Monday, August 25, 2008

சிவகாமி அம்மை பஞ்சகம்


அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ
ஆள்கின்ற அரசியும் நீ
கணுவிற்குள் கணுவும் நீ கரும்புக்குள் சுவையும் நீ
கருணைக்கு எல்லையும் நீ
விண்ணும் நீ மண்ணும் நீ விகசிக்கும் ஒளியும் நீ
வேதத்தின் மூலமும் நீ
பண்ணும் நீ பனுவல் நீ புலவர்க்கு பொருளும் நீ
பாருக்கு அன்னையும் நீ
அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே
அன்புவடி வான உமையே
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக
என்றைக்கு நீ வருவாய்?
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை
என்றைக்கு நீ தருவாய்?
மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக
என்றைக்கு நீ வருவாய்?
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக
என்றைக்கு நீ ஒளிர்வாய்?
இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை
வழிகாட்ட நீ வருவாய்
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை
மருள்நீக்க நீ வருவாய்
நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை
வளம்சேர்க்க நீ வருவாய்
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு
வலிதீர்க்க நீ வருவாய்
கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு
காப்பாற்ற நீ வருவாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

வேரற்ற மரமாகி வீழ்ந்து விட்டேன் அம்மா
வேராக நீ வருவாய்
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா
மருந்தாக நீ வருவாய்
பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா
பாதையாய் நீ வருவாய்
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா
நலம்செய்ய நீ வருவாய்
பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்
தாயுனக் கழகுதானோ?
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்
பொறுத்தருள வேண்டுமம்மா
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை
காத்தருள வேண்டுமம்மா
அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே
சரணென்று பணிந்து விட்டேன்
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை
மழைநனைய வந்து விட்டேன்
நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே
தந்தெனக்கு அருளிடு வாய்
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற
ஆதிசிவ சக்தி தாயே!

--கவிநயா

படத்துக்கு நன்றி: கீதாம்மா

Monday, August 18, 2008

மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி!


மாகாளி ஸ்ரீகாளி தஷிணக் காளி
தஞ்சமென் றுனைப்பணிந்தேன்
இக்கணம் வாடி!

ஓங்காரி ரீங்காரி உஜ்ஜயினிக் காளி
ஓடோடி வந்தேன்நான்
உன்நிழல் தேடி!

இருள்நிறம் கொண்டிருக்கும் கருநிறக் காளி
அருள்எனும் ஒளியேற்றி
மருள்நீக்க வாடி!

விரிந்திருக்கும் விழியிரண்டும் சிவந்திருக்கும் காளி
பரிந்தென்னைக் காத்திடவே
விரைந்திங்கு வாடி!

இடுகாட்டில் குடியிருக்கும் ஸ்ரீபத்ர காளி
கருங்காட்டில் அலைகின்றேன்
வழிகாட்ட வாடி!

தில்லையிலே நடனமிடும் திகம்பரக் காளி
என்னிதய மேடையிலே
பதம்பதிக்க வாடி!

குருதியைக் குடித்தாடும் சாமுண்டி காளி
குழைந்துன்னை அழைக்கின்றேன்
மகிழ்ந்திங்கு வாடி!

அலைபாயும் கூந்தலுடை ஆங்கார காளி
ஆசையாய் அழைக்கின்றேன்
அன்னையே வாடி!

கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி
கர்மவினை களைந்திடவே
கருணைகொண்டு வாடி!

திரிசூலம் ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்
திருவடிகள் சிந்தையிலே
நிறுத்தும் வரம் தாடி!!

--கவிநயா

Sunday, August 17, 2008

"அம்மன் தரிசனம்"

"அம்மன் தரிசனம்"

கவிநயா ஒரு அற்புதமான மீனாக்ஷி அம்மன் படத்தைப் போட்டிருந்தார்.
ரோகிணியும் எனது "ஆடித்தேர் வருகுதம்மா" பதிவில் ஒரு தொடர்கவிதை இப்படி ஆரம்பித்து வைத்தார்.

