Monday, June 24, 2019

துணையிருப்பாய்!


துணையிருப்பாய் அம்மா துர்காம்பிகையே
துன்பங்கள் தொலைந்திடவே
துயர் எனை மறந்திடவே
(துணை)

துணிவுடன் செயல்பட துணையிருப்பாய், நெஞ்சில்
நம்பிக்கையைத் தந்து நலமளிப்பாய்
(துணை)

துன்பக் கடலில் என்னை முழுக வைத்தாய், உன்னைத்
தொழுதழுதேன் எனக்குத் துணை புரிவாய்
கதறும் குரல் கேட்டுக் கரம் கொடுப்பாய்
பதறுமென் மனதுக்கு இதமளிப்பாய்
(துணை)



--கவிநயா

Wednesday, June 19, 2019

என் துணை



கண்ணோடு கனிவாக இருப்பவளே
என்னோடு துணையாக வருபவளே, அம்மா
(கண்ணோடு)

முன்னோடும் வினையெல்லாம் அழிப்பவளே, உன்
பின்னோடு வருபவர்க்கு அருள்பவளே
(கண்ணோடு)

சித்தத்திலே விளங்கும் சிவையவளே, எழில்
உத்தமியே எந்தை உமையவளே
பக்தியிலே மகிழும் மலைமகளே, சிவ
சக்தியென அருளும் பரம்பொருளே
(கண்ணோடு)



--கவிநயா

Tuesday, June 11, 2019

அகிலாண்டேஸ்வரி


அம்மா என்றுனை அழைத்தேன் அகிலாண்ட நாயகியே
ஆதி பரமேஸ்வரியே அன்னை புவனேஸ்வரியே
(அம்மா)

அன்புடன் அழைப்பவரின் மனதினில் குடி புகுவாய்
அடைக்கலம் தந்தவர்க்கு அனுதினம் அருள் பொழிவாய்
(அம்மா)

முந்தை வினை விரட்டி மோகம் அகற்றிடுவாய்
எந்தைச் சிவனோடு எந்தன் சிந்தையில் அமர்ந்திடுவாய்
சந்தம்மிகு செந்தமிழில் பாடுகிறேன், வருவாய்
சொந்தமென உன்னைக் கொண்டேன், சுந்தரியே அருள்வாய்
(அம்மா)


--கவிநயா

Monday, June 3, 2019

சரணம்!



ஆதியே சரணம்! அந்தமே சரணம்!
பாதியே சரணம்! பதம் சரணம்!
            நீதியே சரணம்! நிர்மலே சரணம்!
            நிர்குணே சரணம்! நிதம் சரணம்!
முன்னையே சரணம்! பின்னையே சரணம்!
அன்னையே சரணம்! அடி சரணம்!
            கன்னியே சரணம்! கமலையே சரணம்!
            காளியே சரணம்! தாள் சரணம்!
வீரமே சரணம்! வித்தையே சரணம்!
விமலையே சரணம்! மா சரணம்!
            சாரமே சரணம்! சத்யமே சரணம்!
            சக்தியே சரணம்! சதம் சரணம்!



--கவிநயா