Monday, October 26, 2015

புவனேஸ்வரி


சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டதாம்... அவர் அருமையாக அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்!



பாராளும் புவனேஸ்வரி

எனை ஆண்டு அருள் ஈஸ்வரி

(பாராளும்)



பதம் பணிந்தேற்றிட அருள் ஈஸ்வரி, உன்னை

சதமென்று போற்றிட மகிழ் ஈஸ்வரி

(பாராளும்)



பக்தி என்னும் அன்பைத் தரும் ஈஸ்வரி, உள்ள

சுத்தி என்னும் சக்தி அருள் ஈஸ்வரி

அன்னை யென்றழைக்க உடன் வரும் ஈஸ்வரி, என்னை

பிள்ளை யென்றணைத்து புகல் தரும் ஈஸ்வரி

(பாராளும்)


--கவிநயா

Monday, October 19, 2015

நான்முகன் நாயகி

சுப்பு தாத்தா சிந்து பைரவியில் பாடிக் கலக்கியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



நான்மறை வடிவினள், நான்முகன் நாயகி
தாமரைப் பூமடி தாங்கிடும் பூங்கொடி
(நான்மறை)

தூவெண் கலை யுடுத்தி தூயவள் வீற்றிருப்பாள்
பால் வெள்ளை உள்ளங்களில் தாயவள் குடியிருப்பாள்
(நான்மறை)

ஒலியினில் ஒளியினில் உத்தமி அவள் இருப்பாள்
கலைகளின் வடிவினில் கருத்தினில் அவள் இருப்பாள்
ஞாலமெங்கும் ஞான வடிவினளாய் இருப்பாள்
நாளும் துதிப்பவர்க்கு நல்லருள் புரிந்திடுவாள்
(நான்மறை)


--கவிநயா


Thursday, October 15, 2015

செய்யக் கமலத்தின் மீதினில்...


செய்யக் கமலத்தின் மீதினிலே
ஒரு சித்திரம் போலிருப்பாள், அவள்
செய்யப் பட்டுடுத்தி செல்வங்கள் யாவையும்
தந்திடக் காத்திருப்பாள்!

வெள்ளைப் பாற்கடலின் உள்ளிருந்து
எழில் ஓவியமாக வந்தாள், அந்த
வெள்ளைச் சந்திரனின்  சோதரியாம் அவள்
விஷ்ணுவை மாலையிட்டாள்!

பச்சை நிறத்தொரு மேனியனாம் பரந்
தாமனின் மார்பு றைவாள், அவள்
இச்சை மிகக் கொண்டதாலே அவன் பக்கம்
தக்ஷணமும் பிரியாள்!

பிச்சை ஆண்டி கையின் பிரம்ம கபாலத்தை
விட்டுப் பிரித்தவளாம், அவள்
பிச்சை யிட்ட ஒரு நெல்லிக் கனிக்காக
பொன்னைப் பொழிந்தவளாம்!

எட்டு வடிவாக ஆனவளாம் பக்திக்
கெட்டும் தாயவளாம், தன்னைப்
பற்றிக் கொண்டவர்க்குப் பார பட்சமின்றிக்
கொட்டிக் கொடுப்பவளாம்!


--கவிநயா


Monday, October 12, 2015

துர்க்கை என்னும் நாமம்

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!



பிஹாக் ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா! தாத்தா இட்டிருக்கும் படம் துளசி அம்மாவுடையதாம்.



துர்க்கை என்னும் உந்தன் நாமம் செப்புகின்ற போதிலே
துக்கம் யாவும் அச்சம் கொண்டு தூர விலகி ஓடுமே!
பட்சம் கொண்டு நீயும் எந்தன் பக்கம் உள்ள போதிலே
வெட்கம் கொண்டு வினைகள் யாவும் விட்டு விட்டு ஓடுமே!

சூல மேந்தும் அன்னை உன்னை நாடுகின்ற போதிலே
சூழுகின்ற துன்பம் யாவும் சிதறிப் பதறி ஓடுமே!
சீலம் கொண்டு வாழ்வில் உன்னைச் சிந்திக்கின்ற போதிலே
ஓலமிட்டு மும் மலங்கள் எம்மை விட்டு ஓடுமே!

சீறுகின்ற சிம்மம் மீதில் ஏறுகின்ற அன்னையே!
கோருகின்ற யாவும் நீயும் கொடுத்திடுவாய் உண்மையே!
மாறுகின்ற காலந் தன்னில் மாறிடாத அன்னையே!
கூறுகின்ற உந்தன் நாமம் கூட வரும் உண்மையே!

நாடு விட்டுக் காடு ஏகும் காலம் வரும் முன்னரே
ஈடு அற்ற உன்னைப் பற்றிக் கொள்ள வேண்டும் அன்னையே!
வீறு கொண்ட வேங்கை போல வேகங் கொண்ட அன்னையே!
பேறு பெற்ற பிள்ளையானேன் உன்னைப் பாட உண்மையே!


--கவிநயா


Monday, October 5, 2015

மீனாட்சியின் மாட்சி

மோஹனத்தில் சுப்பு தாத்தா சுகமாகப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!



விழியாலே காப்பவளே மீனாட்சி - தமிழ்
மொழியாலே பாட வந்தேன் உன் மாட்சி
(விழியாலே)

மதுரை மாநகரை ஆள்பவளே, என்
மனதில் என்றென்றும் வாழ்பவளே
(விழியாலே)

சின்னஞ் சிறுமியென செந்தீயினில் உதித்தாய்
வண்ணத் திருப்பாதம் எந்தன் நெஞ்சில் பதித்தாய்
கன்னல் மொழியாளே முக்கண்ணனை வரித்தாய்
முன்னைப் பழ வினைகள் பொசுக்கிட மனம் வைத்தாய்
(விழியாலே)


--கவிநயா