"ஆடி ஆடி வருகுதம்மா
ஆடித்தேர் வருகுதம்மா

தேடித் தேடி வந்து நின்றோம்
தேவி உன்னைக் காண‌ வந்தோம்

வாடி வாடி அழுத முகம்
வாட்டம் தீர வணங்கி நின்றோம்

ஓடி ஓடி களைத்து விட்டோம்
உன் மடியில் சாய வந்தோம்

இடி இடியாய் வருவதெல்லாம்
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்

இன்னல் என்று வந்ததெல்லாம்
இன்னிசையாய் மாறக் கேட்டோம்"


இன்று[08/16/08] காலை வரலக்ஷ்மி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.
பூஜை மரியாதைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டாள்.
அதைத் தொடர்ந்து என் மனத்தில் எழுந்த வரிகள் இவை!



வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனம் செய்வது இங்கே சிறப்பாகும்!

வடிவுடையாளின் வண்ணமுகத்தைக் காண்பது மனதுக்கு இனிதாகும்!

நுதலில் துலங்கும் குங்குமச்சிவப்பில் குற்றங்கள் யாவும் மறைந்தோடும்!

மீன்விழியாளின் மருளும் விழிகள் கண்டிட இங்கே கலிதீரும்!

மூக்குத்தி அழகைக் கண்டால்போதும் மனதில் மகிழ்ச்சி மிகவாகும்!

செவ்விதழ் காட்டும் சிரிப்பில் கவலைகள் எம்மைவிட்டு விரைந்தோடும்!

செவ்வாய்மொழிகள் கேட்டிடக் கேட்டிட களிப்பும் நெஞ்சில் குடியேறும்!

பட்டுக்கன்னம் காட்டும் செம்மையில் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!

செவிமடல் ஆடும் குண்டலவொலியில் செய்தன யாவும் கழிந்துவிடும்!

அலையாய் விரியும் கூந்தல் அழகினில் அலைபோல் துன்பம் நீங்கிவிடும்!

அல்லிக்கைகள் அருளும் அழகில் அன்பே இங்கு அணைந்தேறும்!

கைவளை குலுங்க அசைந்திடும் அழகில் ஆசைகள் உள்ளில் மிகவாகும்!

குலுங்கும் கொங்கைகள் சுரக்கும் அமுதினில் பசியும் இங்கே பறந்தோடும்!

இடையில் திகழும் மேகலை ஒலியில் இன்னிசைக் கீதம் செவிமடுக்கும்!

கட்டுடல்மேனி கண்டதும் மனதில் கசடுகள் எல்லாம் கரைந்தோடும்!

பிஞ்சுப்பாதம் மிஞ்சும் மிஞ்சில் நெஞ்சம் இங்கே தள்ளாடும்!

மாவிலைவிரல்கள் முன்னே வருகையில் மோஹனம் எதிரே நடமாடும்!

முன்னழகில் மனம் தடுமாறும்! பின்னழகில் மனம் தள்ளாடும்!

அம்மன் தரிசனம் அழகாய்க் கண்டதில் ஆனந்தம் இங்கே மிகவாச்சு!

அம்மா உந்தன் அருளைக் காட்டி அடியேன் வாழ்வில் விளக்கேற்று!
***********************

Thursday, August 14, 2008

"ஆடித் தேர் வருகுதம்மா!" -- ஆடிவெள்ளி 5-ம் பதிவு

"ஆடித் தேர் வருகுதம்மா!"
ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!

அழகுமிகு தொம்பைகளும் அந்தரத்தில் ஆடிவர
வாழை, தெங்கு குலைகளுமே அடுக்கடுக்காய் அசைந்துவர
குழைந்திருக்கும் பக்தர்கூட்டம் வடமெடுத்து இழுத்துவர
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!

ஓரசைவில் பார்த்திருந்தால் சிறுகுழந்தை தவழுதல்போல்
மறுபக்கம் பார்த்திருந்தால் சின்னப்பெண் நடப்பதுபோல்
இன்னொருபுறம் பார்த்தாலோ பருவப்பெண் குலுங்குதல்போல்
சிலநேரம் வயதான மூதாட்டி தளர்நடைபோல்.......
காட்டியிங்கே ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!

அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!

சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!

இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!

ஊரிருக்கும் இடமெல்லாம் தாயாரே நீயிருப்பாய்
உன்பிள்ளை கணபதியை உன்னுடனே வைத்திருப்பாய்
தடையேதும் வாராமல் உனைக்காண அவன் அருள,
தயவெல்லாம் தந்திடவே நீயென்றும் அருளிடுவாய்!

ஆற்றங்கரை மணலெடுத்து ஆடியிலே தவமிருந்தாய்
கூற்றுவனை உதைத்திட்ட இடக்காலாய் நீயிருந்தாய்
குற்றமிலா பட்டருக்கு நிலவொளியாய் நீ வந்தாய்
ஏற்றிடுவாய் என் துதியை! எல்லார்க்கும் அருளிடுவாய்!

