Monday, July 30, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 1

சுப்பு தாத்தா கானடா ராகத்தில் மிகவும் சுகமாகப் பாடியிருப்பதை இங்கே கேட்டு மகிழுங்கள்.


சுமனஸவந்தித சுந்தரி மாதவி
சந்த்ர சஹோதரி ஹேமமயே
முனிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாஷிணி வேதனுதே
பங்கஜ வாசினி தேவஸு பூஜித
சத்குண வர்ஷிணி சாந்தியுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
ஆதிலக்ஷ்மி சதா பாலயமாம்


உத்தமர் போற்றிடும் உத்தமியே
            எழில் சுந்தரியே எங்கள் மாதவியே
பொன்னென ஒளிர்ந்திடும் பூவிழியே
            தூய பால்வெள்ளைச் சந்திரன் சோதரியே
முனிவர்கள் சூழ்ந்திடத் திகழ்பவளே
            உயர் முக்தியினை யளித் தருள்பவளே
கனிமொழியால் உள்ளம் கவர்பவளே
            நால் வேதமும் புகழ்ந்திடும் நல்லவளே
பங்கய மலரினில் வசிப்பவளே
            உயர் வானவர் வணங்கிடும் வசுந்தரியே
நற்குணம் நல்கிடும் நாயகியே
            நல் லமைதியின் உருவெனத் திகழ்பவளே
மதுசூதனனின் காதலியே
           என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை ஆதிலக்ஷ்மியே காத்தருள்வாய்! 


(தொடரும்)

--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.tarangarts.com/adhi-lakshmi/other-lakshmi-/br/postures/lakshmi/tanjore-paintings/c-1_22_625-p-95.html

Thursday, July 26, 2012

வரம் தருவாய் அம்மா, வரலக்ஷ்மி!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!


 
அஷ்டலக்ஷ்மியின் மீதான இந்தப் பாடல் முன்பு 'நினைவின் விளிம்பில்...' எழுதியதுதான். இப்போது சுப்பு தாத்தா அஷ்டலக்ஷ்மியைப் பொருத்தமாக 8 ராகங்களில் பாடித் தந்திருப்பதால், இங்கே மறுபடியும்! மிக்க நன்றி தாத்தா!

ஆனந்த பைரவி, பூபாளம், நீலாம்படி, அடனா, கானடா, ???, ***, மோஹனம், ஷண்முகப்ரியா, மத்யமாவதி, இவற்றில் அமைத்திருக்கிறாராம். '???', மற்றும் '***' என்ன என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்! உங்களுக்குத் தெரிகிறதா? :)

***

வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!

(வரம்)

ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!

தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!

பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!

வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!

(வரம்)

எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!

வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!

எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!

மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!

அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!

உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!

(வரம்)


--கவிநயா

Monday, July 23, 2012

எண்ணம் என்றும் மாறாமல்...சுப்பு தாத்தா கிராமிய மணத்துடன் கும்மிப் பாடல் மெட்டில் பாடித் தந்திருப்பதைக் கேட்டு ரசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 

எண்ணம் என்றும் மாறாமல்
திண்ணம் என்றும் குலையாமல்
நண்ணி உன்னை நினைத்திருக்க
பெண்ணே நீயே அருள் புரிவாய்!

கிண்ணம் போலே என்னுள்ளம் - அதில்
வண்ணம் போலே என்னன்பு
வண்ணம் பூசி மகிழ்ந்திருக்க
பெண்ணே என்னிடம் வந்திடுவாய்!

மண்ணம் போல்நான் இருந்தாலும்
தண்ணென்ற உன்னன்பாலே
சுண்ணம் போலே எனைமாற்றி
பெண்ணே உன்னிடம் சேர்த்துக் கொள்வாய்!


--கவிநயா

Monday, July 16, 2012

என்னுலகம் நீயடி!சுப்பு தாத்தா சிவரஞ்சனி ராகத்தில் அழகாக அமைத்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


காலடியில் கிடந்திருப்பேன் - உன்
பார்வைபட குளிர்ந்திருப்பேன்
திருமுகத்தை பார்த்திருப்பேன்
தினம்உன்னை நினைத்திருப்பேன்

சுவாசந்தர காற்றானாய்
உணவுதர நாற்றானாய்
நேற்றானாய் இன்றானாய்
நாளும் பொழுதும் நீயானாய்

வஞ்சி உன்னை புகழ்ந்திருப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி மகிழ்ந்திருப்பேன்
நெஞ்சில் உன்னை சுமந்திருப்பேன்
விஞ்சும் அன்பில் திளைத்திருப்பேன்

எண்ணும் போதில் நினைவானாய் - எண்
ணாத போதும் கனவானாய்
உணர்வானாய் உயிரானாய்
உலகம் எனக்கு நீயானாய்!
 
--கவிநயா

Friday, July 13, 2012

அருள்புரிவாள் அபிராமி!

கலாவின் இனிமையான குரலில் பாட்டைக் கேட்க விரும்புவோர்
கீழுள்ள லிங்கில் கேட்கலாம்:
http://myprayers-lalitha.blogspot.in/2011/06/blog-post_16.html
கானக்குயில் பாடக்கேட்டிருந்த நான்(கோழி)பாடியதைக்
கேட்கத் துணிச்சல்உள்ளவர்களுக்கு இதோ கீழே!


