Tuesday, December 30, 2008

102. மாசில்லா மனம் வேண்டும்!





மாசில்லா மனம் வேண்டும்
ஆசைகள் அற வேண்டும்
பாசங்கள் விட வேண்டும்
நேசம்உன் னிடம் வேண்டும்

ஆணவ மே அற்ற
அன்பு மனம் வேண்டும்
மாயை எனும் மயக்கம்
மருண்டோ டிட வேண்டும்

அல்லும் பகலும் உன்னை
நினைந்திட வே வேண்டும்
உள்ளும் புறமும் நீயே
நிறைந்திட வே வேண்டும்

பற்றெலாம் விட்டு உன்னை
மட்டும்பற்றிக் கொள்ள வேண்டும்
பெற்றவளே உன்னை விட்டு
பிரியா திருக்க வேண்டும்!


--கவிநயா


Monday, December 22, 2008

101. அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா !



அகமூறும் அன்பாலே அழைக்கின்றோம் அம்மா
முகமூறும் நகை காட்டி குளிர்விப்பாய் அம்மா
தினந்தோறும் உன்நினைவில் திளைக்கின்றோம் அம்மா
மனந்தோறும் நீயிருந்து மகிழ்விப்பாய் அம்மா

நாள்தோறும் நாள்தோறும் உன்னருளை நாடி
வாயார மனமார உன்புகழைப் பாடி
உனைத்தேடி வருகின்ற பக்தர்பல கோடி
கருணைசெய்ய வரவேணும் நீயிங்கு ஓடி

மெல்லிதழை யொத்தசெம் மலர்ப்பதங்கள் சரணம்
தெள்ளுதமி ழேத்துகின்ற தீம்பதங்கள் சரணம்
தத்திநடை பழகுகின்ற தளிர்ப்பதங்கள் சரணம்
நித்தம்எமைக் காக்கின்ற பொற்பதங்கள் சரணம்

முத்துமணி நூபுரங்கள் கொஞ்சும்பதம் சரணம்
முத்தொழிலும் ஆற்றுகின்ற முதல்விபதம் சரணம்
பித்தனுடன் நடனமிடும் பிச்சிபதம் சரணம்
பக்தர்களைப் பேணுகின்ற அற்புதையே சரணம்!


--கவிநயா

Wednesday, December 10, 2008

100ஆம் பதிவு: ஜனனி,ஜனனி - தமிழ் நீ,தமிழ் நீ!

திருக் கார்த்திகை தீபத் திருநாளிலே, அம்மன் பாட்டு வலைப்பூ, 100ஆம் அகல் விளக்கை ஏற்றி மகிழ்கிறது! இந்த அகல் விளக்கு அகலா விளக்காய் விளங்க, அனைவரும் வாழ்த்து கூறுங்கள்! இருள் - அகல் விளக்கு! அருள் - அகலா விளக்கு!

இனிய தீபத் திருநாளில் நூறாம் பதிவு அமைந்ததும் அன்னை பராசக்தியின் திருமுக ஒளியே!
இந்தச் சிறப்பு இடுகையில், ராஜாவின் ஜனனி ஜனனி ஸ்டைலில், ஒரு பாட்டு இடம் பெறப் போகிறது! அம்மன் பாட்டின் முதலமைச்சர், நம்ம கவிநயா அக்காவைப் பதிவை நடத்தித் தரும்படி அழைக்கிறேன்! வாங்க-க்கா! Over to கவிநயா!


"அம்மா" என்ற சொல் தான் எத்துணை அழகு! அகிலத்து அன்பெல்லாம் ஓர் சொல்லாய் ஆனது போல் உள்ளத்தில் உவகை பெருக்கும் சொல். உச்சரிக்கையிலேயே மனதில் குழைவையும், நெஞ்சில் நெகிழ்வையும் தந்து விடுகின்ற சொல்.
தாயன்பை நாடாதவர் எவருண்டு? அவள் அன்பிற்கு ஏங்காதவர் தாம் யாருண்டு? நம்முடைய ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாய் அறிந்தவள் நம் தாயே அன்றோ?
உலகத் தாய்மார்களே இப்படியென்றால், உலகத்துக்கெல்லாம் தாயான அவளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

சந்தோஷமோ, சஞ்சலமோ, கோபமோ, வருத்தமோ, எதுவாக இருந்தாலும், "அம்மா" என்றழைத்து அவள் கால்களை இறுகக் கட்டிக் கொண்டால் போதும், மனம் சமன்பட்டுவிடும்.
அவளிடம் நம் எண்ணங்களையும், ஏக்கங்களையும், உணர்வுகளையும், வேண்டுதல்களையும், போற்றுதல்களையும், இப்படி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளத்தான் எத்தனை எத்தனை பாடல்கள்!

அதுவும் நம் தாய்மொழியிலேயே அவற்றை அவளிடம் சொல்கையில் அதனால் ஏற்படும் இன்பத்திற்கும், கிடைக்கும் ஆறுதலுக்கும், இணையே இல்லை. அப்பேர்பட்ட அன்புருவான அன்னைக்கான பாடல் வரிகளைப் பகிர்ந்து கொள்ளவென்றே, அன்னை சக்தியின் வேல் தாங்கியோனின் பெயர் தாங்கிய குமரன், இந்த வலைப் பூவைத் தொடங்கினார். அது இன்று வளர்ந்து, 100-வது பாடலைத் தொட்டிருக்கிறது!

