திக்குகள் எட்டும் நடுநடுங்க
திசைகள் யாவும் கிடுகிடுங்க
தேவதை யொருத்தி தேரில் ஏறி
திக் விஜயம் செய்யப் போகின்றாள்!
தகதக வென்றே ஜொலிக்கின்றாள்
பகலவ னைத்தோற் கடிக்கின்றாள்!
மாநில மெல்லாம் மதுரை ஆக்க
மதுரா புரியாள் துடிக்கின்றாள்!
மன்னவ ரெல்லாம் மண்டியிட்டார்
தென்னவள் மீனாள் காலடியில்!
சரணம் சரணம் எனப் பணிந்தார்
கருணைக் கடலின் காலடியில்!
வீரத்தின் தாகம் தணியவில்லை;
வெற்றிகள் பெற்றது பற்றவில்லை!
பற்றிய வாளைச் சுழற்றிக் கொண்டு
சிற்றிடை மீனாள் செல்கின்றாள்!
நான்முகன் நங்கையைப் பணிந்து விட்டான்!
நாரணன் தங்கையை வணங்கி விட்டான்!
கயிலை மலைக்கு வலையை வீசிட
மயிலன்ன மாதங்கி போகின்றாள்!
நற்சிவ கணங்கள் தோற்றோட
நந்தியும் களைத்தே பின்வாங்க
பொற்சிலம் பொலிக்க சிற்சபை ஆடும்
பொன்னம் பலத்தான் வந்து விட்டான்!
உலகில் அழகன் இவன் தானோ
உமையவள் மயங்கும் சிவன் தானோ!
இதயம் தொலைத்த மீனாளும்
இமைக்க மறந்து பார்த்து நின்றாள்!
உடலே வேறாய் ஆனதுவோ
உயிரே அவனிடம் போனதுவோ!
உள்ளம் இரண்டும் இடம் மாற
உறைந்தாள் மீனாள் அக்கணத்தில்!
போரை மறந்தாள் வாள் மறந்தாள்
தொடுத்த அம்பினை விடுக்க மறந்தாள்!
காதல் கனிய கசிந்து நின்றாள்
காதலனும் நிலை புரிந்து கொண்டான்!
சக்தியும் சிவமும் சேர்ந்திடவே
சகல உலகமும் மகிழ்ந்திடவே
மதுரை வருவேன் மணப்பேன் என்றே
மதுர மொழிகள் கூறினனே!
--கவிநயா
படம் இங்கே இருந்து: http://maduraiyampathi.blogspot.com/2010_04_01_archive.html. நன்றி மௌலி.