Monday, February 23, 2015

வர வேணும்!


(தாலாட்டு பாட்டு மெட்டில் வந்தது... சுப்பு தாத்தா எந்த மெட்டில் அமைக்கிறார்னு பார்க்க ஆவல்...!)

சுப்பு தாத்தா அமைத்த ஆனந்த பைரவி ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி தாத்தா!



கண்ணே என் கண்மணியே!
கற்கண்டே அற்புதமே!
பொன்னே என் பூவிழியே!
புதுகை நகர் மாமணியே!

வேதங்கள் பாடும் உன்னை
பேதையும் பாடுகின்றேன்!
பேதமின்றிக் காப்பவளே
வேகங்கொண்டு வர வேணும்!

பாகந் தந்த பார்வதியே
பைங்கிளியே வர வேணும்!
நாகங் கொண்ட நாதனுடன்
நாயகியே வர வேணும்!

வானவரெல்லாம் போற்ற
வண்ண மயில் வர வேணும்!
மானிடரெல்லாம் போற்ற
மாதாவே வர வேணும்!

சோகங்களெல்லாம் போக்க
சுந்தரியே வர வேணும்!
மோகங்களெல்லாம் தீர்க்க
முத்தழகி வர வேணும்!

எண்ணுகின்ற எண்ணம் எல்லாம்
ஏந்திழையே வர வேணும்!
சொல்லுகின்ற சொல், பொருளில்
சொக்கனுடன் வர வேணும்!

பண்ணும் செயல் யாவையிலும்
பங்கயமே வர வேணும்!
பார்க்கும் பொருள் யாவையிலும்
பாவை முகமே வேணும்!

வேத வடிவானவளே
விரைந்திங்கு வர வேணும்!
நாத வடிவானவளே
நம்பிக்கை தர வேணும்!


--கவிநயா

Monday, February 16, 2015

நீயே கதி!


சஹானாவில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடியது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


கதி என்று உனை அடைந்தேன் கண் பாரம்மா!
விதி என்னும் வினை மாற்றி எனைக் கா அம்மா!
(கதி)

மாயா விளையாட்டில் மகிழும் மாதவியே!
மாயம் ஏதும் அறியா மகளுக் குதவாயோ?
பாயும் நதி சூடும் பரமன் நாயகியே!
ஓயா தழைக்கின்றேன் உமையே இரங்காயோ?
(கதி)

காலன் வரும் போதும் கலையா மனம் வேண்டும்!
ஆலின் வேர்போல உறுதி அதில் வேண்டும்!
சூலம் கரமேந்தி சுந்தரியே வருவாய்!
மாலின் சோதரியே மனமிரங்கி அருள்வாய்!
(கதி)



--கவிநயா

Monday, February 9, 2015

எல்லாம் உனதருளாலே!



எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!

உமையவளே உள்ளம் உறைபவளே!
இனியவளே ஈசன் இணையவளே!
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!

பகலும் இரவும், சுழலும் புவியும்
விரிந்த வெளியும், வீசும் காற்றும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!

பனியும் வெயிலும், பொழியும் மழையும்
அலையும் கடலும், அசையா மலைகளும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!

மலரும் நிறமும், மணமும் சுவையும்
உடலும் உயிரும், வாழும் வாழ்க்கையும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!

இருளும் மருளும், மாயை மயக்கமும்
அருளும் அது தரும் ஆன்ம ஞானமும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!


--கவிநயா

 

Monday, February 2, 2015

ஈரேழு உலகமும் ஈன்றவளே!

சுப்பு தாத்தா பஹுதாரி ராகத்தில் சுகமாகப் பாடியிருப்பதைக் கேளுங்கள்... மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டதால் ஹிந்துஸ்தானி ராகத்திலும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!

ஈரேழு உலகமும் ஈன்றவளே!
ஈசனுடன் இயைந்த உமையவளே!
(ஈரேழு)

மாசு இல்லா மனதில்
மரகதமாய் ஒளிர்வாய்!
வீசும் தென்ற லாகிவந்து
வேதனைகள் களைவாய்!
(ஈரேழு)

தேசொளிரும் தேவி!
பாசம் மிகும் தாய் நீ!
வாச மலர்ப் பாதம்
தந்தருள வா நீ!
(ஈரேழு)


--கவிநயா