சக்தி இல்லாமல் எதுவுமில்லை. சக்தியை மனதில் இருத்திப் புறப்பட்டால், சூலம் தாங்கிய சிவனும் கூடவே துணையாக வருவான் என்பார், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
அவளை நம் அனைவருக்கும் உடனிருந்து வழி நடத்த வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொண்டு, "அம்மன் பாட்டு" குழுவினரின் சார்பில், இந்த நூறாவது இடுகைக்கு உங்கள் அனைவரையும், "வருக, வந்து அன்னையின் அருள் பெறுக", என அன்போடு வரவேற்கிறேன்!
சரி, இந்த 100-வது இடுகையின் சிறப்பு என்ன என்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
"ஜனனீ ஜனனீ" என்ற இளையராஜா அவர்களின் பாடலை கேளாதவர், கேட்டு உருகாதவர், இருக்க முடியாது.

அந்தப் பாடலின் மெட்டிலேயே நம் கேஆரெஸ், இனிக்கும் செந்தமிழில், (கண்) பனிக்கும் அருமையான பாடலொன்றை இயற்றித் தந்திருக்கிறார்.
ஜனனி ஜனனி என்ற சாகா வரம் பெற்ற பாடல்!
அதே மெட்டில், தமிழ் நீ தமிழ் நீ, தரணீ தமிழ் நீ!
மீனாக்ஷி என்ற (ஒரு பதிவரின்) நண்பரும், பதிவர் SK ஐயாவும் பாடுகின்றனர்! கேளுங்கள்!


மீனாக்ஷி அவர்களின் குரலில்: (கேட்டுக்கிட்டே படிங்க...)
Thamizh nee (Janan...

SK ஐயாவின் குரலில்:
Tamizhnee.mp3
கவிநயாவின் குரலில்:
thamizhNee-kavinay...


எடுப்பு:

தமிழ்-நீ தமிழ்-நீ! தரணீ தமிழ்-நீ!
தமிழ்ப் பால் தர-நீ, வருவாய் உமை-நீ!


தொடுப்பு:

தனியாய் ஒருசேய், தவித்தே அழவும்,
கனிவாய் வரும்தாய், முலைப்பால் தரவும்,
இனிதாய்த் தமிழில், சிவனார் சமயம்,
நனிதாய் வளர, வனிதாய் வருவாய்!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!
(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************
முடிப்பு-1:

குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்,
நளிர்நள் இரவில், நயமாய் எறிந்தாய்,
தளிர்வெண் நிலவாய், தமிழ்ப்பா நிலவாய்!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************

முடிப்பு-2:

புவனேஸ்வரி நீ! பரமேஸ்வரி நீ!
ஜகதீஸ்வரி நீ! ஜோதீஸ்வரி நீ!
கமலேஸ்வரி நீ! விமலேஸ்வரி நீ!
அமலேஸ்வரி நீ! நிமலேஸ்வரி நீ!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)

பார் ஆட்சியும் நீ! நீர் ஆட்சியும் நீ!
சீர் ஆட்சியும் நீ! தேர் ஆட்சியும் நீ!
கா மாட்சியும் நீ! மீ னாட்சியும் நீ!
மா மாட்சியும் நீ! மா காட்சியும் நீ!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)
*************************************************

முடிப்பு-3:

மூகாம்பிகை நீ! நாகாம்பிகை நீ!
ஏகாம்பர னின் பாகாம்பிகை நீ!
ராஜாம்பிகை நீ! பீஜாம்பிகை நீ!
லலிதாம்பிகை நீ! ஜகதாம்பிகை நீ!

அபிராமியும் நீ! சிவகாமியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ! )

சிவ மோகினி நீ! சிவ பாகினி நீ!
சிம்ம வாகினி நீ! சிந்தை வாகினி நீ!
சிவ சங்கரி நீ! சக்தி சங்கரி நீ!
சக்தி சங்கரி நீ! சிவ சங்கரி நீ!

மகமாயியும் நீ! குகதாயியும் நீ!
அரி சோதரி நீ! எனை ஆதரி நீ!

(தமிழ்-நீ தமிழ்-நீ!)

(அம்மாவின் பாத கமலங்களில், குழந்தை(இரவி)சங்கரனின் மழலைச் சொல்)



பாடலைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?

முதல் வரியிலேயே அன்னையையும் தமிழையும் ஒரு சேரப் போற்றி, அவளும் தமிழும் ஒன்றே எனக் கூறி அரிதாக ஆரம்பித்திருக்கிறார். தமிழுக்கு அன்னை செய்தது என்ன?

* பிள்ளை தவித்து அழுவதைக் காண விரும்பும் தாயும் உண்டோ? படித்துறையில் சம்பந்தப் பிள்ளை தனிமையில் அழ, அதனைப் பொறுக்க மாட்டாமல், அப்பனுடன் ஓடோடி வந்து அவருக்கு ஞானப்பால் ஊட்டுகிறாள் அம்மை.
* அமாவாசையில் நிலவைக் கண்டதாகச் சொல்லி விடும் பக்தனைக் காக்கும் பொருட்டு, தன் காதணியை எறிந்து, முழு நிலவை அமைத்துத் தரும் அன்னை அபிராமியின் கருணைக்குத் தான் அளவேது?

இந்த செய்திகளைத் தனக்கே உரிய தனித்தமிழில், பாடலின் தொடக்கத்தில் எடுத்து இயம்புகிறார், கேஆரெஸ். “நனிதாய் வளர வனிதையே வருவாய்” என்று கனிவாய் அழைக்கிறார்.

குளிர்பூ முகத்தில் குமிழ் புன்சிரிப்பும்,
மிளிர்பூங் கரத்தில் மின்னும் குண்டலமும்

என்ன அழகான வரிகள். கையில் காதணியோடு காட்சி தரும் அன்னையின் பூமுகப் புன்னகையின் எழில் அப்படியே கண்முன் விரிகிறது.

