Monday, December 26, 2011

வாழிய வாழிய வாழியவே!


மீனாட்சி அம்மை குழந்தைப் பருவம். 

'ஆடுக ஊஞ்சல் ஆடுகவே' மெட்டில்...வாழிய மீனாள் வாழியவே
வானவர் தானவர் போற்றிடவே!
வாழிய மீனாள் வாழியவே
வையகம் போற்றிட வாழியவே! (1)


(காப்பு)
கணபதி கந்தனும் காத்திடவே
மால் நான் முகனும் வாழ்த்திடவே
அம்மையும் அப்பனும் அருளிடவே
அன்னையும் உதித்தாள் அவனியிலே! (2)

மலயத்துவசன் மனம் மகிழ
மதுரை நகரே மண மணக்க
தழலின் நடுவே தாமரை போல்
தங்கத் தாயவள் உதித்தனளே! (3)

மும்முலை கொண்ட மகள் கண்டு
மன்னவனும் மதி மயங்கினனே
கைத்தலம் பற்றுவன் கண்டவுடன்
மறைந்திடும் எனும் செய்தி கேட்டனனே! (4)

காஞ்சன மாலை மடியினிலே
களிப்புடன் தவழ்ந்தாள் குழந்தையென
கண்டவர் மனங்கள் கனிந்திடவே
‘களுக்’கென்று சிரித்தாள் கன்னங் குழிய! (5)


(செங்கீரை)
வெள்ளித் தண்டைக் கால் நீட்டி
கொள்ளை எழில்மதி முகம் உயர்த்தி
செல்லம் போலே மீனாளும்
செங்கீரை போலே ஆடினளே! (6)


(தால)
உலகிதன் உயிர்களை பிள்ளையென
உதரத்தில் காத்திடும் உமையவளும்
தானே தளிரென பிள்ளையைப் போல்
தாயவள் தாலாட்டில் உறங்கினளே! (7)


(சப்பாணி)
அபயம் அளிக்கும் கரங்களினை
அழகாய்ச் சேர்த்து அன்னையவள்
சகல உயிர்களும் சந்தோஷம் கொள்ள
சப்பாணி கொட்டி மகிழ்ந்தனளே! (8)


(முத்தம்)
பவழம் ஒத்த செவ்வாயில்
பாகை ஒக்கும் தேனொழுக
பக்கம் வந்து பெற்றவர்க்கு
பரிசாய் முத்தங்கள் தந்தனளே! (9)

(வாரானை)
வாவா வென்று தாயழைக்க
வாஞ்சை மீற தந்தை யழைக்க
அகிலத்தை நடத்தும் அங்கயற்கண்ணி
தளிர்ப் பதம் பதித்து நடந்தனளே! (10)


(அம்புலி)
வானில் அம்புலி கண்டனளாம்
விளையாட ஆசை கொண்டனளாம்
சின்னஞ் சிறிய கரம் உயர்த்தி
அவனை அருகினில் அழைத்தனளே! (11)


(சிற்றில்)
வைகை ஆற்றின் கரையினிலே
வாகாய் மணலைக் குவித்தெடுத்து
அதிலே கொஞ்சம் நீர் தெளித்து
அழகாய்ச் சிற்றில் செய்தனளே! (12)


(கழங்காடல்)
கல்லாங் காய்கள் எடுத்து வந்து
கருத்துடன் அவற்றைச் சேர்த்து வந்து
களிப்புடன் அன்னை மீனாளும்
கழங்காடி மிக மகிழ்ந்தனளே! (13)


(அம்மானை)
பந்தார் விரலி பந்தெடுத்து
அதற்குத் துணையாய்ப் பாட்டெடுத்து
புவியினர் எல்லாம் வியந்திடவே
பாங்குடன் அம்மானை ஆடினளே! (14)


(ஊசல்)
மாயை என்னும் ஊஞ்சலிலே
மாந்தரை ஆட்டிடும் மங்கையவள்
மரகத ஊஞ்சல் தனிலமர்ந்து
மதுரை மகிழ ஆடினளே! (15)


வாழிய மீனாள் வாழியவே
வானகம் வையகம் வாழ்த்திடவே
வாழிய மீனாள் வாழியவே
வணங்குவர் உள்ளத்தில் வாழியவே! (16)
--கவிநயா

Monday, December 19, 2011

தேவதையே அருள்வாயோ?


சுப்பு தாத்தா
நீலாம்பரியில் பாடித் தந்திருப்பதை ரசித்துக் கொண்டே வாசியுங்கள்... மிக்க நன்றி தாத்தா!

அன்பாலே பாடுகிறேன்
அம்மா உனக்கு பாடல் ஒன்று
என்பாலே அன்புகொண்டு
நீயும் வர வேண்டுமென்று...

கண் ணசையக் காத்திருக்கேன்
கண்ணெடுத்துப் பாராயோ
விண்ணவருக் கிரங்கினையே
உன்மகளுக் கிரங்காயோ?

உன்நினைவே என்மனதுக்
குணவாக ஆச்சுதடி
உன்பெயரே என்சுவாசக்
காற்றாக வீசுதடி!

காணுகின்ற பொருளிலெல்லாம்
கன்னி முகமேதோணுதடி
ஓடிவரும் ஒலியிலெல்லாம்
கொலுசொலியே ஒலிக்குதடி

பாடிப்பாடி அழைக்கின்றேன்
ஓடோடிநீ வருவாயோ
தேடித்தேடித் தவிக்கின்றேன்
தேவதையே அருள்வாயோ?


--கவிநயா

Monday, December 12, 2011

எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டும்!


எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டுமே – அம்மா
தப்பாமல் உன்பெயர்உச் சரிக்க வேண்டுமே
முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டுமே - ஒரு
கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டுமே

பிச்சையென ஒருவரம்நீ கொடுக்க வேண்டுமே – எந்தன்
இச்சையெல்லாம் நீயாக இருக்க வேண்டுமே
துச்சமென இவ்வுலகை நினைக்க வேண்டுமே – அம்மா
மெச்சியுந்தன் புகழைதினம் படிக்க வேண்டுமே

இன்பதுன்பம் இரண்டுமொன்றாய் கொள்ள வேண்டுமே - அம்மா
உண்மைஇன்பம் நீயெனவே உணர வேண்டுமே
பக்திகொண்டு சக்திதன்னை பாட வேண்டுமே – அம்மா
சக்திமீது பித்துகொண்டு வாழ வேண்டுமே!


--கவிநயா

Monday, December 5, 2011

என் தொழில்!உன்பதம் போற்றுவதே என் தொழிலாகும்
பொன்பதம் போற்றுதலில் என் னுயிர்வாழும்

திருப்பதந் தனைப் பணிந்தால் தீவினை தீரும்
விருப்புடன் உனைத் தொழுதால் வேதனை மாறும்

மலர்ப்பதம் தனைச்சூட மணமெங்கும் சூழும்
சிலிர்த்துசெந் தமிழ்ப்பாவும் சுனையென ஊறும்
களித்துன்றன் செவியந்த இசையினை மாந்தும்
சிரித்துன்றன் சதங்கைகள் அதற்கிசைந் தாடும்!


--கவிநயா