Thursday, July 31, 2008

மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

அம்மா.

அம்மா என்ற சொல்லைச் சொல்லும்போதே எவ்வளவு சுகமாக இருக்கிறது. அந்த ஒரு சொல்லே அளவில்லாத அன்பையும், குழைவையும், நெகிழ்வையும் தந்து விடுகிறது. அதனாலேயே அவளை, உலகுக்கெல்லாம் அன்னையை, ஆதிபராசக்தியை, அகிலாண்ட ஈஸ்வரியை, அழைக்கும்போது, அன்னை என்றோ, அம்பாள் என்றோ, இன்னும் வேறு விதமாகவோ சொல்லாமல், அம்மா என்று அழைக்கவே எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மா என்றவுடன் இதயத்துக்குள் வந்து அமர்ந்து கொண்டு விடுகிறாள் என்று தோன்றும்.

எனக்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் பெருமைகளையும் அருமைகளையும் அறியேன். ஆனால் அவள் அன்பே உருவானவள் என்பதை மட்டும் ஆணித்தரமாய் அறிவேன். இல்லையென்றால் என்னைப் போன்ற சிறியவளுக்கு அவளைப் பற்றி ஒரு வரியேனும் எண்ணும், எழுதும், பேசும், வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவளுக்கே அவளுக்கான இந்தப் பூவில் முதல் முதலாக மூன்றாம் ஆடிவெள்ளிக்கு எழுதும் வாய்ப்புக்கு மிக மகிழ்ந்து, அவள் திருவடிகள் பணிந்து தொடங்குகிறேன்.


மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சிறுவயது முதலே அதன் வடிவத்தால், இசையால் கவரப்பட்டு, பொருள் புரியாமலே பாடி வந்திருக்கிறேன். சமீபத்தில் அதன் பொருளை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கிய போது அதனைத் தமிழில் எழுதும் எண்ணம் வந்தது. அப்படி முயல்கையில் சமஸ்கிருதத்தில் ஒரு சொல்லில் சொல்லும் விஷயத்துக்கு தமிழில் நான்கு சொற்களேனும் வேண்டியிருப்பதாய் உணர்ந்தேன். அம்மா மன்னிப்பாள் என்ற நம்பிக்கையில், அதனை மொழி பெயர்ப்பு என்று அழைக்காமல் தழுவல் என்றே அழைக்கிறேன். குமரன் அளித்த ஊக்கத்தின் பேரில் அதனை இங்கே பதிக்கிறேன்.

அன்னையின் அன்புக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. எதிர்பார்ப்பில்லாத தூய அன்பைத் தரக் கூடியவர்கள் தாய்மார்கள் மட்டுமே (தந்தைமார்கள் அடிக்க வராதீங்க!). உலகாதய அம்மாக்களே இப்படியென்றால், ஜகன்மாதாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அப்பேற்பட்ட அன்னைக்கும் பிள்ளையிடம் கோபம் வரலாம். வரும். எப்போது? பிள்ளை தவறு செய்யும்போது. அதுவும் அன்பினாலேயே ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதனால்தான் ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அருள்பாலிக்கவே மஹிஷாசுரமர்த்தினியாய் ஜொலிக்கிறாள்! அவளுடைய, நிகரில்லாத எழிலையும், ஒப்பில்லாத வீரத்தையும், கரையில்லாத கருணையையும், இந்தப் பாடல் என்னமாய் போற்றுகிறது!

வாருங்கள் – அயிகிரி நந்தினியின் தமிழ்த் தழுவலைப் பார்க்கும் முன், அதனுடைய ஒலி வடிவத்தைக் கேட்டு மகிழுங்கள்.


Get this widget | Track details | eSnips Social DNA

இங்கே குமரன் அனுப்பித் தந்த அயிகிரி நந்தினிக்கான அபிநயத்தைக் கண்டு களிக்கலாம். நன்றி குமரா.



இப்போது தமிழ்த் தழுவல்:

நந்தியும் தேவரும் நயந்துன்னைப் போற்றிட மகிழ்ந்தின்பம் தருகின்ற மலைமகளே
விந்திய மலையின் உச்சியில் உறைந்து ஒளிர்பவளே ஜயம் தருபவளே
கறைக் கண்டன் அவனின் மனையவளே பலலீலைகள் புரிந்திடும் உமையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (1)

இறை வருக்கும் இறை யானவளே அறியா தவர்க்கும் அருள் புரிபவளே
ஓம் எனும் ப்ரணவத்தை ஆள்பவளே மூவுலகையும் காத்திடும் மூத்தவளே
தனுதிதி வம்சத்தை ஒழித்தவளே வீண் ஆணவம் அழித்திடும் அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (2)