அதற்குப் பின் வரும் வரிகளில், அவளுடைய பற்பல வடிவங்களையும், சிறப்புகளையும், பெருமைகளையும், பெயர்களையும் அடுக்கிக் கொண்டே போகிறார்.
அரி சோதரி நீ எனை ஆதரி நீ
எனக்குப் பிடித்த வரிகள். அவள் ஆதரவு இல்லாவிட்டால் அணுவும் அசையாதல்லவா.

எத்தனை பெயர்கள், எத்தனை வடிவங்கள், எப்படி அழைத்தாலும், நம் மனதின் நிலைக்கேற்ப, ஒருவளே, பலவிதமாகத் தோற்றம் தரும் அன்னையின் அன்பிற்குத் தான் ஈடேது, இணையேது!
இதனைத் தன் பாடல் வரிகளில் அருமையாக அறியச் செய்திருக்கிறார் கேஆரெஸ்.
இவ்விதம் அவளின் பல நாமங்களையும் சிறப்புகளையும் ஒரே பாடலில் போற்றுவதாலேயே, இந்தப் பாடல் 100-வது பதிவுக்கு வெகு பொருத்தமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் சொன்னால் பின்னும் நீண்டு விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, இந்த இடுகையின் பிற சிறப்புகளைச் சொல்ல வருமாறு கேஆரெஸ்ஸை வேண்டுகிறேன்… Over to KRS!



நன்றிக்கா!
சக்தியிடம் வேல் வாங்கிய முருகனாய்...கவிநயா அக்காவிடம் பதிவு வாங்கிய கேஆரெஸ்ஸாய் துவங்கறேன்! :)

முதலில் பாசஞ்சர் ரயில் போல் ஓடிக் கொண்டிருந்த இந்த அம்மன் பாட்டு ரயிலை, எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு மாற்றிய பெருமை கவி-க்காவையும், SK ஐயாவையும் தான் சாரும்! இங்கு அவிங்க போட்ட பதிவுகளின் எண்ணிக்கையை நீங்களே எண்ணிக்கோங்க! :)

அடுத்து...இந்தப் பாட்டை ரொம்ப அருமையாப் பாடிக் கொடுத்த மீனாக்ஷி!
அன்னை அவள் காரியங்களை அவளே நடத்திக் கொள்வாள் என்பதற்கு இதை விடச் சான்று வேண்டுமா?
மதுரை இவிங்க சொந்த ஊர்! மதுரை மீனாக்ஷியே நூறாம் இடுகைக்கு பாடிக் கொடுக்கணும்-ன்னு இருக்கு போல!

இவர்கள் வளர்ந்தது சென்னை. இருப்பது அமெரிக்கா. கர்நாடக இசையில் ஆர்வம் அதிகம்.
இவிங்க தீவிர முருக பக்தை. திருப்புகழ் பாடுவதிலும் கற்றுத் தருவதிலும் விருப்பமும் கூட. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 பேர் இவரிடம் திருப்புகழ் கற்று வருகிறார்கள். பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் இசையமைத்துப் பாடுவதில் ஆர்வம் உடையவர்.

SK ஐயா பற்றி அடியேன் என்ன சொல்லிட முடியும்!
அம்மன் பாட்டில் அவர் இட்ட இடுகைகளுக்கு மகுடம் சென்ற 99ஆம் இடுகை! அம்பாளை அழகு தமிழில், மந்திரப் பூர்வமாக, நூறாம் இடுகைக்காகவே எழுந்தருளப் பண்ணியிருந்தார்!

திருப்-புகழ் பாடுவோர் இந்த இரண்டு பேரும், இன்று திரு-வின் புகழைப் பாடி இருக்கிறார்கள்! இருவருக்கும் அடியோங்கள் நன்றி! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! பாட்டுக் குழுவில் கீதம் இசைக்கும் என் நன்-நண்பர் குமரன் மற்றும் பதிவர் அன்புத்தோழிக்கும் நன்றி!

ஜனனி என்றால் ஜனிக்கச் செய்பவள் = அம்மா!
இந்த அம்மா என்பது மந்திரமில்லாத மந்திரச் சொல்!

இந்த மந்திரத்தை ஆலயத்தில் மட்டுமல்லாது, அடி மனதில் அனைவரும் உச்சாடனம் செய்து கொண்டு தான் இருக்காங்க!
நல்லவன்/தீயவன், ஏழை/பணக்காரன், ஆத்திகன்/நாத்திகன், ஞானி/சம்சாரி, அறிவாளி/முட்டாள், உயர்திணை/அஃறிணை, ஆண்/பெண்/திருநங்கை என்று எத்தனை எத்தனை பேதங்கள் கண்ணுக்குத் தெரிந்தாலும்...

உலகில் அத்தனைக்கும் பொதுவான மந்திரம் "அம்மா"!
அம்மா என்றழைக்காத உயிரில்லையே! அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!

மிகவும் கொடூர குணம் கொண்ட பெண்கள் இருக்கலாம்! தன் குழந்தைகளையே தவிக்க விட்ட தாய்கள் இருக்கலாம்! இராமனைக் காட்டுக்கு அனுப்பிய தாய் இருக்கலாம்! பெற்ற மகவைத் தொட்டியில் வீசும் தாய் இருக்கலாம்! ஆனால்...தாய் வேறு! தாய்மை வேறு!
தாய்கள் தவறலாம்! ஆனால் தாய்மை என்றுமே தவறுவதில்லை!

