Monday, May 27, 2013

என் இதயத்தின் ராணி!




சுப்பு தாத்தாவால் மட்டும் தான் இப்படி அனுபவித்து, உணர்வு பூர்வமாகப் பாட முடியும்! மிக்க நன்றி தாத்தா!




நீயே என் தேவி
(என்) இதயத்தின் ராணி
தாயே உன் தாள் நீ
(என்) தலை வைத்து ஆள் நீ!

இதழ்க் கடையின் சிரிப்பாலே
மனக் கவலை தீர்ப்பாய்
புகழ் கூறும் அடியவர்க்குப்
புகல் தந்து காப்பாய்!

அம்மா உன் திரு நாமம்
அறியாமல் சொன்னாலும்
அன்பே என்றோடி வந்து
அர வணைத்துக் கொள்வாய்!

பொன் போன்ற மனதோடு
பூக் கொண்டு தந்தாலும்
பூ விழியில் நீர் புரள
புள கித்து ஏற்பாய்!

உன் அன்புக் கிணையில்லை
உனைப் பற்ற பிணையில்லை
உன் போல ஏழுலகில் எவரும் இல்லை
உனைப் பாடும் பணியேயென் இன்பத்தின் எல்லை!


--கவிநயா

Monday, May 20, 2013

அண்டி வந்தேன் உன்னை!



கேதாரம் மற்றும் முகாரியில் உணர்வுகளைக் குழைத்து சுப்பு தாத்தா பாடியிருப்பதைக் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அன்னை அன்னை அன்னை என்று
அண்டி வந்தேன் உன்னையே
முன்னை பின்னை வினைக ளெல்லாம்
தீர்த்து வைப்பாய் அன்னையே!

ஆதியந்தம் ஏதும் இல்லா
அன் புருவே அன்னையே
பூதி பெற்ற முனிவர் களின்
முடி யிருக்கும் அன்னையே!

சோதி யோடு சோதியாகச்
சுடர்ந் தொளிரும் அன்னையே
மேதி னியில் எவரெனக்கு
பற்றிக் கொண்டேன் உன்னையே!

சோதனை மேல் சோதனைகள்
சூழ்ந் திருக்கும் போதிலும்
நாதமுன்றன் நாம மென்று
நம்பிக்கை தா அன்னையே!

பாவியேனும் பாவம் பலவும்
செய்தி ருக்கும் போதிலும்
பாதங்களைப் பற்றி விட்டேன்
பரிவு செய்வாய் அன்னையே!

நாதி யற்ற நாயனுக்கு
நல்ல வழி காட்டுவாய்
போதி மரமாகி வந்து
மாய இருள் நீக்குவாய்!


--கவிநயா

Monday, May 13, 2013

நெஞ்சில் வந்த சந்தம்




சந்தம் ஒன்று வந்து என்றன் நெஞ்சினிலே 
நின்றது நின்றதம்மா
சங்கத் தமிழினில் சிந்து ஒன்று பாட 
வந்தனம் தந்ததம்மா

ஓடி வந்த தென்றல் மூங்கில் துளை வழி
மெட்டொன்று தந்ததம்மா
பாடி வரும் சின்னக் குயில் போலெனக்கு
பாட்டொன்று வந்ததம்மா

தேடி உன்னைக் காண நாடி வந்து நாவில்
நர்த்தனம் செய்ததம்மா
ஆடி வரும் வண்ண மயிலைப் போல்மனம்
ஆட்டங்கள் போட்டதம்மா

துள்ளி வருகின்ற மானினம் போல்தமிழ்
துள்ளியே வந்ததம்மா
கள்ளிருக்கும் பூவைப் போலவே விரிந்து
தீங்கவி தந்ததம்மா

செல்லம் உன்னைப் போற்றிப் பாடப் பாடமனம்
வெல்லமாய் தித்திக்குதே
கள்ளம் இல்லாப் பிள்ளை வெள்ளை உள்ளம் எங்கும்
கள்ளூறிக் கிடக்குதே

கண்ணே கண்மணியே கற்கண்டே என்றுன்னைக்
கொஞ்சிக்கொஞ்சி மகிழ்வேன்
காலமெல்லாம் தமிழ்ப் பாக்களால் உனக்கு
மாலைசூட்டி மகிழ்வேன்!

