அரியா சிவனா என்ற கேள்விக்கு
அற்புத பதிலளித்தாய்!
ஆதி நாயகியே நீ தவமிருந்து
உலகிற்கு எடுத்துரைத்தாய்!
ஆடி மாதத்தில் அரனை நோக்கியே
அன்னை நீ தவம் புரிந்தாய்!
அரி அரனுடைய இடப் பாகம் கொள்ள
அன்புடன் வேண்டி நின்றாய்!
சங்கரன் மேனியில் உன் சோதரனும்
இடமதைப் பெற்றுக் கொண்டான்!
சங்கர நாராயணன் எனும் பெயருடனே
இருவரும் இணைந்து விட்டார்!
அந்திச் சிவப்புடன் சியாமள நிறமும்
ஒன்றாய் நின்றதுவே!
ஒரு கை மழுவும் மறுகை சங்கும்
தாங்கியே நின்றனவே!
ஜடை முடியுடனே கிரீடமும் முடியில்
காட்சி தந்தனவே!
மூன்றாம் கண்ணும் திரு மண்ணுடனே
மூன்றாம் கண்ணும் திரு மண்ணுடனே
நெற்றியில் துலங்கியதே!
புலித் தோலுடனே பட்டுப் பீதாம்பரமும்
இடை அணி செய்தனவே!
ருத்திராட்சத்துடன் துளசி மாலையும்
தோள்களில் தவழ்ந்தனவே!
வாம பாகத்தைப் பெற்றவள் நீயே
விருப்புடன் தியாகம் செய்தாய்!
வாஞ்சை மீறவே நாராயணனுக்கு
நீ அதைத் தந்து விட்டாய்!
அம்மா, உன்னில் பொங்கும் அன்பிற்கு
எல்லை ஏதுமில்லை!
உந்தன் புகழினைப் பாடுவதன்றி
எனக்கும் வேலை இல்லை!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.sankarankoviltemple.in/arulmigugomathi_english.htm