தாய்மைக்கு ஆண்/பெண் உருவம் இல்லை! அதனால் தான் இறைவனைத் "தாயும்-ஆனவன்" என்றார்கள்! "அரங்கத்து-அம்மா" பள்ளி எழுந்தருளாயே என்று அந்த அரங்கனையும் "அம்மா" என்றே பாடுகிறார்கள்!
ஓடும் நதியும் அம்மா! நாடும் நாடும் அம்மா!
பேசும் தமிழும் அம்மா! பேசாத் தமிழும் அம்மா!


இந்த அம்மன் பாட்டு-100 இல், உலக அன்னையை (ஜகன் மாதாவை), அறம் வளர்த்த நாயகியை (தர்ம சம்வர்த்தினியை) தமிழ்த் தாயாகப் போற்றி வழிபடுவோம்! உலக அன்னையின் ஆதரவை மட்டுமே பெற்று, தன் பெற்றோர் ஆதரவு இன்றி வாழும் பல குழந்தைகளின் நலனை இன்று நினைத்துக் கொள்வோம்! சொல்லிலும் செயலிலும் இருத்துவோம்!

துளசி டீச்சர், கீதாம்மா, வல்லியம்மா, புதுகைத் தென்றல் அக்கா, ராமலக்ஷ்மி, ஷைலஜாக்கா, கெபி அக்கா, இன்னும் பல பேரு...மகளிர் சக்தி கொண்ட இந்த அம்மன் பாட்டு வலைப்பூ!
சக்தி தாசர்களான மெளலி அண்ணா, கணேசன், கைலாஷி ஐயா இன்னும் பலர்...வாசகர் வட்டம் கொண்ட இந்த வலைப்பூ...

பா மாலைகளையும், பூ மாலைகளையும் தொடர்ந்து அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும், அன்னைக்குச் சூட்ட வாழ்த்துங்கள் மக்களே!
ஜனனி, ஜனனி - தமிழ் நீ, தமிழ் நீ!
அரி சோதரி நீ - எமை ஆதரி நீ!
மண்ணளக்கும் தாயே! மகமாயி திருவடிகளே சரணம்!

Thursday, December 4, 2008

99. "அன்னையை ஆராதிப்போம்!"

"அன்னையை ஆராதிப்போம்!"
[அழகு தமிழில் தேவி பூஜை!]


அருள் தரும் அன்னையை ஆராதித்து நூறாவது பதிவு வரப்போகிறது! இரண்டு அணில்களும், ஒரு சிங்கமும் ரொம்பவே முனைப்பாக அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்! அதற்கு முந்தைய பதிவு இது! என்ன செய்யலாம் என யோசித்தேன்! அன்னை வரப் போகிறாள்! அவளை வரவேற்று எளிய தமிழில் ஒரு ஆராதனை செய்தவுடன் அடுத்த கொண்டாட்டத்தை வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதினேன்! கணபதி காப்பு, [ஸௌந்தர்ய லஹரியை ஒட்டி]அன்னையின் எழில் வண்ணம், அதைத் தொடர்ந்து அவளுக்கு எல்லா உபசாரங்களும் கூடிய ஒரு ஆராதனை செய்து, நைவேத்தியம், கற்பூரம் எல்லாம் காட்டி, அவளை வேண்டி வணங்குவதாக இந்தப் பதிவு அமைந்திருக்கிறது. கொஞ்சம் நீளமான பதிவு.... தவிர்க்கமுடியவில்லை! இதனை அன்றாட ஆராதனைக்கும் பயன்படுத்தலாம்! அன்னை மகிழ்ந்து எல்லா நலனும் அருள்வாள்! ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!
*********************************************

"அன்னையை ஆராதிப்போம்!"
செங்கமலப் பொற்பாதம் திருவடிகள் தாங்கிவரும்
அங்கயற்கண்ணியின் அருட்பூஜை யான் செய்திட
பங்கமொன்றும் வாரமால் பாங்குடனே காத்திடவே
மங்கள விநாயகனே முன்வந்து காத்திடுவாய்!


'அன்னையின் அருள்வடிவச் சிறப்பு!'
தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!

கார்மேகம் போலிங்கே கூந்தலதை விரித்திருப்பாள்!
கார்குழலாள் சடைவிரிக்க சகலமுமே அதிலடங்கும்!

கற்றையொன்று புரளுகின்ற நெற்றியதில் சுட்டி மின்னும்!
வெற்றியதைச் சொல்லிவந்து வாழ்வளித்துத் தந்துவிடும்!

முன்நுதலில் துலங்கிவரும் குங்குமத்தைப் பார்த்திருந்தால்
முன்வந்த தீமையெலாம் பின்னொழிந்து ஓடிவிடும்!

வில்போலும் புருவமது வேல்விழியைக் காட்டிவிடும்!
சேல்போலத் துள்ளுகின்ற விழியிரண்டும் பூத்து நிற்கும்!

கண்ணழகைச் சொல்லிடவோ காலமிங்கு போதாது!
விண்ணவரும் தவித்திடுவார் சின்னவன் யான் என் சொல்வேன்!

எடுப்பாக வளைந்திருக்கும் நாசியிலே ஒளிவீசும்
மூக்குத்திச் சிவப்பினிலே முன்வினைகள் பறந்தோடும்!

இளம்பஞ்சு போலவிங்கு மெலிதாகச் சிவந்திருக்கும்
மென்பட்டுக் கன்னங்கள் மெய்ம்மறக்கச் செய்திருக்கும்!

தாம்பூலச் சிவப்பழகா தன்மூக்குச் சிவப்பழகா எனத்
தத்தைகளும் அன்னையிவள் செவ்விதழை ஆழ்ந்திருக்கும்!

முத்துப்பல் மோஹனமே! முத்துநகைச் சித்திரமே!
மொழிபேசும் கோமளமே! முகத்தழகை என் சொல்வேன்!