தேரோட்டம் கூட்டிவந்து ஊர்நிலையைக் காட்டுகின்றோம்
வேறோட்டம் இல்லாது கூழூற்றிக் குளிர்கின்றோம்
ஏரோட்டம் நடப்பதற்கு நீர்நிலையைத் தந்திடுவாய்
பாரெட்டும் புகழ்பாடும் பத்தினியே பொழிந்திடுவாய்!

ஆதவனைக்கண்டதுபோல் என்மனமும் மலர்கிறது
திங்களைக் கண்டதுபோல் என்னுள்ளம் குளிர்கிறது
செவ்வாயில் சிரிப்பெல்லாம் காட்டியெனை மகிழ்த்திடுவாய்
பொன்புதனாய் என்வாழ்வில் புத்தொளியை ஊட்டிடுவாய்
குருவாக நீவந்து திருவருளைக் காட்டிடுவாய் - விடி
வெள்ளியென நம்பிக்கை எனக்கூட்டி நிறைத்திடுவாய் - வி
சனிக்கும் கவலைகளை நீ விரட்டிக் காத்திடுவாய்
நின்னடியில் என்காலம் நிறைவுபெறச் செய்திடுவாய்!

****************************

Monday, August 11, 2008

மதுரையிலே அவள் மீனாக்ஷி


வெள்ளிக் கெண்டைக் கண்ணழகி
துள்ளிச் செல்லும் மானழகி
அள்ளித் தரும் அன்பழகி
தங்கத் தமிழ்ப் பேரழகி

வைகைநதிக் கரை யோரம்
வாகாய்நீ வீற்றி ருப்பாய்
பொய்கையிலே தாமரை போல்
பூத்துச் சிரித்தி ருப்பாய்

மலையத் துவச னுக்கு
மகளாய் பிறந்து வந்தாய்
திக்விஜயம் செய்து வந்தாய்
திக்கெட்டும் வென்று வந்தாய்

சுந்தரரைக் கண்ட பின்னே
சொக்கிப்போய் காதல் கொண்டாய்
மனம்போல் மணம் முடித்தாய்
மதுரையை ஆண்டு வந்தாய்

மீனாள் உன்பெயர் சொன்னால்
தேனாறு ஓடுதடி
தானாக வினைகளெல்லாம்
காணாமல் போகுதடி

பூவை உன்னைப் பார்த்திருந்தால்
பூவுலகம் மறக்குதடி
பாவை யுன்னைப் பாடிவந்தால்
பாவமெல்லாம் கரையுதடி

நீயேந்தும் கிளியாக
நான் மாறக் கூடாதோ? - உன்
காலடியில் ஒரு மலராய்
நான் சேரக் கூடாதோ?

--கவிநயா

மீனாக்ஷி அம்மையின் படத்துக்கு நன்றி: http://sss.vn.ua/india/tamilnadu/madurai/meenakshi_en.htm

Thursday, August 7, 2008

"என்னுள்ளே வா!"

"என்னுள்ளே வா!"
ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!
தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்
கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றது
நாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்!

நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியது
ஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்தது
விருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்
வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்!

காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமா
மோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மா
நாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்
ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்!

என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்
முன்நின்ற மக்கள்தலை அதனை மறைத்தது
என்னெதிரே அப்போதொரு குழந்தை வந்தது
என்னைப் பார்த்துச் சிரித்தபடி அருகில் நின்றது!

பெண்ணழகைப் பார்த்துநின்றேன் கண்நிறைந்தது
வண்ணமுக வடிவினிலே உளம் நிறைந்தது
மீன்விழிகள் தேனிதழ்கள் பட்டுக்கன்னம்
பால்போலும் சிரிப்பலைகள் பட்டுப்பாவாடை!

அலைபாயும் கூந்தலையே அளவாக முடிந்திருந்து
விலையில்லாப் பொன்நகைகள் கைகளிலே அணிந்திருந்து
பிஞ்சுமலர்ப்பாதங்களில் கொஞ்சுகின்ற கொலுசணிந்து
வட்டநிறைப் பொட்டிட்டு கைகட்டி எதிரில்நின்றது!

