குரு: பாபநாசம் சிவன் அவர்கள்.
சிஷ்யர்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
வெள்ளிக் கிழமை அதுவுமா, அம்மன் பாட்டு கேட்கலாம் வாங்க!
சி'ஷ்'யர் எப்படிக் குருவை மிஞ்சினார்?
சென்னையில், திருமயிலை (மயிலாப்பூர்-ன்னா எல்லாருக்கும் புரிஞ்சிக்கற மாதிரி இருக்கும்)
மயிலை மன்னாரு தெரியும், கபாலி தெரியும், முண்டகக்கண்ணி தெரியும்....
- இன்னும் மயிலாப்பூரைப் பத்தி நிறையவே சொல்லலாம்!
- மயில் ஆர்ப்பு ஊர் => மயிலாப்பூர்
"கபாலீ'ஸ்'வரர்-கற்பகாம்பிகை" மேல் பற்பல பாடல்கள் எழுதியுள்ளார் பாபநாசம் சிவன்.
மயிலை விழாக்களைப் பற்றியெல்லாம் கூடப் பாடியுள்ளார்.
அவர் கூடவே மயிலை வீதிகளில் வலம் வந்த சீடர் தான் வீரமணி ஐயர். அவரையும் கற்பகாம்பாள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லையே!
![]() |
ஆனால் பாருங்கள்!
கற்பக அம்பிகை மீது, சிவன் பாடியதை விட, சீடர் பாடியதே செம ஹிட்டானது!
குருவை விஞ்சும் சீடராக, வீரமணி ஐயரின் இந்தப் பாடல், அன்னைக்கு நிரந்தர அணிகலனாய் அமைந்து விட்டது = "கற்பக வல்லி நின்"
பாபநாசம் சிவன் = தமிழிசைத் தொண்டர்.
ராகத்துடன் கூடிய பல தமிழ்ப் பாடல்கள் பிரபலமாகத் தந்த மேதை.
அவரிடம் பயின்றவர் ப்ரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயா (அன்னார் அண்மையில் காலமானார்....)
இசை, நடனம் இரண்டிலும் இவர் வித்தகர்!
72 மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் பாடல்கள் புனைந்துள்ளார்; அத்தனையும் தமிழ்ப் பாடல்கள்!
பிரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயரைப் பற்றி, மலைநாடான் ஐயா ஒரு சிறப்பு ஒலிப்பதிவு முன்பு இட்டிருந்தார்!
அதில் வீரமணி ஐயர், இந்தப் பாடல் புனைவைப் பற்றித் தானே பேசும் ஒரு வீடியோவும் உள்ளது.
அதை அவசியம் காணுங்கள். சுட்டி இங்கே!
TMS குரலும் இந்தப் பாட்டிற்கு, அப்படியொரு சிறப்பு சேர்த்தது;
ஒவ்வொரு பத்தியிலும் ஒரு ராகத்தின் பெயர் வரும்!
அந்தப் பத்தியை, அந்த ராகத்திலேயே பாடி,
உள்ளத்தைக் கொள்ளை கொண்டது வீரமணி ஐயரா? TMSஆ? :-)
சொல்லப் போனா, நாம எல்லாருமே கூட இந்தப் பாட்டை மிக எளிதாகப் பாடலாம்!
கர்நாடக இசைப் பயிற்சி எல்லாம் ஸ்பெஷலாக ஒண்ணும் தேவையில்லை இதைப் பாட!
அது தான் இந்தப் பாட்டின் சிறப்பு! பாட்டின் எளிமை!
இதை இசைப் பயிற்சியின் போது, மாணவர்களுக்கு துவக்க நிலைப் பாடமாகக் கூட வைக்கலாம்! அப்படி ஒரு எளிமையான சுவை! எங்கே...Hum பண்ணுங்க, இப்போ!
ஏழிசை மன்னர், TMS பாடுவது = இங்கே!
குன்னக்குடி, அதே பாட்டை = வயலினில் தருவது இங்கே
ஆனா, அதே பாடலை, நாதசுரத்தில் வாசிக்கறாங்க! (Not to Miss!)
------------
கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)
நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)
அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)
| மயிலாய் மாறி, "அவரே" எனத் தவம் கிடக்கும் "கற்பகம்" |
வரிகள்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்
குரல்: TM சௌந்தரராஜன்
ராகம்: ராகமலிகை
தாளம்: ஆதி