குழலங்கு மூடிவரும் காதுமடல் குண்டலங்கள்
வழிவழியாய் வந்திருக்கும் தீதெல்லாம் அசைத்துவிடும்!

வெண்சங்குக் கழுத்தழகு கமுகொன்றைக் காட்டிவிடும்
முன்மார்பில் தவழ்ந்திருக்கும் முலையிரண்டும் முந்திவரும்!

அமுதக் கலசமென அசைந்திருக்கும் மென்முலைகள்
தமிழமுதம் தந்துவிடத் தவித்திருக்கும் மார்பினிலே!

செவ்வல்லிக் கையிரண்டும் சேர்த்தணைத்து முத்தி தரும்!
செவ்விரல்கள் குழைத்திருக்கும் செம்பவளம் தோற்றுவிடும்!

இல்லையென்று சொல்லிவிடும் இடையங்கு தேடிவிட
இல்லையெனப் போய்விடுமே இருந்திட்ட பாவமெல்லாம்!

நாபிச் சுழலினிலே நற்கதியும் கிட்டிவிடும்
ஆவிக்கும் இதமளிக்கும் அற்புதமும் தெரியவரும்!

நீள்துடைகள் நெஞ்சமதில் நர்த்தனங்கள் ஆடிவரும்
கால்விரல்கள் நடந்துவரும் அழகினிலே எனைமறப்பேன்!

நற்கலவை தோய்த்திருக்கும் நறுமணமும் கூந்தலிலே!
சொற்கவிகள் பிறந்திருக்கும் சுந்தரியாள் கண்களிலே!

சந்திரனும் சூரியனும் கண்ணிரண்டில் துலங்கிடவே
செந்தாமரைப் பதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

செவ்விதழ்கள் சிந்திவரும் புன்னகைக்கோர் விலையில்லை
செங்கழுத்தில் சிறந்திருக்கும் பொன்மாலை அசைந்திருக்கும்!

பத்துவிரல் மோதிரமும் எத்தனை பிரகாசமது
கொத்துமலர்ப் பூங்குழலில் கோடி வரும் வாசமது!

மூக்குத்தி புல்லாக்கு முகத்தழகைக் கூட்டிவிடும்
பூக்குத்தி நின்றிருக்கும் சூடாமணி ஒளிவீசும்!

ரத்தினப் பதக்கமும் மோஹன மாலையழகும்
சுத்தமான செவிகளிலே செங்கமலம் சிரித்திருக்கும்!

கையிரண்டில் கங்கணங்கள் மார்பணையும் மாணிக்கப் பதக்கம்
இடுப்பினிலே ஒட்டியாணம் காலிரண்டில் தண்டை கொஞ்சும்!

மெட்டியொலி ஓசையிலே மேதினியும் உயர்ந்துவிடும்
கச்சிதமாய் உடலணைக்கும் காஞ்சிப்பட்டு காத்துவிடும்!

இடையணியும் மேகலையும் இடரனைத்தும் தள்ளிவிடும்
நடையழகைக் கண்டிருந்தால் நல்லனவும் பிறந்துவிடும்!

பொன்கொலுசு ஒலியெழுப்ப புத்தொளியும் சேர்ந்துவிடும்
மின்னலிடை நெளிவினிலே மயக்கங்கள் தெளிந்துவிடும்!

மருதாணிச் சிவப்பிருக்கும் மலர்கைகள் ஆட்டிவர
செம்பஞ்சுப் பாதமெடுத்து சித்திரமே நீ வருவாய்!

என்னவளே என் தாயே! ஏற்புடைய ஏந்திழையே!
அன்னநடை நீ நடந்து என்முன்னே வருவாயடி!

அன்புடனே நினையழைத்து ஆராதனை யான் செய்ய
அன்புருவாய் வருவாயடி! ஆதிசிவன் தேவியளே!


[இத்தனை அழகுடன் அருள்செய வரும் அன்னையை முறைப்படி அழைத்து ஆராதனை செய்வோம்!]

'அழைப்பு '

அந்தமும் ஆதியில்லா அருட்பெரும் ஜோதிமாயே!
வந்திடாய் வந்திடாய் நீ! வந்தெங்கள் பூஜை ஏற்பாய்!


"இருக்கை"

வந்தனை வந்தனை நீ வரதே! வான்முகிலே அம்மா!
சிந்தனை களித்து இங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய்!


"சந்தனம் அளித்தல்"

பந்தனை அறுத்து எம்மை பவக்கடல் தாண்டச் செய்ய
சந்தனம் ஏற்பாய் அம்மா! சண்டிகா! சந்த்ரரூபி!


"குங்குமம் இடல்"

அங்கயற்கண்ணி மாயே! அடியாரைக் காக்க நீயே
குங்குமம் ஏற்பாய் அம்மா! குமரியே! அமரவாழ்வே!


"அக்ஷதை தூவல்"

பக்ஷமும் கொண்டு எங்கள் பவவினை பறந்து ஓட
அக்ஷதை ஏற்றுக் கொண்டு அருள்புரி அமரதேவி!

"தாம்பூலம் அளித்தல்"

வேம்பாகும் உலக வாழ்க்கை வேதனை தீரவென்று
தாம்பூலம் ஏற்றுக் கொண்டு தயவுடன் அருள்வாய் அம்மா!


"கனிகள் அளித்தல்"

பனி ரவி பட்டதைப் போல், பறந்திடத் துயரம் எல்லாம்
கனியிதை ஏற்றுக் கொண்டு கடைக்கண்ணால் பார்த்திடாயோ!