புன்னகையால் மனம் கவர்பவளே எந்தன் அன்னையே கதம்பவனப்ரியையே
மலைகளுக் கெல்லாம் அரசனாம் அந்த இமயத்தின் சிகரத்தில் வசிப்பவளே
மதுகை டபர்களை வென்றவளே என்றும் ஆனந்த நடம் செய்யும் நாயகியே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (3)

அரக்கரைத் த்வம்சம் செய்பவளே போர்க் களிறுகளைக் கொன் றொழிப்பவளே
சிம்மத்தின் மீதேறி வருபவளே பெரும் கோபத்தில் ஜொலிக்கின்ற துர்க்கையம்மா
பகைவரின் தலைகளைக் கைகளின் பலத்தால் தூளாய்ச் சிதற வைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (4)

வெற்றியின் மறுவடி வானவளே கடும் பகைவரையும் கொன்று வெல்பவளே
சிவகணங்களைப் படையாகக் கொண்டு போர் தொடுத்தவளே காளி பயங்கரியே
பாவத்தின் வடிவாய்ப் பாதகம் புரிந்திட்ட அசுரரின் தூதரை அழித்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (5)

உனைச் சரணடையும் பகைவரின் பெண்டிர்க்கும் அடைக்கலம் தந்து காப்பவளே
மூவுல கினையும் மூர்க்கமாய் அடக்கிடும் அரக்கரை வேலால் பிளப்பவளே
திக்குகள் அதிர்ந்திட முரசுகள் ஒலித்திட சூரியனாய்த் தக தகப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (6)

ஒருஹூங் காரத்தால் எதிர்வரும் பகைவரைப் புகையெனக் கலைந்தோடச் செய்பவளே
போர்க் களத்தினிலே வீழ்கின்ற குருதியால் தழைக்கின்ற கொடியினைப் போன்றவளே
சங்கரன் அருகிலும் அரக்கரின் நடுவிலும் பேத மின்றிக் களித் திருப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (7)

மென்னுடலைப் பல விதவிதமாய்ப் பல அணிகலனால் அணி செய்தவளே
மின்னும் வாளுடன் கூரம் புகளுடன் எதிரிகள் தலைகளை அறுப்பவளே
பெரும்படை களையும் பொம்மைகள் போல விளையாட்டாய் வெட்டிச் சாய்ப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (8)

அண்டங்கள் திரண்டு போற்றிடும் வணங்கிடும் எங்களின் வெற்றித் திருமகளே
சங்கரன் கவனத்தைக் கவர்ந்திட நடமிட கிண்கிணிச் சலங்கைகள் அணிந்தவளே
அர்த்த நாரியாய் அரனுடன் இணைந்து ஆடியும் பாடியும் களிப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (9)

பூ முகத்தினிலே ஒளிரும் சிரிப்பால் ஞானிய ரையும் கவர்ந் திழுப்பவளே
அல்லி மலர்களை மலர்ந்திடச் செய்கின்ற குமுத சகாயனைப் போன்றவளே
நிலைகொள்ளாமல் சுற்றும்கருவண்டுகளைத் தன்னிரு விழிகளாய்க் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (10)

கதிரவன் கதிர்களைத் தாங்கி எதிரொலிக்கும் வெள்ளி மரங்களிடை வசித்திருக்கும்
மல்லரையும்வே டுவர்களையும் வெல்லும்விளையாட்டில் இஷ்டம் உடையவளே
சிவந்த வேர்களுடன் வெள்ளை மலர்கள் தாங்கும் அழகிய கொடியினை ஒத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (11)

வெறியுடன் தாக்கிடும் மதயா னைகளையும் எளிதாய் அடக்கிப் பணியச் செய்வாய்
மூவுல கினுக்கும் ரத்தினம் போன்ற நிலவின் அழ கொத்த இளவரசி
எழிற் புன்னகையால் மனங்களைக் கொள்ளை கொள்ளும் அன்புருவான அலைமகளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (12)

மகிழமலர்களில் அமர்ந்த தேனீக்கள் கமல மலர்களையும் மொய்த்திடவே
அந்தக்கமலம்போல் மனங்கவர் நிறங்கொண்ட மாசற்ற நெற்றியை உடையவளே
கலைகளின் இயல்பாம் நளினம் மிகுந்த அன்னங்கள் தொடர வருபவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (13)

காடுகள் அடர்ந்த தருத் தரங்களிலே தெய்வீகப் பெண்டிர் சூழ்ந்திருக்க
அந்தவண்ண அழகு மலைப் பிரதேசத்தில் மகிழ்வுடன் வசிக்கும் மலைமகளே
கோகிலமும் மிக நாணும்படி தன் புல்லாங் குழலினை இசைப்பவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (14)