தேவமகள் இவள்தானோ என்றொருகணம் நினைத்திட்டேன்
பூவினைப்போல் பொலிந்தவளைப் பார்த்தே சிரித்திட்டேன்
'சாமி பாக்கப் போகலியா'வென எனைப் பார்த்துக் கேடது
'கூட்டம் சற்று குறைந்தபின்னர்..' என இழுத்தேன்! பெண் சிரித்தாள்!

'உள்ளேயா? வெளியிலா?' என்றவளின் சொல்கேட்டு அதிர்ந்துபோனேன்
'என்னவிங்கு சொல்லுகிறாய்?' என ஒன்றும் புரியாமல் கேட்டேன்
'கூட்டமிங்கு குறையாது! நீதான் குறையணும்' என்று மேலும் சொன்னாள்
'நானெப்படிக் குறைவது?' மீண்டும் அவளைப் பார்த்துக் கேட்டேன்!

'பார்க்கணும்னு ஆசைவைச்சா, கூட்டமெல்லாம் ஒண்ணுமில்ல!
நோக்கமிங்கு ஒண்ணானா பாக்கறதும் ஒண்ணாயிடும்!
சேர்த்ததெல்லாம் தொலைச்சுபுட்டு சீக்கிரமா வந்துசேரு!'
சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள்! விக்கித்து நின்றேன் நான்!

எனைத் தேற்ற என்னன்னை என்முன்னே வந்தாளா?
எனைக் காட்டி எனைக் காட்ட என்னையேதான் தந்தாளா?
எனைக் குறையச் சொல்லியிவள் என்னவிங்கு சொல்லிப்போனாள்?
பிறர்குறையைப் பார்ப்பதிங்கு உனக்கெதுக்கு என்றாளா?

ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து
வேசமேதும் போடாமல் வீம்பெதுவும் செய்யாமல்
அசையாத மனத்துள்ளே அவளை வைத்திருந்தால்
பூசனைகள் தேவையில்லை தேவியவள் வந்திருப்பாள்!

ஆடிவெள்ளி நன்நாளில் அன்னையவள் அருள்வேண்டி
ஆலயத்துள் செல்லுகையில் அனைத்தையுமே மறந்திருப்போம்
அடிமனத்தில் அன்போடு அனுதினமும் நினைத்திருந்தால்
ஆலயமும் செல்லவேண்டா! அன்னையிவள் ஓடிவருவாள்!

படித்ததெல்லாம் பயிற்சியினால் மட்டுமே பயனாகும்
படித்ததுவும் பிடித்ததுவும் இத்தோடு போதுமிங்கு
படித்ததெல்லாம் பயின்றிடுவோம் நலிந்தவரை வாழவைப்போம்
அவரெல்லாம் சிரிக்கையிலே அங்கேநாம் அன்னையைக் காண்போம்!


ஏதோ ஒன்று புரிந்ததுபோல் இருந்தது
தலையைத் திருப்பி சன்னதியைப் பார்த்தேன்
கூட்டம் குறைந்திருந்தது! கர்ப்பக்கிரகம் தெரிந்தது!
அன்னை சிரித்திருந்தாள்! அன்போடு எனைப்பார்த்து!


அனைவருக்கும் [நாலாம்] ஆடிவெள்ளி வாழ்த்துகள்!

[பலநூல் படித்து நீயறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!]
இந்த வரிகளின் உந்தலே இக்கவிதை!

********************

ஆடி வெள்ளி: ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!

ஆதிபராசக்தி-ன்னு ஒரு படம் வந்துச்சி ரொம்ப நாள் முன்னாடி! எப்போன்னு எல்லாம் எனக்குத் தெரியாது! ஆனா சின்ன புள்ளையா இருக்கச் சொல்ல, டீவில போட்டுக் காட்டுவாய்ங்க! அதுல ஒரு சூப்பர் சீன்!

மீன்காரச் செம்படவன் சுருளிராஜன், அம்பாளைப் பார்த்த மாத்திரத்தில், மனசே உருகிப் போய் பக்தி பண்ணக் கூடிய நல்ல உள்ளம்!
இத்தனைக்கும் தான் பண்ணுறது பக்தி-ன்னு கூடத் தெரியாது! ஏதோ அம்மா-ன்னா அம்புட்டுப் பாசம்! அம்புட்டு தான்!
நம்பியார் (சாமியார்) தினமும் ஆத்துல போய் ஏதோ மந்திரம் சொல்லிக்கிட்டே குளிப்பார். அதை பார்த்த சுரளிராஜன் சாமி என்ன பண்ணறீங்கனு கேட்பார்.
இவரு ஏதோ மந்திரம் சொல்லி அதை சொல்லி மூச்சை அடக்கி தண்ணில மூழ்கி எழுந்திரிச்சா சாமி கண்ணுக்கு முன்னாடி வருவானு சொல்லுவார்.
சுரளிக்கு அந்த மந்திரம் வாய்லயே வராது. அதனாலா மாரியாத்தா காளியாத்தானு சொல்லு போதும்னு சொல்லிடுவாரு.

