Monday, January 27, 2020

ஒரே ஒரு முறை...



ஒரு முறை எந்தன் எதிரினில் வந்து
தரிசனம் தருவாயோ, அம்மா
தரிசனம் தருவாயோ?
கரிசனமாக என்முகம் பார்த்து
கனிவுடன் சிரிப்பாயோ, அம்மா
கனிவுடன் சிரிப்பாயோ?
(ஒரு முறை)

கண்ணீர் போதும் என்பாயோ, எனை
நெஞ்சோடணைத்துக் கொள்வாயோ?
(என்) உளறல் கேட்டு மகிழ்வாயோ?
உவகை மீறக் களிப்பாயோ?
(ஒரு முறை)

உலகினில் பிறந்து உழலும் பேதை
நீயே கதியென உணரும் வேளை
பேதியென் குரலைக் கேட்பாயோ?
வாதை தீர்க்க வருவாயோ?
(ஒரு முறை)

சொந்தம் பந்தம் எல்லாம் மாயை
உண்மைச் சொந்தம் நீயே தாயே
அழைத்தேன் உன்னை வருவாயோ?
அணைத்தே ஆறுதல் தருவாயோ?
(ஒரு முறை)


--கவிநயா

Monday, January 20, 2020

காக்க வா!



ஆதி சிவை அம்பிகையே
பாதி சிவன் ஆனவளே
ஏழுலகம் ஆக்கி வைத்த எங்கள் தேவியே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே
(ஆதி)

பாசமுடன் சென்னியிலுன்
பாதமலர் சூடிக் கொண்டோம்
பக்தருக்காய் இரங்குகின்ற எங்கள் தேவியே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வா நீயே
(ஆதி)

போதும் இந்தப் பிறவியென
தேடி உன்னைச் சரணடைந்தோம்
அடைக்கலமாய் எங்களை நீ ஏற்க வேண்டுமே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே
(ஆதி)

அஞ்சலென்று நீ சொன்னால்
அந்தச் சொல்லே போதுமம்மா
அஞ்சுகமே உன்னை நிழலை அண்டி வந்தோமே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காக்க வேண்டுமே
(ஆதி)

நெருப்பிலிட்ட பஞ்சு போலத்
துன்பமெல்லாம் தூசாகக்
கடை விழியால் எம் திசையில் பார்த்தருள்வாயே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே
(ஆதி)

வாழும் வரை உன் நினைவே
வாழ வேண்டும் எம்முடனே
வந்து எங்கள் நெஞ்சினிலே குடியிருப்பாயே, உன்னை
நாடி வந்தோம் எங்கள் குலம் காத்தருள்வாயே
(ஆதி)



--கவிநயா

Monday, January 13, 2020

அம்மா, வா!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
அன்னையின் அருள் போலப் பொங்கலும் பொங்கட்டும்!


அம்மா உந்தன் நினைவில் உயிர் வாழுகிறேன்
பண்ணில் உனைப் புனைந்து தினம் பாடுகிறேன்
(அம்மா)

கண்ணோடும் கருமணியோ, பண்ணோடும் கருப்பொருளொ,

வானோடும் வெண்ணிலவோ, தேனோடும் தீஞ்சுவையோ
(அம்மா)

இதயத்தில் உன்னை வைத்து, புதையலைப் போலக் காத்தேன்

மதிமுகப் பெண்ணே நீயே கதியென ஆகி விட்டேன்

தாலாட்டுப் பாடி எந்தன் துன்பம் தீர்க்க வா

பாராட்டிப் பாடும் எந்தன் பாடல் கேட்க வா
(அம்மா)


--கவிநயா

Monday, January 6, 2020

சக்தி ஓம்!



சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்
சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி சக்தி ஓம்

ஆதி சக்தி அண்டமெல்லாம் ஆக்கித் தந்த சக்தி ஓம்
மூல சக்தி மூன்று மூர்த்தி வணங்குகின்ற சக்தி ஓம்

வேத சக்தி தேவரெல்லாம் தொழுது பணியும் சக்தி ஓம்
நாத சக்தி நலங்களெல்லாம் அள்ளித் தரும் சக்தி ஓம்

முக் குணங்கள் கொண்டு உலகைப் படைத்தழிக்கும் சக்தி ஓம்
தாய்க் குணத்தால் உயிர்களெல்லாம் காத்தருளும் சக்தி ஓம்

காலம் வென்று காளியாகத் தோற்றம் கொண்ட சக்தி ஓம்
ஞாலமெல்லாம் போற்றுகின்ற ஆதி தேவி சக்தி ஓம்

மாய பந்தம் தந்து நம்மைக் கட்டி வைக்கும் சக்தி ஓம்
ஞானம் தந்து மாயந் தன்னை வேரறுக்கும் சக்தி ஓம்

தவத்தில் நிலைத்த முனிவரெல்லாம் தாழ்ந்து பணியும் சக்தி ஓம்
மனத்தில் வைத்துப் போற்றி வந்தால் முக்தி தரும் சக்தி ஓம்


இதயம் என்னும் தாமரையில் அமர்ந்து ஆளும் சக்தி ஓம்
உதயமாகும் கதிரவன் போல் ஒளி வழங்கும் சக்தி ஓம்

சரணமென்று வந்தவர்க்கு சாந்தி தரும் சக்தி ஓம்
சஞ்சலங்கள் தீர்த்து நம்மை வாழ வைக்கும் சக்தி ஓம்


--கவிநயா