Monday, December 31, 2018

ஒரு முறை பாரேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!


உன்னிரு விழியாலே என்திசை பாராயோ?
விண்மதி முகத்தாளே தண்ணொளி தாராயோ?
(உன்னிரு)

கனவிலும் நினைவிலும் கருத்தினில் இருப்பவளே
கடைவிழிப் பார்வையினால் அகிலத்தைக் காப்பவளே
(உன்னிரு)

ஒருமுறை நீ பார்த்தால் சலனங்கள் சரியாகும்
சஞ்சலங்கள் யாவும் சடுதியில் கரைந்தோடும்
தஞ்சமென உனை அடைந்தேன் நெஞ்சில்குடி யிருப்பவளே
அஞ்சலென கஞ்சமலர்ப் பதமெனக்  ளிப்பாயே
(உன்னிரு)


--கவிநயா

Monday, December 24, 2018

வரமொன்று வேண்டும்!


அம்மா உன்னிடம் வரம் கேட்டேன்
அன்பால் அளிப்பாய் அருள் கேட்டேன்
என்னிதழ் மெல்ல
உன்பெயர் சொல்ல
உன்புகழ் பாடும் மனம் கேட்டேன்
(அம்மா)

மதுரையை ஆள மனம் வைத்தாய்
காஞ்சியில் காலடி தனை வைத்தாய்
மயிலையில் மயிலாய்
கயிலையில் ஒயிலாய்
கற்பகமே அருள் வடிவெடுத்தாய்
(அம்மா)

தில்லை நாதனின் சிவகாமி
திருக்கடவூரினில் அபிராமி
காளி கபாலினி
நீலி த்ரிசூலினி
சிம்ம வாஹினி அருள்வாய்நீ
(அம்மா)


--கவிநயா

Monday, December 17, 2018

கண் பாராய்; மயல் தீராய்!அம்மா உன்பெயர் அனுதினம் உரைத்தேன்
அன்பால் உனையே தினந்தினம் அழைத்தேன்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)

உலகினில் உழலும் உன்பிள்ளைகள் கோடி
உன்பிள்ளை நானோ அதிலொரு கோடி
எனை நீ பார்த்திடும் நாளும் வருமோ?
என்குரல் கேட்க உன்செவி சாய்ந்திடுமோ?
(அம்மா)

பலநாள் ஏக்கம் மனதினைத் தாக்கும்
உன் நினைவொன்றே உயிரினைக் காக்கும்
அம்மா என்பால் கண் பாராயோ?
அன்பால் என்மன மயல் தீராயோ?
(அம்மா)--கவிநயா

Monday, December 10, 2018

என் மனமே கோவில்அம்புய விழியாலே அபயம் அளிப்பாள்
பங்கய மலர்க்கரத்தாள் பயம் நீக்கிடுவாள்
செம்புலப் பெயல்நீர்போல் என்னுயிரில் கலந்தாள்
என்மனமே கோவில், அவள் நினைவே தீபம்
(அம்புய)

சிந்தையில் பலப்பல சிந்தனை வந்தாடும்
நடுவினில் அவள்வதனம் மடுமலராய் வாழும்
என்மனமே காடு, அவள்முகம் முழுநிலவாம்
என்மனமே சேறு, அவள்தா மரைமலராம்
(அம்புய)

தில்லையில் சிவனுடன் திருநடனம் புரிவாள்
எல்லையில்லா அன்பால் என்னுளம் குடிபுகுந்தாள்
என்மனமே அரங்கம், அவள் நினைவே நடனம்
என்தமிழின் நாதம், அவள் புகழை ஓதும்
(அம்புய)


--கவிநயாMonday, December 3, 2018

ஒரு முறை பார்த்தால்...ஒரு முறை முகம் பார்த்தால்
பழவினை பறந்தோடும்
திருப் பெயரைச் சொன்னால்
பெருந் துயரும் ஆறும்
(ஒரு)

அன்பு ததும்பும் வதனம்
அருள் ததும்பும் விழிகள்
இதழ் வழியும் முறுவல்
அபயம் தரும் பதங்கள்
(ஒரு)

சிந்தையில் அவள் முகமே
தினம் தினம் வந்தாடும்
சொந்தமென அவளை
நெஞ்சமும் கொண்டாடும்

தஞ்சமென அவள் பதமே
அடைந்து விட்ட போது
பஞ்சமென்று ஏதுமில்லை
அவள் புகழைப் பாடு!
(ஒரு)


--கவிநயா

Monday, November 26, 2018

உள்ளம் என்னும் ஊரில்...உள்ளம் என்னும் ஊரிலே
பக்தி என்னும் தேரிலே
உவகையுடன் வலம் வருவாள்
உத்தமி உமையாள், அவளை
அன்னை என்று அழைத்து விட்டால்
அருள் மழை பொழிவாள்

