக்க

(அன்னை)


--கவிநயா

Monday, March 16, 2015

ஆயிரம் நாமங்கள் கொண்டவளே!

அம்மாவின் அருளால் அம்மன் பாட்டின் 500-வது பதிவாக வருகிறது இந்தப் பாடல்.

தர்மாவதி இராகத்தில் மிகப் பொருத்தமாக சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



தர்மாவதி இராகத்தில் கொஞ்சம் வேறு மாதிரி மீண்டும் சுப்பு தாத்தா பாடியிருக்கிறார்... அவருடைய வார்த்தைகளில்: "ஒரு தரம் பாடி மனம் திருப்தி அடைய வில்லை. அதே தர்மாவதி ராகத்தில் வேறு மாதிரி பாடுவோம் எனத் தோன்றியது." மிக்க நன்றி தாத்தா!


ஆயிரம் நாமங்கள் கொண்டவளே, எங்கள்

அம்பிகையே, ஆதி சக்தி தாயே!

பாதங்கள் பணிந்து போற்றுகின்றோம், எங்கள்

பாவங்களைத் தீர்த்துக் காத்திடுவாய்!



வேதங்கள் போற்றிடும் மாதவியே, எங்கள்

வேண்டுதலைக் கொஞ்சம் கேட்டிடுவாய்!

சோதனைக ளெல்லாம் தாண்டி வந்து உன்னைச்

சொந்த மெனக் கொண்டோம் காத்திடுவாய்!



அன்பு மிகக் கொண்டு உன்னை நாடி வந்தோம்

அம்பிகையே, ஆதி சக்தி தாயே!

துன்பங்கள் எத்தனை வந்த போதும் உன்னை

நம்பிப் பற்றிக் கொண்டோம் காத்திடுவாய்!



ஆதரவு காட்ட உன்னையன்றி வேறு

யாரு மில்லையென்று நீ அறிவாய்!

வாதம்கீதம் ஏதும் செய்யாமல் நீயும்

வேகங் கொண்டு வந்து காத்திடுவாய்!


--கவிநயா 

Monday, March 9, 2015

மனமெல்லாம் வனமாச்சு

கிராமியம் மணக்கும் மெட்டில் சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



மனமெல்லாம் வனமாச்சு
மதியில்லா இருளாச்சு
கதிராக நீ வருவாய் அம்மா! உன்
கண்ணொளியால் வழி தருவாய் அம்மா!

நிலமெல்லாம் மண்ணாச்சு
வளமில்லாத் தரிசாச்சு
உரமாக நீ வருவாய் அம்மா!
வரமாக வளம் தருவாய் அம்மா!

நீரெல்லாம் பாழாச்சு
நிறமில்லாச் சேறாச்சு
சேற்றுள்ளே தாமரையாய் அம்மா!
வேர் விட்டு நீ மலர்வாய் அம்மா!

சிலையாக நின்றாலும்
விலையில்லா உனதன்பை
மழையாக நீ பொழிவாய் அம்மா! பெரு
மலையாகத் துணை வருவாய் அம்மா!


--கவிநயா

Monday, March 2, 2015

உன் பெயர்

சுப்பு தாத்தா அமைத்த அருமையான ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!



உன் பெயர் ஒன்றேதான்
நான் அறிந்த மொழியானது!
உன் புகழ் ஒன்றேதான்
நான் பாடும் கவியானது!
(உன் பெயர்)

எந்தன் சின்ன உள்ளத்திலும்
குடியிருக்க உள்ளம் கொண்டாய்;
என்னவென்று சொல்லிடுவேன் உன் கருணை!
சொல்லிச் சொல்லித் தீராதம்மா உன் பெருமை!
(உன் பெயர்)

அன்பெனும் கருக் கொண்டு
அகிலத்தை உயிர்ப்பித்தாய்!
அன்னையெனும் உருக் கொண்டு
அரவணைத்து மகிழ்ந்தாய்!

எந்தை சிவனுடனே
ஏந்திழையே வருவாய்!
முந்தை வினை முறித்து
முக்கண்ணியே அருள்வாய்!
(உன் பெயர்)


--கவிநயா