"தூபம்"

பாபங்கள் விலகிச் சித்தம் பரிசுத்தமாகவென்று
தூபமும் ஏற்றுக்கொண்டு துயர் கெட அருள்வாய் அம்மா!


"தீபம் காட்டல்"

தாபமாம் பிறப்பிறப்பு தனித்துயர் முக்தி மேவ
தீபமும் ஒளிர ஏற்று திகம்பரி அருள்வாய் அம்மா!


"அன்னையின் 108 போற்றி"

ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!
சொல்லிலும் சக்தி! செயலிலும் சக்தி!
சொல்லினும் சக்தி! செய்யினும் சக்தி!
பண்ணிலும் சக்தி! பண்ணினும் சக்தி!

மண்ணிலும் சக்தி! விண்ணிலும் சக்தி!
கையிலும் சக்தி! கருத்திலும் சக்தி!
தையலும் சக்தி! தருபவள் சக்தி!
எங்கினும் சக்தி! எதனிலும் சக்தி!
தங்கிடும் சக்தி! தாங்கிடும் சக்தி!


வாக்கிலும் சக்தி! வடிவிலும் சக்தி!
நாக்கிலும் சக்தி! நாடிடும் சக்தி!
ஓங்கிடும் சக்தி! உலவிடும் சக்தி!
நோக்கிடும் சக்தி! நினைவிலும் சக்தி!
கண்களில் சக்தி! கொண்டவள் சக்தி!
அன்பெனும் சக்தி! அவளிறை சக்தி!
நம்பிடும் சக்தி! நடப்பதும் சக்தி!
தெம்பெனும் சக்தி! தொடர்பவள் சக்தி!
வாழ்வெனும் சக்தி! தந்தவள் சக்தி!
தாழ்விலாள் சக்தி! தளர்விலாள் சக்தி!

உணர்வெனும் சக்தி! உயிரெலாம் சக்தி!
கொணர்பவள் சக்தி! கொண்டவள் சக்தி!
தானெனும் சக்தி! தனதெனும் சக்தி!
ஆணெனும் சக்தி ஆள்பவள் சக்தி!
அளிப்பவள் சக்தி! அழிப்பவள் சக்தி!
களிப்பவள் சக்தி! களைப்பிலாள் சக்தி!
படைப்பவள் சக்தி! காப்பவள் சக்தி!
துடைப்பவள் சக்தி! துயரிலாள் சக்தி!
என்னவள் சக்தி! என்னிலுள் சக்தி!
அன்னவள் சக்தி! துணையவள் சக்தி!

இசைபவள் சக்தி! இசைப்பவள் சக்தி!
அசைபவள் சக்தி! அசைப்பவள் சக்தி!
அணுவவள் சக்தி! அண்டமும் சக்தி!
கணுவிலும் சக்தி! கரும்பவள் சக்தி!
கொடுப்பவள் சக்தி! கொடையவள் சக்தி!
எடுப்பவள் சக்தி! எதிர்ப்பவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! அகிலமும் சக்தி!
வினைப்பயன் சக்தி! விதைப்பவள் சக்தி!
உயிர்ப்பவள் சக்தி! உயர்ந்தவள் சக்தி!
மெய்ப்பொருள் சக்தி! பொய்யிலாள் சக்தி!

நிலமானவள் சக்தி! நீரானவள் சக்தி!
நெருப்பானவள் சக்தி! காற்றானவள் சக்தி!
வானானவள் சக்தி! வளமானவள் சக்தி!
நானானவள் சக்தி! 'நான்' அழித்தவள் சக்தி!
நிலவானவள் சக்தி! ஒளியானவள் சக்தி!
எழுஞாயிறு சக்தி! தீயானவள் சக்தி!
அணைப்பவள் சக்தி! தணிப்பவள் சக்தி!
இணைப்பவள் சக்தி! இருப்பவள் சக்தி!
ஏற்றமும் சக்தி! போற்றலும் சக்தி!
மாற்றமும் சக்தி! சீற்றமும் சக்தி!

அருள்பவள் சக்தி! பொழிபவள் சக்தி!
தருபவள் சக்தி! தாழ்விலாள் சக்தி!
சக்தியெனும் சக்தி! தந்தவள் சக்தி!
அருளெலாம் சக்தி! அவள் பதம் பணிவோம்![108]
ஜெய ஜெய சக்தி! ஜெய ஜெய சக்தி!
ஓமெனும் சக்தி! ஜெய ஜெய சக்தி!


'நிவேதனம்'

ஐவேதனைப் புலன்கள் அடங்கிடத் தாயே இந்த
நைவேத்தியம் ஏற்றுக் கொள்வாய் நாயகி! லோக மாதா!


'கர்ப்பூரம் காட்டுதல்'

அற்பமாம் ஜகத்துமாயை அழிந்தருள் ஞானம் மேவ
கர்ப்பூர ஜோதி ஏற்று கனிவுடன் அருள்வாய் அம்மா!


'வேண்டல் வாழ்த்து '

அம்மையே! அருளே! போற்றி! ஆதித்ய ரூபி! போற்றி!
எம்மையே ஆதரித்து இருள்கெட அருள்வாய்! போற்றி!
மும்மலம் அழிந்து ஞானம் முற்றிட விதிப்பாய்! போற்றி!
இம்மையில் இன்பமெல்லாம் இருந்திடச் செய்வாய்! போற்றி!


'குற்றம் பொறுக்க வேண்டல்'

அறியாமை இருளில் சிக்கி ஆடிடும் பேதையோம் யாம்!
தெரியாமல் செய்யும் குற்றம் தேவியே! பொறுப்பாய் அம்மா!