நெஞ்சமென்னும் வானிலே
நிலவு போல அவள் முகம்
கஞ்ச மலர்ப் பாதங்களோ
தங்க நிழல் தரும், அவளை
நினைவினிலே நிறுத்தி விட்டால்
நிம்மதி பிறக்கும்

செந்தமிழை விரும்புவாள்
சந்தங்களை அருளுவாள்
கருப் பொருளாய் அவள் வருவாள்
கவிதையைத் தருவாள், அவளை
புகழ்ந்து பணிபவர்க்கு
அருள் மழை பொழிவாள்


--கவிநயா

Monday, November 19, 2018

வருவாயா?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

தோளில் சாய்த்துக் கொள்வாயோ?
துயரம் ஏனோ என்பாயோ?
மார்பில் சேர்த்துக் கொள்வாயோ?
கூந்தல் கோதிச் சொல்வாயோ?

அம்மா என்னருகில் வருவாயோ?
அளவில்லா அன்பைத் தருவாயோ?

என் மனதில் வளர் ஜோதி, நீ
ஆதி சிவனில் பாதி
தேடி வந்தேன் நாடி, தினம்
உந்தன் புகழ் பாடி

அம்மா நீ அருகிருந்தால் போதும், என்
பிறவித் துன்பம் ஓர்நொடியில் சாகும்

உந்தன் சிறு பிள்ளை, உன
புகழ் பாடும் கிள்ளை
        உனையே கொழு கொம்பாய்
        நினைக்கும் கொடி முல்லை

உன் முகமே நினைவலையில் நீந்தும், அதைக்
காணக் காண மகிழ்ச்சி வெள்ளம் மோதும்


--கவிநயா


Monday, November 12, 2018

அருட்பார்வை வேண்டும்பாவங்கள் கரையவில்லையே, என்
கண்ணீரும் குறையவில்லையே
வினைகள் என்னை மறக்கவில்லையே
கருத்த வானம் வெளுக்கவில்லையே
(பாவங்கள்)

ஒன்றிருக்க ஒன்று வர
இரண்டிருக்க நான்கு வர
துன்பம் வந்து சேரச் சேரத் தாளவில்லையே
இதைத் தீர்க்கும் வழி என்னவென்று புரியவில்லையே
(பாவங்கள்)

உன்னருளை நாடி வந்தேன்
உனதடிகள் தேடி வந்தேன்
அன்னை உந்தன் அருட்பார்வை ஒன்று போதுமே, அது
பிள்ளை யெந்தன் வினை யாவும் வெந்து போகுமே
(பாவங்கள்)


--கவிநயா

Tuesday, November 6, 2018

உன்னாலே...உன்னாலே உன்னாலே உலகம் இயங்குது
தன்னாலே தன்னாலே உள்ளம் மயங்குது
(உன்னாலே)

இன்பம் ஒன்று வந்து விட்டால் உள்ளம் துள்ளுது
துன்பம் வந்து சேர்ந்து விட்டால் உடைந்து துவளுது
(உன்னாலே)

உன்னை நினைத்துப் பாடுகிறேன் கேட்கவில்லையோ?
உன்னை அழைத்துக் கூவுகிறேன் செவிகள் இல்லையோ?
உன்னை நினைத்து வாழும் பிள்ளை நினைவில் இல்லையோ?
என்னைக் கண்ணெடுத்துப் பார்த்திடவும் நேரமில்லையோ?
(உன்னாலே)--கவிநயா

Monday, October 29, 2018

நான்முகன் நாயகி


அன்னம் போல் நடையழகு
அல்லி மலர் நகையழகு
அந்தி மதி முக அழகு
அன்னையவள் பேரழகு
(அன்னம்)

கரத்தினில் ஜபமாலை 
மறுகரத்தில் வேதங்களாம்
அன்னை பதம் துதிப்பவர்க்கு
மனதில் இன்ப கீதங்களாம்
(அன்னம்)

நான்முகன் நாவினிலே
நான்மறையாய் ஒலித்திருப்பாள்
நம்பித் தொழும் பக்தருக்கு
ஞான ஒளியா யிருப்பாள்

வெள்ளைக் கலை யுடுத்தி
வீணையினை மீட்டிடுவாள்
பிள்ளை போல் அன்பு செய்தால்
பேரருளைப் பொழிந்திடுவாள்
(அன்னம்)


--கவிநயா


Monday, October 22, 2018

மஹாலக்ஷ்மி!மாமலர் மீதமர்ந்த மாலக்ஷ்மியே
மாதவன் மார்பொளிரும் ஸ்ரீலக்ஷ்மியே
(மாமலர்)

