Tuesday, May 25, 2021

தவமென்ன செய்தேனோ?

 

தவமென்ன செய்தேனோ தாயே

மனமெல்லாம் உனை வைத்து

தினமெல்லாம் உனைப் பாட

(தவமென்ன)

 

அழகு முகம் எண்ணி அரற்றுகிறேன்

அருள் வேண்டி அனுதினமும் பிதற்றுகிறேன்

அமுதெனும் உன் நாமம் பருகுகிறேன்

அன்னையுன் பதம் எண்ணி உருகுகிறேன்

(தவமென்ன)

 

குரல் கேட்டு வருவாயோ

பதம் சூடத் தருவாயோ

முகம் காட்டிச் சிரிப்பாயோ

அகம் குளிரச் செய்வாயோ

(தவமென்ன)


--கவிநயா


Monday, May 17, 2021

சலனமா, சஞ்சலமா?

 

சலனம் வேண்டாம் சஞ்சலம் வேண்டாம்

அனைத்தும் துறந்திடுவாய் என் மனமே

கவலை வேண்டாம் கண்ணீரும் வேண்டாம்

அனைத்தும் மறந்திடுவாய் என் மனமே

(சலனம்)

 

அன்னை அவள் பதமே நிரந்தரமே

அறிவாய் அறிந்தாலே சுகம் வருமே

(சலனம்)

 

அவள் திருநாமத்தை மனதினில் நடுவாய்

அனுதினம் அன்பூற்றி அதனை வளர்ப்பாய்

நம்பிக்கை எனும் வேலி சுற்றியிட்டுக் காப்பாய்

வந்தித்து அவள் புகழைப் பாமாலையில் கோப்பாய்

(சலனம்)



--கவிநயா


Tuesday, May 11, 2021

எல்லாம் உன்னாலே

 

 

எல்லாமே உன்னாலே தாயே

உன்னிடத்தில் தந்து விட்டேன் மாயே

(எல்லாமே)

 

வருவது உன் செயலே

வராததும் உன் செயலே

தருவது உன் செயலே

தராததும் உன் செயலே

(எல்லாமே)

 

நம்பிக்கை வைத்தால் அன்புக்கை தருவாய்

தும்பிக்கை யான் தாயே துணையாக வருவாய்

அன்பாக அழைத்தாலே போதும்

துன்பங்கள் களைய ஓடோடி வருவாய்

(எல்லாமே)


--கவிநயா


Monday, May 3, 2021

சிந்தையில்...

 

சிந்தையில் ஆடி வருவாய்... சிவகாமி

சிந்தையில் ஆடி வருவாய்

 

விந்தை விந்தை யென என்றனுள்ளம் மகிழ

எந்தைநட ராஜனுடன் எழில்மிகவே திகழ

(சிந்தை)

 

பொற்சிலம் பொலித்திட புன்னகை பொலிந்திட

சிற்றம்ப லத்தீசன் சிரித்துள்ளம் களித்திட

(சிந்தை)

 

இலயகதியோ டிணைந்து ஈசனுடன் அணைந்து

இசையுடனே இசைந்து நளினமுடன் அசைந்து

கார்கூந்தல் புரள கருவிழிகள் சுழல

நவரசமும் இழைய அபிநயத்தில் குழைய

(சிந்தை)


-- கவிநயா