அருள்புரிவாள் அபிராமி!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.

அன்று தெய்வக்குழந்தைக்குப் பாலூட்டியே,


தமிழர்க்கு சிவகவியைத் தந்தாள் 'அம்மா'!


தஞ்சம் என்றே அண்டும் அடியார்க்கெல்லாம்


அஞ்சேல் என்றே அபயம் அளிப்பாள் 'அம்மா'!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.


அன்று படிப்பில்லா பாமர பக்தனுக்கு,


பார்போற்றும் புலமையைத் தந்தாள் 'அம்மா'!


புகல் வேண்டித் தனை நாடும் பக்தர்க்கெல்லாம்,


சுகமான பதநிழலைத் தருவாள் 'அம்மா'!


அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.


அன்று ஊமைக்கு வாய் பேசும் வரமளித்தே,


தேமதுரத் துதி பாட வைத்தாள் 'அம்மா'!


'கதி நீயே ' எனக்கதறும் தீனர்க்கெல்லாம்,


இதமான பத நிழலை அருள்வாள் 'அம்மா'!

அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;


கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம்.

Monday, July 9, 2012

தங்க ரத்தினமே!

சுப்பு தாத்தா ஆனந்த பைரவியை கிராமிய மணத்துடன் அனுபவித்துப் பாடியிருப்பதை, நீங்களும் கேட்டு அனுபவியுங்கள்! மிகவும் நன்றி தாத்தா!


தெம்மாங்குப் பாட்டெடுத்து
தேவதையப் பாட வந்தேன்
தென்னவளே மீனாளே தங்க ரத்தினமே – எனக்கு
தெள்ளு தமிழ்ப் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

வையை நதிக் கரையோரம்
வஞ்சி ஒன்னப் பாட வந்தேன்
வண்ணக்கிளி தோளில் கொஞ்சும் தங்க ரத்தினமே - எனக்கு
வண்ணத் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

கண்ணால எங்களயே
கண்ணப் போலக் காப்பவளே
கண்ணு மணி மீனாளே தங்க ரத்தினமே – எனக்கு
கன்னித் தமிழ் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

சொக்கனையே சொக்க வெச்ச
சொக்கத் தங்க மீனாளே
சொந்தமுன்னு ஒன்னப் பாட வந்தேன் ரத்தினமே – எனக்கு
செந்தமிழில் பாட்டு ஒண்ணு சொல்லு ரத்தினமே!

வெட்டும் விழிப் பார்வையாலே
வேதனைகள் தீர்ப்பவளே
பாட்டெடுத்து நான் பாட தங்க ரத்தினமே
கேட்டு நீயும் கெறங்க வேணும் பொண்ணு ரத்தினமே!!


--கவிநயாThursday, July 5, 2012

மாதரசி!ஆதரி!மாதரசி!ஆதரி!
(கலாவின் குரலில்)

நெல்லுக்குப் பாய்ச்சிய நீர்
புல்லுக்கும் பொசிவதுபோல்,
நல்லோர் பொருட்டு உந்தன்
அல்லிவிழி பெருக்கும் அருள்,
புல்லன் எனக்கும் பொசிய
கல்யாணி !மனங்கசிவாய்!


சவலைச்சேய் அருட்பாலின்றி
துவள்கையில் நீ துயில்வாயோ?
கவலை இன்றி கண்கள் மூடி
தவத்தில் ஆழ முயல்வாயோ?
அவலக்குரல் கேட்டபின்னும்
மவுன ராகம் பயில்வாயோ?
கல்யாணி !மனங்கசிவாய்!


பொன்மாளிகை ஆனாலும்,
மண் குடிசை ஆனாலும்,
ஆதவன் தன் கதிர்க்கரத்தால்
பேதமின்றி அணைப்பதுபோல்,
பேதையே நான் ஆனாலும்
மாதரசி !ஆதரி நீ !

Monday, July 2, 2012

பாரம் உனது!

சுப்பு தாத்தா குரலில், ஹமீர் கல்யாணி ராகத்தில்! கேட்டு மகிழுங்கள் :) மிக்க நன்றி தாத்தா!


அம்மா அம்மா என் நெஞ்சம்
அங்கும் இங்கும் அலைவதுமேன்?
அழகே உருவாய் நீ இருக்க
அழுக்கைத் தேடிப் போவதுமேன்?

உன்றன் பிள்ளை என்னை நீ
ஒரு முறை பார்க்கக் கூடாதோ?
கண்ணால் என்றன் இருள் விரட்டி
கண்ணாய்க் காக்கக் கூடாதோ?

கூரிய செவியும் உனதாக,
கூறிய நாவும் எனதாக,
சற்றே திரும்பிப் பாரம்மா!
விட்டேன் பாரம் உனதம்மா!

பலமுறை உன்னைப் பணிந்து விட்டேன் – உன்
பதங்களிலே நான் விழுந்து விட்டேன்
உன்பெயர் ஒருமுறை சொல்லி விட்டேன் – இனி
பயமில்லை எனக்கு தெளிந்து விட்டேன்!

கூரிய செவியும் உனதாக,
கூறிய நாவும் எனதாக,
சற்றே திரும்பிப் பாரம்மா!
விட்டேன் பாரம் உனதம்மா!


--கவிநயா