இடையினில் ஒளிரும் மஞ்சள் பட்டாடையால் நிலவொளியையும் தோற்கடிப்பவளே
பதம் பணிவோரின் ஆபரணங்களால் நகங்களும் ஜொலிக்க திகழ்பவளே
தங்கமலை உச்சியில் விளங்கும்கலசம்போல் அழகிய தனங்களை உடையவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (15)

கதிரவனையும் விஞ்சும் வலிமை கொண்ட பலஆயிரம் கரங்களை உடையவளே
தாரகாசுரனை எளிதினில் வென்ற வேலவனின் அன்னை ஆனவளே
சுரதா சமாதி இருவருக்கும் மன அமைதியைத் தந்து காத்தவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (16)

உன் மலரடிகளைத் தினமும் போற்றி அன்புடன் துதித்து வணங்கையிலே
தாமரை மலரில் வாசம் செய்யும் உன் திருவருள் எனக்கின்றிப் போய்விடுமோ?
உன் திருவடிகளே சதமென இருக்கையில் செல்வங்கள்ஏதும் என்னை விலகிடுமோ?
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (17)

பொன்னென மின்னிடும் பெருங்கடல் நீரால் உனக் கபிஷேகம் செய்கையிலே
சசியை அடைந்திட்ட சுரபதிக் கிணையாய் சுவர்க்கத்தின் இன்பம் கிடைத்திடுமே
சிவனவன் வசிக்கின்ற உன்மலரடியையே எனக்கும்அடைக்கலமாய்க் கொண்டுவிட்டேன்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (18)

ஒரு முகமாக ஒரு மனதாக உன்னெழில் வதனத்தைச் சிந்தை செய்தால்
இந்திர லோகத்து அரம்பையரும் உன்பக்தரை ஒதுக்கிடத் துணிவதில்லை
அன்பின் பெருக்கால் சுந்தரரைத் தன் பொக்கிஷமாக்கிக் கொண்டவளே
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (19)

எளியோரையும் மிகக் கருணை கொண்டு காப்பவளே எமையும் காத்திடுவாய்
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் அன்னையே உன்திரு வடிசரணம்
துயரங்கள் அனைத்தையும் களைந்திடுவாய் உன்விருப்பப்படி எமை அமைத்திடுவாய்
மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (20)

***

மனதார அழைத்தால் மறுக்காமல் வருவாள்!
அன்போடு அழைத்தால் அரவணைத்து அருள்வாள்!
அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!


அன்புடன்
கவிநயா

Thursday, July 24, 2008

ஆடி வெள்ளி - மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!

K வீரமணி - LR ஈஸ்வரி.....நாடி நரம்பு எல்லாம் புடைக்க...கண்கள் கசிய...ரோட்டோரம் உள்ள எளிமையான மனிதனையும் பக்தியால் திகைக்க வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மனின் பேர்களையும், அவள் இருக்கும் ஊர்களின் பேர்களையும், ஒவ்வொன்றாய் பட்டியல் இடும் பாட்டு - நீங்கள் எல்லோரும் கேட்டு மயங்கி இருப்பீர்கள்!
அதை இன்று, இந்தப் பதிவில், எழுத்து/ஒலி வடிவிலும் கேட்டு இன்புறுங்கள்!

இன்று ஆடி வெள்ளி, இரண்டாம் வெள்ளி!
கிராமம்-நகரம் என்று பாரபட்சம் இல்லாது எங்கும் நிறைந்திருக்கும் ஆத்தா மகமாயி...ஏழை எளியோரின் தெய்வம்!
பார்ப்பதற்கு மூடத்தனம் என்று சில பேருக்குத் தோன்றும்! ஆனால் பொங்கலும், கூழும், குலவையும், வேப்பிலையும், தீமிதியும்...
தமிழகத்தின் ஒட்டுமொத்த எளிய மக்களின் வாழ்வைக் காட்டும் கண்ணாடி. அவர்கள் வாழ்விலும், குடும்பங்களிலும் உள்ள ஒரே பற்றுதல்!

கண்ணன் கீதையில் சொன்னது - ஒரு சிறு இலையாவது முழு மனத்துடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்பது!
அவன் தங்கை மாயி மகமாயிக்கும் அஃதே இலை - அதுவே வேப்பிலை!

இலை கூட உனக்குக் கிடைக்க வில்லையா?
சரி...தண்ணீர் கிடைக்குமே!
தண்ணீர் கிடைக்க வில்லை என்று....யாரும், எங்கும், எப்போதும் சொல்லவே முடியாதே!
கண்ணன் உறுதியாகச் சொல்கிறான்! உன் கண்களில் ரெண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர்! அதை அர்ப்பணி! இதோ அர்ப்பணிக்கிறார் K. வீரமணி!