இவருக்கு படையலுக்கு நேரமாகிட்டே இருக்கும். அதனால சுரளிக்கிட்ட இருந்து சீக்கிரம் தப்பிக்கனும்னு வேக வேகமா சொல்லுவாரு.
சாமி கண்ணுக்கு தெரியுமானு சுருளி திரும்பவும் கேட்பாரு. அதுக்கு நம்பியார், நிச்சயம் தெரியும்னு சொல்லிடுவாரு :-)

இவரும் மாரியாத்தா காளியாத்தானு சொல்லி மூச்சை அடக்கி மூழ்க ஆரம்பிப்பாரு. முதல்ல சாமி வராது. ஒரு வேளை நம்ம சரியா அடக்கலயோனு ரொம்ப நேரம் மூச்சையடுக்குவாரு. கொஞ்சம் விட்டா ஆளே அவுட்ங்கற நிலைமை வரும் போது,
அப்போ அவரின் உறுதியை மெச்சி, அன்னை காட்சி கொடுத்து, அவர் குடிசைக்குத் தானே வருவாங்க!

அன்னையைக் கையும் ஓடாம, காலும் ஓடாம, அவங்க உபசரிக்கிற அழகு! அவளுக்குச் சோறு ஊட்டுகிற அழகு! அன்னையும் அவர்களும் பேசிக் கொள்ளும் உரையாடல்!
அதன் பின்னால் மந்திர கோஷ்டியின் ஆலயத்தில் போய் பார்க்கும் போது, அன்னையின் நைவேத்திய பிரசாதங்களை, அவர்கள் வச்சிக் கட்டும் காட்சி...
அதைப் பார்த்து சுருளி மயக்கம் போட்டு விழாத குறை-ன்னு அத்தனை சீனும் சூப்பரா இருக்கும்! :))
நீங்களே பதிவின் இறுதியில் வீடியோவில் பாருங்க!


அதுக்கு முன்னாடி இன்றைய ஆடி வெள்ளி ஸ்பெஷல்...சுருளி பாடும் அழகான பூவாடைக்காரி பாட்டு! ஆத்தா வரலையே-ன்னு ஏக்கத்துல பாடுறதை, சீர்காழி தன் கணீர் குரலில் வெளிப்படுத்தி இருப்பாரு!
நடுநடுவே லலிதா சகஸ்ர நாமத்தில் இருந்து மந்திர உச்சாடனங்கள்! அதையும் கொடுத்துள்ளேன்!

ஆடி வெள்ளியன்று கேட்டு மகிழ்ந்து, உங்கள் வீட்டுக்கும் அன்னையை வரச் சொல்லி வேண்டுங்கள்!

எங்கள் வாழைப்பந்தல் கிராமத்துப் பச்சையம்மனுக்கு, ஆடி மாசம் கூழு ஊத்திப் பொங்கலிட்டு, வெல்லம் கலக்காது, கோயிலில் படைப்போம்!
பூவாடைக்காரியைப் பச்சைப் புடைவையில் ஒரு பெண் உருவம் போல் சுற்றிச் சுற்றி அம்மா கட்டுவாங்க! அதற்கு காதோலை கருகமணி சார்த்தி, வேப்பிலை முறத்தில் ஏற்றி, அந்த அம்மனை வீட்டுக்கு அழைத்து வருவோம்!

வீட்டுக்கு வந்து இன்னொரு முறை பொங்கலிட்டு, அப்போது வெல்லம் கலந்து, படைப்போம்!
வெல்லம் இல்லாத பொங்கலைக் கோயிலில் உண்டவள், வெல்லச் சுவைப் பொங்கலும் உண்ண வீடு தேடி வருவாள் என்பது சுவையான கற்பனை!
படையலை இலையில் படைக்காது, பூசையின் முன்னால், வெறும் தரையில் பரப்பிப் படைப்பதும் கிராமத்து வழக்கம்!

