Monday, August 29, 2016

அகிலாண்டேஸ்வரி!



தொண்டை சரியில்லாத போதும் அன்புடன் பாடித்தந்த கீதாம்மாவிற்கும் சுப்பு தாத்தாவிற்கும் மனமார்ந்த நன்றி. கீதாம்மாவிற்கு தொண்டை விரைவிலேயே குணமாக அகிலாண்டேஸ்வரி அருள் புரிய வேண்டுகிறேன்.....ஹம்ஸானந்தி ராகத்தில்...





அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி

ஆதி பரா சக்தி

உலகாள் பவளே இமவான் மகளே

எமை ஆள் சிவ சக்தி



திருஆனைக்கா வினிலே எழிலாய்க்

கோவில் கொண்டவளே

இள யானைக்கன் றாம்கணபதி

தாயாய் ஆனவளே



காவிரி நீரால் லிங்கம் செய்து

கருத்துடன் பூசித்தாய்

காரியம் ஒன்றே கண்ணாய்க் காதல்

கணவனை யாசித்தாய்



உன்னைப் போலே உள்ளன்புடனே

உன்னை வழிபடணும்

உன்னைப் போலே ஒருமனதுடனே

உன்னைப் பணிந்திடணும்



உள்ளும் புறமும் உந்தன் நினைவால்

புனிதம் ஆகிடணும்

உந்தன் நாமம் எந்தன் சுவாசக்

காற்றாய் ஆகிடணும்


--கவிநயா

Monday, August 22, 2016

மயிலாபுரி கற்பகம்




கீதா ரங்கன் அவர்களின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!

அள்ளித் தரும் கற்பகம்


அள்ளித் தரும் கற்பகமாய்

அன்னையவள் அவதரித்தாள்

புள்ளி மயில் ரூபத்திலே

புன்னை வனத்தில் தானுதித்தாள்



சின்னஞ் சிறு அலகாலே

வண்ண மலர் கொய்து வந்தாள்

சித்தமெல்லாம் சிவமாக்கி

சிரத்தையுடம் பூசை செய்தாள்



சக்தியவள் இல்லையென்றால்

சிவமுங்கூட சவமாவான்

சத்தியத்தை அறிந்தவள்தான்

பக்தியுடன் தவமிருந்தாள்



தன்னை அறிந்திருந்தும்

தானென்ற அகந்தையின்றி

கண்மணியாள் கற்பகத் தாய்

கருத்துடனே தவமிருந்தாள்



தாய் போலத் தவமிருந்து

திருவடிகள் தமைச் சேர

தாய் நீயே அருள்வாயே

தயை புரிய வருவாயே


--கவிநயா


 படத்துக்கு நன்றி: https://farm4.staticflickr.com/3878/14685155415_a860df4b9c_b.jpg


Monday, August 15, 2016

உலகமெல்லாம் உன் வடிவே!



கீதாம்மாவின் இனிய குரலில், வசந்தா ராகத்தில்.... மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!  

உலகமெல்லாம் அம்மா உன் வடிவே
சுகங்களெல்லாம் தரும் உன் நினைவே
(உலகமெல்லாம்)

அருள் என்னும் சொல்லுக்குப் பொருள் நீயே, உண்மை
அன்புக்கு அகப்படும் எழில் தாயே
(உலகமெல்லாம்)

பாலையில் தென்படும் குளிர் சோலை, எந்தன்
பாதையில் ஒளி தரும் உன் விழிப் பார்வை
தேவையெல்லாம் தீர்க்கும் கற்பகமே, எந்தன்
தேவையெல்லாம் பாவையுந்தன் பொற்பதமே
(உலகமெல்லாம்)



--கவிநயா


தில்லை அகத்து க்ரானிக்ல்ஸ் பதிவாளர்
திருமதி கீதா ரங்கன் அவர்கள் பாடலை பாடுகிறார்கள்.

ராகம் வசந்தா.


Geetha Rangan sings so beautifully in Raag Vasantha here.

Monday, August 8, 2016

அருள் நீ புரிவாயோ?


அமிர்த வர்ஷிணியில் அமிர்தமாகாவே வர்ஷிக்கிறது, கீதாம்மாவின் குரல்! மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!



அருள் நீ புரிவாயோ?

வரம் நீ தருவாயோ?

(அருள்)



ஒரு முறை உனை நினைந்து உள்ளம் உருகிடவும்

கதி நீ என உணர்ந்து கண்ணீர் பெருகிடவும்

(அருள்)



கருவறையில் பிறந்து, விதி வலையில் விழுந்து,

மதியிழந்து உழன்று,  வழி மாறி,

சுகம் எதென அலைந்து, உனை மறந்து தொலைந்து,

அகம் கலங்கி மலங்கித்,  தடுமாறும் எனக்கு

(அருள்)


--கவிநயா 


Monday, August 1, 2016

உதவி செய்வாய்!

கீதாம்மாவின் மனதை உருக்கும் இனிய குரலில்...

https://soundcloud.com/meenasury/wndnlnmsww8g


உன்னடி பணிந்தேத்த
உதவி செய்வாய்
(உன்னடி)

ஊழ் வினையை மாற்றி
உனதருளைக் காட்டி
(உன்னடி)

கண்ணிருந்தும் குருடாய்
செவியிருந்தும் செவிடாய்
அரிதாம் பிறவியிதை வீணாக்கி
உன்னை அறியாமல் நாளைப் பாழாக்கும், எனக்கு
(உன்னடி)




--கவிநயா