![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiextlnDYKJbayhFGZf0_k58P9MlNJyc4LxBP64AwU-RzMQd70KQmWpo0-8S28uB11ovG6aJpkB8avmdW8ikSSrHWeHpI9_CUG6IxjQrsIeR7zlNLorBJipkyNZBC86lp244YFnL7K6hw/s400/Picture_217.jpg)
அழகு முகப் புன்னகையை
ஆனந்த மாய்ப் பார்த்திருப்பேன்
அம்மாஎன் எழில் ஈஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
இதழ்க் கடையின் புன்னகையை
இன்ப முடன் பார்த்திருப்பேன்
உல காளும் ஜகதீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
கனிவு மிகு புன்னகையை
கால மெல்லாம் பார்த்திருப்பேன்
கருணை மிகு காளீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
கண் மலரும் புன்னகையை
களிப் புடனே பார்த்திருப்பேன்
விண் ணுறையும் வைத்தீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
பொன் னொளிரும் புன்னகையை
பரவச மாய்ப் பார்த்திருப்பேன்
புவி யாளும் பரமேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
மனங் கவரும் புன்னகையை
எனை மறந்து பார்த்திருப்பேன்
மா தரசி மாதேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
தினம் உந்தன் புன்னகையை
திகட் டாமல் பார்த்திருப்பேன்
திகம் பரனின் பாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
தே சொளிரும் புன்னகையை
தேடி வந்து பார்த்திருப்பேன்
மாச கற்றும் மல்லீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
வீசு தென்றல் புன்னகையை
வில காமல் பார்த்திருப்பேன்
வினை தீர்க்கும் வாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
சுக மளிக்கும் புன்னகையை
சொக்கிச் சொக்கிப் பார்த்திருப்பேன்
சுந்தரியே ஸ்வர்ணேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
சக்தி உந்தன் புன்னகையை
பக்தி யுடன் பார்த்திருப்பேன்
முக்தி தரும் சர்வேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!
சாந்தி தரும் புன்னைகையின்
காந்தி யினைப் பார்த்திருப்பேன்
எழி லரசி ராஜேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!!
--கவிநயா