பாடலைக் கேட்டு பரவசமாக வேண்டுமா? இதோ சுட்டி!
(Currently playing என்று சொன்னாலும்..அந்த "நெறஞ்சு மனசு" சுட்டியைச் சுட்டுங்கள்...It opens the player with an advt first and then the song!)

நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி - உன்னை
நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி!
மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி!
நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி - கண்
இமை போல காத்திடுவாள் மகமாயி!
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே - எங்கள் சமயபுரத்தாள் அவளே!

இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி!
தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி!
முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி - கோலவிழி பத்திரகாளி!
வேண்டும் வரம் தருவாள் என் தாய்....வேற்காட்டுக் கருமாரி!



ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி

நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா

மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் - அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா - அம்மா
தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!


பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்


உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே!
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் - மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா! காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!


இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு - அம்மா
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! - அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் - அம்மா
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!

பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் - அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்!





திருவேற்காடு


சமயபுரம்

மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா


விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா

சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

மண்ணளக்கும் தாயே....
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா



தஞ்சை

வேளாங்கண்ணி

நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே - நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தா!

மண்ணளக்கும் தாயே....
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே....
சென்னையிலே மயிலையிலே அருள்மிகு தேவி முண்டகக் கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே....
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே....
வடநாட்டிலே காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பி்கே மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே....
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே....
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா


மலேசியா-ஜோஹர் பாரு


சிங்கப்பூர்

இவையனைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே -
அம்மா திருவேற்காட்டில் வாழ்.....
கனவிலும் நினைவிலும் இவன் தொழும்
என் சத்திய தெய்வமே....கருமாரியம்மா.....கருமாரியம்மா.....
இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா
அம்மா அம்மா அம்மா....அம்மா

அம்மா...
கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா.....
..
..
..
என்று வேறு மாதிரி இப்போது தொடரும்! பெரீய்ய்ய்ய்ய்ய பாடல்!
அன்புத்தோழி, அப்படித் தொடரும் பாட்டை முந்தைய பதிவுகளில் போட்டாங்க. இதோ சுட்டிகள்! 1 2 3

இன்னமும் தொடரும்...
திருவேற்காட்டில் அன்னைக்கு மந்திரம் முழங்க, குலவை ஒலிக்க, பாடல் தொடர்கிறது...
முடிந்தால் அதை அடுத்த வெள்ளிக்கிழமை இடுகிறேன்!
மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!
பாதாள பொன்னியம்மா! - வாழைப்பந்தல் பச்சையம்மா! நின் தாள் சரண்!

Friday, July 18, 2008

ஆடிவெள்ளியில் அகத்துள் காண்போம்!


மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை
கொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணி
தங்கத்தாமரைக் குளத்தின் அருகே
தங்கிடவந்தாள் கூடல்மா நகரில்!


காமம் அழித்திடக் கருணை கொண்டு
காட்டிய கோலம் கண்டவர் நடுங்கிட
சங்கரன் வந்து கோணத்தில் கட்டிட
கச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்!

பிச்சை எடுக்கும் துணைவனைப் பேண
அன்புளம் கொண்ட அரும்பெரும் தேவி
அகலக் கண்களை அழகாய்க் காட்டி
அமர்ந்ததும் காசி எனும் பெருந்தலத்தில்!

முப்பெருந்தேவியர் முழுவுருக் காண
எப்பதி சென்றால் திருவருள் கிட்டும்
என்றே அலையும் பக்தர் கூட்டம்
அறிந்திட வேண்டும் அகத்தின் உள்ளே!

எங்கே சென்று தேடினும் கிட்டா
அன்பின் உருவம் அமரும் இடமும்
இங்கே எமது இதயத் தாமரை
இதனைப் புரிந்தால் எல்லாம் நலமே!

வெள்ளிக்கிழமைகள் அன்னையின் திருநாள்
ஆடிவெள்ளியோ அனைத்திலும் உயர்வு
ஆடிடும் மனத்தை அசையா நிறுத்தி
அதிலே அவளைக் கண்டிட விழைவோம்!

ஆடும் மயிலாய் ஆடியே வருவாள்
அழகாய் எம்மின் உள்ளில் உறைவாள்
அகமும் புறமும் அவளை நினைந்தால்
அருளைப் பொழிவாள் கருணைக் கடலாய்!

ஆடிவெள்ளியில் அவளை நினைப்போம்
பாடியே நிதமும் பதமலர் பணிவோம்
தேடியே வருவாள் சத்தியம் இதுவே
நாடியே நாமும் நம்பிக்கை கொள்வோம்!


அனைவருக்கும் ஆடிவெள்ளியில் அன்னையின் அருள் கிட்ட வேண்டுகிறேன்!