(இதே தரையில் படைக்கும் வழக்கம், திருப்பாவாடை என்று தனியாக ஒரு சேவை வைத்து, திருவேங்கடமுடையான் சன்னிதியில் படைக்கிறார்கள்! இந்த முறை இந்தியப் பயணத்தில் தான் பார்க்க நேர்ந்தது! கிராமத்து வழக்கம் இங்கே எப்படி? என்று வியந்து போனேன்...பிறகு சொல்வேன்)

வெறும் சோறோ, சாதாக் குழம்போ, சர்க்கரைப் பொங்கலோ...சட்டியுடன் அன்னையின் முன்னால் வைத்து, நாலு வேப்பிலை கிள்ளிப் போட்டு, "பூவாடைக்காரி தாயே பாலு", என்று கும்பிட்டு உண்பது, இன்றும் எங்கள் கிராமத்து வீட்டில் உண்டு!
அந்த கூழும், வெல்லம் வச்ச அரிசிச் சோறு உருண்டையும் இன்னும் அடியேன் நாவில் இனித்துக் கொண்டு தான் இருக்கு!


* இதோ பாடல்! ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!
(சிறிது விளம்பரத்துக்குப் பின் தான், பாட்டு வருது!)

** இன்னொரு சுட்டி, விளம்பரம் இல்லை! ஆனால் நீங்கள் கிளிக்கி, கேட்க வேணும்! இதோ!
அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்
த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்
அனிமாதி அபிர வ்ருத்தாம்
மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்
த்யாயேத் பத்மாசன ஸ்தாம்


பூவாடைக் காரி பொன்னழகி உனக்குப்
பொங்கலிடக் கிடைச்சது பாக்கியம் எனக்கு
மீன்காரன் வீடெங்கும் மீன்வாசம் இருக்கும்-அடி
மீனாட்சி நீ வந்தா நெய்வாசம் அடிக்கும்

ஆத்தாடி மாரியம்மா-சோறு
ஆக்கி வெச்சேன் வாடியம்மா
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்
தின்னு புட்டுப் போடியம்மா

(ஆத்தாடி மாரியம்மா)

ஸ்ரீ வித்யாம் சாந்த மூர்த்திம்!
சகல சுர நுதாம்! சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்!

பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரலே-ஆடிப்
பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரலே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரலே-நான்
மூச்சடிக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்!

(ஆத்தாடி மாரியம்மா)

ச குங்கும லேபன, மல்லிகா சும்பி கஸ்தூரிகாம்!
சமந்த ஹசி தேட்சணாம், ஹரி ஹராம், ராஜ ராஜேஸ்வரீம், அம்பிகானாம்!


சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி-புது
சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ர காளி ருத்ர காளி பாரடியம்மா-இந்தப்
பாவி மகன் வீட்டுல வை ஓரடியம்மா!
(ஆத்தாடி மாரியம்மா)

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: ஆதிபராசக்தி
இசை: கேவி மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்


என்னாங்க, ஆத்தாளை வீட்டுக்குக் கூப்பிட்டாச்சா?
ஆத்தாடி மாரியம்மா! சோறு ஆக்கி வெச்சேன் வாடியம்மா!
ஆத்தா, பொன்னி அரிசி, இங்கு யானை விலை, குதிரை விலை விக்குது!
பத்து கிலோ பை, 22 டாலருக்கு விக்குறாங்க! அதுனால ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், தின்னு புட்டுப் போடியம்மா! :))


Monday, August 4, 2008

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி


மாங்காட்டுத் திருத்தலத்தில்
காமாக்ஷி என்றபெயர்
கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா!

பூங்காற்றுபோல நெஞ்சம்
தழுவுகின்ற கருணையினால்
எமைஆட்சி செய்திருக்கும் அம்மா!

அக்கினியின் நடுவினிலே
முக்கண்ணனை வேண்டி
உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!

ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!

பற்றனைத்தும் விட்டுவிட்டு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!

இற்றைக்கும் ஏழேழு
பிறவிக்கும் உன்னடிகள்
போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!

மூவிரண்டு வாரங்கள்
மனமொன்றி வேண்டி நின்றால்
மறுக்காமல் அருள்கின்ற அம்மா!

நாவினிக்க உன்பெயரை
நாள்தோறும் பாடுகின்றேன்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!


--கவிநயா

பி.கு: அன்னை காமாக்ஷியின் திருவுருவப் படத்திற்கு கைலாஷி அவர்களுக்கு நன்றி.