--கவிநயா

படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/01/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80/

Friday, May 10, 2013

எப்போ ??

   

                    எப்போ ??
(மிகவும் பொருத்தமான ராகத்தில் சுப்புசார்  பாடுகிறார் :

http://www.youtube.com/watch?v=PbnM5WFW_rc&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )


அப்போ: 

நாடகத்திலே நடிக்கப் 
பேதை என்னை அழைத்து ,
வேடமெல்லாம் பூணவைத்து
மேடையிலே ஏற்றிவிட்டாய்.

தாய் நீயே  நாடகத்தின்
நாயகி என்றறிந்ததுமே 
மாயே !அதில் நடிக்க 
சேய்நானும் தயங்கவில்லை .

நடித்தபடி இருந்த என்மேல் 
அடிவிழுந்து நான் துடிக்க ,
"நடப்பதெல்லாம் நடிப்பு-அடி 
பொறுத்தலுமோர் படிப்பு"என்றாய் 

"மெய்யடியார் மீது விழும்
 பொய்யடியே பேரிடியா ?
 ஐயோ !"என்று நானலற ,
"தொய்யாதே"எனத்தடுத்தாய் .

விடம் விழுங்கி இடமுறையும்
மடவாளே !கடையனுக்கு
விடம் விழுங்கும் வித்தையையும்
படிப்படியாய்ப் பயிற்றுவித்தாய் .

அடி=அன்பு ,இடி= இன்பம் ,
விடம்=விருந்து என்றுரைக்கும் 
புதிய அகராதியொன்றைப்
பரிசாக எனக்களித்தாய் .

இப்போ:

டவூரில் அமர்ந்தென்னைப் 
புடம்போடும் அபிராமி!
அடிவாங்க,இடிதாங்க ,
விடம்விழுங்கப் பழகிவிட்டேன்.

பாத்திரந்தனை  உணர்ந்து  
நேர்த்தியாக நடித்தபடி 
காத்திருக்கேன்  அடித்தகைதான்   
சேர்த்தணைக்கும்  என்றுநம்பி .

எப்போ ??

ஆடகத்தாமரையே!உன்
நாடகம்  முடிவதெப்போ?
வேடம் களைந்துனை நான்
கூடுவது  எப்போ?எப்போ??







 

Monday, May 6, 2013

நீ இல்லாத எடமே இல்ல!



இந்த முறையும் மீனாட்சி பாட்டி, சுப்பு தாத்தா இரண்டு பேருமே அருமையாகப் பாடித் தந்திருக்கிறார்கள். மிக்க நன்றி, பாட்டீ, தாத்தா!



எத்தனையோ பேருனக்கு
ஒலகமெல்லாம் ஊருனக்கு
ஆத்தா நீ இல்லாத எடமே இல்ல, ஒன்ன
பாத்தாலே தீந்து போகும் வெனையின் தொல்ல!

படிச்சவராய் இருந்தாலும்
பாமரராய் இருந்தாலும்
ஆத்தா ஒன் பேர மட்டுஞ் சொன்னாப் போதும், நம்ம
தொரத்தி வரும் தொயரெமெல்லாம் தெறிச்சே ஓடும்!

கட்டுமரம் அலபாஞ்சா
காத்தாக வருவாயே
ஆத்தா ஒன் அன்புக்கு எல்ல இல்ல, அத
பாத்த பின்ன வேற ஒண்ணுந் தேவை இல்ல!

பட்ட மரம் துளுக்குறதும்
பலபலனு பூக்குறதும்
ஆத்தா ஒன் பார்வ பட்டா நடக்கும் ஆத்தா, நீ
பாத்துபுட்டா எம் மனசும் பூக்கும் ஆத்தா!


--கவிநயா