வறுமையெல்லாம் தீரும், உன்திரு முகம் கண்டால்
செல்வமெல்லாம் சேரும், உன்கடைப் பார்வை கொண்டால்
(மாமலர்)

சங்கரர் பாடலுக்கு (தங்க)நெல்லிக் கனி தந்தாய்
ஏழையும் பாடுகிறேன், எனக்கென என்ன தருவாய்?
செல்வங்கள் யாவற்றுக்கும் அதிபதி நீயாவாய், உன்
கருணைச் செல்வம் தனைத்தந்து எனையாள்வாய்
(மாமலர்)--கவிநயா


Friday, October 19, 2018

வெற்றித்திருநாள்

வெற்றித்திருநாள் 

      அன்னையின் வெற்றித்திருநாளாகக் கொண்டாடப்படும்
விஜயதசமி நமது  காமம் ,க்ரோதம் ,மோகம், லோபம் ,
மதம் [பெருமை] ,மாத்சர்யம் [பொறாமை ] ,ஸ்வார்த்தம் [சுயநலம்] , அநியாயம் , அமானவதம்[கொடுமைத்தன்மை ] ,அஹங்காரம் ஆகிய 10 அசுரகுணங்களையும்  அழித்து ஒழித்து நம்மை நாம் வெல்ல  அன்னை அருள் பெருக்கும் நாள் .
               சிவனின் பூத கணத்தலைவனாம் சிற்பக்கலைஞன் சித்திரசேனன் ,முதல் அசுரகுணத்தலைவனாம் காமனை சிவன் தகனம் செய்ததால் குவிந்து கிடந்த சாம்பரை அசுரப் பதுமையாய்ப்  பிடித்து வைக்க ,ஈசன் பார்வை பட்டதும் அப்பதுமை உயிர்பெற்று இரண்டாம் அசுரகுணமாம் க்ரோதமே உருவான பண்டாசுரனாயிற்று. ருத்ர மந்திரம் ஜெபித்ததன் பலனாய் "அயோநிஜையாக[ஸ்த்ரீ புருஷ சம்பந்தமின்றி]பிறக்கும் பெண்ணாலன்றி வேறெவராலும் மரணமில்லை" என்று வரம்பெற்ற பண்டாஸுரனை தேவயஞாக்னி குண்டத்தில் உதித்த ஸ்ரீ லலிதா  மஹாத்ரிபுரசுந்தரி வதம் செய்த கதை யாவரும் அறிந்ததே ! இதே லலிதை , மாந்தரும் உபாசித்து அசுரகுணங்களை அழித்து வெற்றி பெற அருளவேண்டி பரம கருணையுடன் விக்ரஹமாக ஆலயத்தில் எழுந்தருளும் திவ்ய கோலமே காஞ்சி காமாக்ஷி !
             காமாட்சியின் வழிபாடோ , க்ரோதத்திற்கு உதாரணமாக நாம் யாவரும் கருதும் துர்வாசர் எழுதிய ஆகமநூலாகிய  சௌபாக்கிய சிந்தாமணி என்ற சாக்த வழிபாட்டு முறையை அனுசரித்து நடக்கிறது! மஹா கோபக்காரரான துர்வாசர் அன்னையை எவ்வளவு அழகாகத் துதிபாடித்  தொழுதவர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது . அவர் எழுதிய அருமையான அன்னைத்துதிகளில்  ஒரு சின்ன துதியையாவது அம்மா பாட்டு அன்பர்களுக்கு அளிக்க வேண்டும்  என்று தோன்றியதன் பலனே இப்பதிவு [ பிழை இருந்தால் மன்னிக்கும்படி துர்வாசரிஷியை வேண்டியவண்ணம் இயன்றவரை தமிழிலும் துதி ஆக்கி அளிக்கிறேன் ]

துர்வாச மகரிஷி இயற்றிய  அன்னைத் துதி

 

பவநமயி ! பாவகமயி !
க்ஷோணிமயி ! ககனமயி !  க்ருபீடமயி !
ரவிமயி ! சசிமயி !
திங்மயி ! ஸமயமயி! பிராணமயி ! சிவே பாஹி !
               
               [தமிழில்]

வாயுமயமானவளே ! 
தீயுமாய்த் திகழ்பவளே !
மண்மயமானவளே ! 
விண்ணாக  விரிந்தவளே !
நீராக நிறைந்தவளே !
கதிரவனாய்க் காய்பவளே!
தண்மதியாய்க் குளிர்பவளே !
திக்கெல்லாம் தாய் நீயே !
காலமயமான மாயே !
உயிர் யாவும் நீ தாயே !
சிவையே ! காத்தருள்வாயே !