மந்திரம் சடங்கு வேள்வி மதிப்புறு உபசாரங்கள்
வந்தனை துதிகள் நியாஸம் வழுத்தின ஜபமும் தியானம்

இந்தவாறு செய்தபூஜை இருந்திடும் பிழைகள் எல்லாம்
சிந்தையில் கொள்ளாது ஏற்று சீர் பெற அருள்வாய் அம்மா!

கனி மலர் தூப தீபம் கர்ப்பூர நைவேத்தியங்கள்
நனியிலாச் சிறிதானாலும் நாயகீ நிறைவாய்க் கொள்வாய்!


'உபசாரம் செய்து அனுப்பி வைத்து மீண்டும் வரவேண்டல்'

வந்தமனை வாழுமம்மா! இருந்தமனை ஈடேறும்!
சொந்தமுடன் யான் செய்த பூஜையினை நீ ஏற்று

சிந்தை களிப்புடனே எமை வாழ்த்த வேண்டுமம்மா!
இந்தமுறை நீ சென்று இன்பமுடன் வருவாயம்மா!

அந்தமிலா ஆதிசக்தி! நின் பொன்னடியே சரணமம்மா!
பந்தமுடன் நீயென்றும் எமைக் காக்க வேண்டுமம்மா!

சிரிப்புடனே நீ சென்று நூறுகாண வருவாயம்மா!
சிறப்புடனே யாம்வாழ நின்னருளைத் தருவாயம்மா!

வந்தனம்! வந்தனம்! வந்தனம்! வந்தனம் சொன்னேனம்மா!
தந்தனம்! தந்தனம்! தந்தனம்! என்றே தயவுடன் நீ அருள்வாயம்மா!
******************************************************************
ஓம் ஜெயெ ஜெயெ ஜெய சக்தி!

Monday, December 1, 2008

98. முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வி!


'அடியார் பலர் இங்குளரே' என்று பாடுவார் பாரதியார்.

'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார்.

'மத் சித்த மத் கத ப்ராண போதயந்த பரஸ்பரம் கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச - என் மேல் முழுமனத்தையும் வைத்து என்னிடம் தரப்பட்ட வாழ்க்கையுடன் ஒருவருக்கொருவர் என் பெருமைகளைக் கூறிக் கொண்டு என்றைக்கும் மகிழுங்கள்; பரமானந்தத்தை அனுபவியுங்கள்' என்பான் கீதாசாரியன்.

'விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர்' என்பார் அபிராமி பட்டர்.

இந்த முறைகளில் எல்லாம் அன்னையின் பெருமைகளைப் போற்றிப் பணிந்து பாடும் அடியவர்கள் குழுமிய இக்குழுப்பதிவு தொடங்கிய சிறிது காலத்திலேயே நூறாவது இடுகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இறைவனின் மூவிரல் தடவுதல் என்னும் இன்பம் கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காமலேயே 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று பயன் எண்ணாமல் கடமையைச் செய்த அணில்களாக இங்கே அடியவர்கள். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிற்குப் பாடல்களை இட்டார்கள். நூறாவது இடுகை என்னும் ஒரு குறியீட்டினை நெருங்குகின்றது அணில்களின் இன்பப் பயணம். இப்பயணம் இந்த நூறாவது இடுகையைத் தாண்டித் தொடர்ந்து நடக்கும். இந்த அணில்கள் இவ்வரங்கை விட்டு நீங்கிய பின்னரும் புதிய அணில்களால் தொடர்ந்து நடத்தப் பெறும்.

நூறு என்ற குறியீட்டினை நெருங்கும் முகமாக இந்த இடுகையில் அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னையின் புகழைப் போற்றப் போகிறோம். இதோ அக்கை அணில் எல்லா அணில்களையும் கூட்டிவைத்துப் பாடும் பாடல் இங்கே.



அன்னையே உன்னையே
அனுதினம் எண்ணியே
ஆனந்த மயமாகினோம்!

கன்னியே உன்னையே
கருத்திலே பின்னியே
கள்ளுண்ட களிறாகினோம்!

மண்ணிலே பிறந்தாலும்
மானிடப் பிறவியின்
மகிமையை உணர்ந்துகொண்டோம்!

கண்ணிலே உனைவைத்து
கணந்தோறும் உந்தன்புகழ்
பாடிடும் பேறுபெற்றோம்!


வீணைஇரு கரமேந்தி
வெள்ளைமலர் மீதினிலே
வீற்றிருக்கும் பேரெழிலே!

நான்முகனின் நாவினிலே
நயமுடனே உறைபவளே
மறைபோற்றும் கலைமகளே!

மாலவனின் மணிமார்பில்
தானமர்ந்து ஆளுகின்ற
வாரிதியின் வளர்மகளே!

மனமுவந்து மன்னுயிரை
இன்னுயிராய்க் காக்கின்ற
அருளூற்றே அலைமகளே!

திரிசூல ஈசனுடன்
திருமேனி பகிர்ந்தவளே
திரிபுரத்தின் நாயகியே!

கருகமணி விழிகளிலே
பரிவுமிகக் கொண்டவளே
பரிமளையே மலைமகளே!

பரிபூசனம் செய்து
பாவையுனைப் பணிகின்றோம்
பதமிரண்டைப் பற்றிக் கொண்டோம்!

சதமென்று உனைநம்பி
சந்ததமும் பாடுகின்றோம்
சங்கரியே சியாமளையே!

கைப்பிடித்துக் கரையேற்ற
கருணைகொண்டு வரவேணும்
காருண்ய தேவதையே!

ஆழிமழை போல்அன்பால்
அரவணைக்க வரவேணும்
அம்பிகையே ஈஸ்வரியே!

