Sunday, October 25, 2020

சரஸ்வதி அம்மா

 

சரஸ்வதி

சகல கலை அரசி, சரஸ்வதி

சகல உலகும் போற்றும், சரஸ்வதி

(சரஸ்வதி)

 

வேத நாயகி நாத ரூபிணி

நான்முகன் நாவினில் குடி கொண்ட தேவி நீ

(சரஸ்வதி)

 

வெண்மலரில் இருப்பாள்; வீணை ஒலித்திருப்பாள்

கண்மலராம் கல்வியும், ஞானம் அளித்திடுவாள்

பண்ணும், பரதமும், நற்கவியும் தருவாள்

எண்ணருங் கலைமகள் இசைத்தமிழில் ஒளிர்வாள்

(சரஸ்வதி)

 

வாணியும் நீயே வேணியும் நீயே வேதங்கள் போற்றும் பொருள் நீயே

கானமும் நீயே மோனமும் நீயே ஞானம் நல்குகின்ற அருள் நீயே

வானகம் நீயே வையகம் நீயே ஈரேழுலகும் உனதருளே

சூடணும் உன் பதம், பாடணும் உனை நிதம், கவியினில் நிலைத்திடு கருப்பொருளே

(சரஸ்வதி)


--கவிநயா



Thursday, October 22, 2020

லக்ஷ்மி அம்மா


திருமகளே வருக, உன்றன்

திருவருளைத் தருக

(திரு)

 

அலைகடலில் உதித்த அழகிய தேவி

அறிதுயில் பயிலும் மாலவன் ராணி

(திரு)

 

வதனம் தாமரை, விழிகள் தாமரை

ஆசனமும் செந் தாமரையே

பதங்கள் தாமரை கரங்களில் தாமரை

நீயே ஒரு பெண் தாமரையே

(திரு)

 

ஏழை மாந்தருக் கருளிடவே

எட்டு விதமாக வடிவம் கொண்டாய்

அஷ்ட ஐஸ்வர்யம் அள்ளித்தரும்

அதிபதியே எழில் அருள் நிதியே

(திரு)


--கவிநயா


Sunday, October 18, 2020

துர்க்கை அம்மா

 அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!

துர்க்கை துர்க்கை துர்க்கை என்று நாளும் பாடுவோம்

துர்க்கை திருப் பாதங்களை நாளும் நாடுவோம்

துர்க்கை யவள் இருக்கும் இடத்தில் துன்பங்கள் இல்லை

துர்க்கை யவள் பேரைச் சொன்னால் ஓடிடும் தொல்லை

(துர்க்கை)

 

அசுரர்களை அழித்துத் துவம்சம் செய்த சூலினி

ரக்தபீஜன் உதிரந்தன்னைக் குடித்த காளிநீ

தீயவற்றைத் தீய்க்கவென்றே தோற்றம் கொண்டவள்

நன்மை செய்யும் நல்லவரைக் காக்க வந்தவள்

(துர்க்கை)

 

வீரம் கொண்ட மாந்தருக்கு வெற்றி நல்குவாள்

சூலம் கொண்டு பகைவருக்குப் பாடம் சொல்லுவாள்

காலங் காலமாக அன்பு காட்டும் தாயவள்

காலனையும் கணப் பொழுதில் ஓட்டுவா ளவள்

(துர்க்கை)

 

வேதனைகள் தந்து அவள் வேடிக்கை செய்வாள்

சோதனைகள் தந்து சுத்தத் தங்க மாக்குவாள்

அன்னை யென்று அழைத்து விட்டால் அன்பு காட்டுவாள், சொந்தப்

பிள்ளையென்று சேர்த்தணைத்துத் துயரம் ஓட்டுவாள்

(துர்க்கை)


--கவிநயா


Monday, October 12, 2020

பொன்னுலகு எது?

 

மண்ணுலகும் பொன்னுலகே

            மாதரசி துணையிருந்தால்

மண்பிறப்பும் நற்பிறப்பே

            மங்கை யுன்னை நினைத்திருந்தால்

(மண்)

 

உன்னை என்றன் நெஞ்சில் வைத்து

            உன்றன் பாதம் பூஜித்து

உன்றன் நாமம் ஜெபித்து

            உன்னைப் பாடித் துதித்து வந்தால்

(மண்)

 

ஊரும் உண்டு பேரும் உண்டு

            உற்றார் பெற்றரும் உண்டு

உன்னை என்றன் அன்னை என்று

            சொந்தம் கொண்டு வந்தேன் இன்று

 

கோடி ஜென்மம் கொண்ட போதும்

            அன்னை மட்டும் நீயேயன்றோ

ஓடி வந்தேன் உன்னை நாடி

            பாடி வந்தேன் உன்னைத் தேடி

(மண்)


--கவிநயா

Monday, October 5, 2020

திருவாய் முத்து

 

முத்து உதிர்ந்திடுமோ, என்றன்

மோகம் விரட்டிடுமோ

பற்று விலகிடுமோ, உன்மேல்

பாசம் பெருகிடுமோ

(முத்து)

 

வந்து பிறந்து விட்டேன், உலகில்

வாசனை தீரவில்லை

நொந்து மயங்கி விட்டேன், விதியின்

ஆட்டமும் தீரவில்லை

(முத்து)

 

அன்னை எனக் கொண்டேன், என்னை

உன்றன் பிள்ளை எனக் கொண்டேன்

அன்னையென நீயே, இருந்தும்

என்ன பயனைக் கண்டேன்

 

அலைகள் ஓய்ந்திடுமோ, இதயம்

ஆறுதலைப் பெறுமோ

பிறவிக் கடல்தனை, நானும்

கடக்கும் நாள் வருமோ

(முத்து)


--கவிநயா