இனி தம்பி அணிலின் முறை. இந்த அணில் பாடப் போவதில்லை. பாடலில் ஆழப் போகிறது.

'அரிது அரிது மானிடராதல் அரிது' என்றாள் தமிழ் மூதாட்டி. மண் மீது மானிடப் பிறவி என்பது பெறற்கரியது என்பது பெரியோர் துணிபு. நுண்ணியிரில் தொடங்கி பிரம்மன் வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் மானிடப்பிறவிக்கு ஒரு தனித் தன்மை உண்டு. அஃறிணை உயிர்களுடன் ஒப்பிட மானிடப் பிறவியின் உயர்வு உள்ளங்கைக் கனி. உயர்திணை உயிர்களிலும் அப்படியே என்பது பெரியோர் சொல்வது. செய்த நல்வினைகளுக்கு ஏற்ப தெய்வப் பிறவி கிடைத்தாலும் வினைப்பயன்களை எல்லாம் துறந்து வினைகள் ஒன்றும் இன்றி பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட தேவர்களும் மானிடர்களாகப் பிறக்க வேண்டும் என்பர் முன்னோர். முக்தி நிலை மட்டுமின்றி இறையின் அன்பிலும் அருளிலும் முழுவதும் திளைத்து ஆறாத இன்ப நிலை அடையவும் மானிடப்பிறவி ஒன்றினால் மட்டுமே இயலும் என்பது முன்னோர் வாக்கு. இதனை மிக அழகாக இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகளில் சொன்னார் அக்கையார்.

அகரத்தை போன்றவள் அவள் என்ற திருக்குறளின் முதல் குறளின் கருத்திற்கேற்ப அகரத்தில் இந்தப் பாடல் தொடங்கியது. உலகு என்ற மங்கலச் சொல்லுடன் இலக்கியங்களில் பல தொடங்குவதைப் போல் உலகங்களை எல்லாம் ஈன்ற அன்னையே என்று தொடங்கி அந்த மங்கலச் சொல்லையும் மறைவாக வைத்தது இந்தப் பாடல்.

உலகில் எண்ணுதற்கு எத்தனையோ பொருளிருக்க அவற்றில் எல்லாம் சுவையின்றி அவள் மீது மட்டும் சுவை கொண்டு அவளை மட்டுமே அனுதினம் எண்ணுகின்றோம் என்பதை 'அன்னையே உன்னையே' என்று ஏகாரத்தால் உரைத்தது இந்தப் பாடல். 'நாராயணனே நமக்கே' என்று இரு ஏகாரத்தால் கோதை நாச்சியார் சொன்னதைப் போல.

ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்ற பின்னரும் கன்னியென நிற்கிறாள் இவள் என்று வியப்பார் அபிராமி பட்டர். அதனை நினைவூட்டுகின்றது இந்தப் பாடலும் - முதல் வரியில் அன்னையே என்று தொடங்கிவிட்டு அடுத்த வரியில் கன்னியே என்கிறது.

'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றனர் அருளாளர். 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்றாள் நாச்சியார். மற்றைப் பொருட்களில் சுவை மாறி அவற்றைத் தொடர்ந்து செல்லும் நிலை மாறி கணந்தோறும் அன்னையே என்று பாடும் நிலை அவள் அருளாலேயே அமைந்தது என்பதால் அதனைப் 'பேறு' என்று போற்றுகிறது இந்தப் பாடல்.

அவளை இப்படி அனுதினமும் எண்ணிப் போற்றிப் பாடும் பேற்றினைச் சொல்லிவிட்டு அன்னை மூன்று வடிவங்களில் நின்று மன்னுயிரைக் காப்பதைப் போற்றுகிறது இந்தப் பாடல்.

'வெள்ளை மலர் மிசை வேதக் கருப்பொருள் ஆக விளங்குகிறாள் தெள்ளுத் தமிழ் கலை வாணி' என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. அவன் சொன்னதை வழிமொழிவதைப் போல் இருக்கின்றன கலைமகளைப் போற்றும் வரிகள்.

கலைமகளாக வீணை இரு கரம் ஏந்தி இசைத்தமிழை வழங்குகிறாள். பேரெழில் கொண்டு வெண்தாமரையில் வீற்றிருந்து நாடகத் தமிழ் அருளுகின்றாள். நான்முகன் நாவினிலே நயமுடன் உறைந்து மறைகள் என்னும் இயற்றமிழைப் பொழிகின்றாள்.

அவளே அலைமகளாக உருக்கொண்டு மன்னுயிரைக் காக்க மாலவன் மண்ணுலகில் தோன்றும் போதும் 'அகலகில்லேன் இறையும் என்று' அவன் திருமார்பில் நிலையாய் அமர்ந்து கருணை மழை பொழிகின்றாள்.

அவளே திரிபுரசுந்தரியாக அருள் புரிபவள். ஈசனின் திருமேனியில் இடப்புறம் கொண்டு திரிபுர அசுரர்களைச் சிரித்தெரி கொளுத்தியவள். 'இடது கண் சந்திரன்; வலது கண் சூரியன்' என்று சிவவாக்கியர் சொல்லியதற்கேற்ப ஈசனின் பாகமான வலக்கண்ணால் கதிரவனைப் போல் பகைவர்களைக் கொளுத்திவிட்டு அன்னை தனது பாகமான இடக்கண்ணால் சந்திரனைப் போல் அன்பர்களிடம் பரிவு மிகக் கொள்வதையும் இப்பாடல் சுட்டுகிறது.

Get this widget | Track details | eSnips Social DNA


முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வியை மீண்டும் மீண்டும் போற்றும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடலை பனுவலாகப் போற்றிப் பாடுவோம்.