"தேவி திருக்கதை" -- 8
முதல் கதையின் கருத்து:
மது-கைடப வதம்:
திருமாலின் காது அழுக்கிலிருந்து மது, கைடபர் என்னும் அரக்கர் தோன்றியதாகக் கதை சொல்லுகிறது.
நம்மில் இருக்கும் அழுக்குகளிலேயே மோசமான மலங்கள் காமம், குரோதம் லோபம் என்னும் மும்மலங்களே!
ஆசை, கோபம், சிறுமை இவை மூன்றும் ரஜஸ் என்னும் குணத்தின் வெளிப்பாடுகள். தவறுகள் செய்யத் தூண்டி நம்மைப் பாவக்குழிக்கு அழைத்துச் செல்லும் இவை மூன்றும்!
இந்த மூன்றும் ஆத்மா என்னும் ஒரு மெல்லிய கண்ணாடியின் மேல் பலமாக தங்களைத் தீட்டிக் கொண்டு விடுகின்றன.
தானறிந்த பரம்பொருளை மீண்டும் காணமுடியா வண்ணம் இவற்றால் இப்போது ஆன்மா மறைக்கப் பட்டு விடுகிறது.
இதை அகற்றுவதே சாதகன் செய்ய வேண்டிய முதல் வேலை.
கடினமான பயிற்சி தேவை இதற்கு. இடையில் நிகழும் பல கடுமையான சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிவரும்.
திட மனதுடன் முயன்றால் குருவருளால் இது சித்திக்கும்.
நம்மிடம் இருக்கும் சோம்பலைத் துறந்து,'எழுமின்; விழிமின்' என விவேகனந்தர் சொன்ன மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தல் விஷ்ணுமாயை அருள் செய்து நம்மை இந்த மது-கைடபர்களை அழிக்கத் துணை புரிவாள்.
இரண்டாம் கதை:
மஹிஸாஸுர, சண்ட முண்ட, ரக்த பீஜ வதம்:
மேலே சொன்ன மூன்று மலங்களையாவது நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஆனல், கண்ணுக்குத் தெரியாமல் நம்மிடம் இருக்கும் மலங்கள் தாம் மிகவும் மோசமானவை!
சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பான், ஆசை காட்டி மோசம் செய்பவன், வலிக்காமல் அடிப்பவன், வணங்கிக் கொண்டே கத்தியால் [ இந்தக் காலத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு] குத்துபவன் என இப்படி எத்தனையோ விதங்களில் இது வெளிப்படும். கிட்டத்தட்ட இப்போது நிகழ்கின்ற தீவிரவாதத்துடன் ஒப்பிடலாம்.
தம் நிறங்களையும் குணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள்!
யாரெனத் தெரிந்தால் தானே அழிக்க முடியும்?
தன்னிடம் இதெல்லாம் இருப்பதையே உணராமல் இயங்கிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும்.
மகிஷனும் இதைத்தான் செய்கிறான்!
எருமை வடிவில் வருவான்; திடீரென யானை வடிவில்; தேவி அவனை அழிக்க முற்படுகையில், உருமாறி ஒரு காளை வடிவில் என!
இப்படித்தான் நமகு கண்ணுக்குத் தெரியாதா ஆசைகளும் நம்மை அலைக்கழிக்கின்றன.
இதை விக்ஷேப சக்தி எனச் சொல்வர்கள். அலைக்கழிக்கும் ஆசைகள் எனப் பொருள் சொல்லலாம்.
சண்ட முண்டாசுரர்கள் கதையும் இது போலவே!
இடையில் வரும் எண்ணற்ற ஆசைகளின் வடிவங்கள்!
ரக்தபீஜன் நிலை இன்னும் மோசம்!
இவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான ரக்தபீஜர்கள் தோன்றுவார்கள்!
இப்படித்தான், ஒரு ஆசையில் இருந்து பலவித தீய எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி முடிவே இல்லாமல் நம்மை இங்கும் அங்குமாய்ப் புரட்டி அடிக்கும். இதன் சுழலில் ஆட்பட்டு, சாதகன் திணறும் நிலை!
இதையெல்லாம் வெல்ல என்ன வழி!?
நம்மால் மட்டுமே முடியக் கூடிய செயல் அல்ல இது!
நீயே கதி என அன்னையின் பாதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறுவதுதான் ஒரே வழி!
அம்மா! என்னைக் காப்பாற்று என அலற வேண்டும்!
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கணும்!
'உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள் மாற்றேலோர்' எனக் கத்தணும்!
நின்னைச் சரணடைந்தேன் என அழணும்!
அபயக்குரல் கேட்டு, அன்னை ஓடி வருவாள்!
அண்டியவரைக் காப்பாள்!
கர்ம யோகத்தினால் மட்டுமே மும்மலங்களையும் அழித்த நாம் இப்போது பக்தி யோகத்தின் மூலம் அவளைச் சரணடைந்து அவளை உபாசனை செய்தால், இந்தத் தீய எண்ணங்களும் நம்மை விட்டு அகலும்.
தமஸை அழித்து, ரஜஸைக் கொன்று அடுத்த நிலைக்குச் செல்லமுடியும் சாதகனால்!
மூன்றாம் நிலை:
சும்ப-நிசும்ப வதம்
தமஸ்,[ஆணவம்] ரஜஸ் [கன்மம்] என்னும் இரு குணங்களையும்,[மலங்களையும்] கர்மயோகம், பக்தி யோகத்தின் மூலம் முறியடித்த சாதகன் இப்போது அமைதியாக ஸத்வ குணத்தில் திளைக்கிறான்.
மூன்று குணங்களிலுமே, இது ஒரு உயரிய நிலை எனப் பொதுவாகச் சொல்வதுண்டு.
ஆனால், இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது!
ஆன்மா என்னும் கண்ணாடியை மறைத்த மலங்களையெல்லாம் தன்னுடைய சாதனையாலும், தெய்வ அருளாலும் விலக்கிய சாதகன் இப்போது ஒரு தெளிந்த கண்ணாடியாகத் திகழ்கிறான்.
தனக்கு எதிரே தெரிகின்ற பரம்பொருளின் வெளிச்சத்தைக் கூடப் பார்க்க முடிகிறது இவனால்!
ஆனால், என்ன பிரயோஜனம்?
இவன் இந்தப் பக்கத்தில் அன்றோ நிற்கிறான்.
கண்ணுக்கு எதிரே ஒரு நல்ல மாம்பழம் தெரிகிறது; அதை ஒரு கண்ணாடி மறைக்கிறது!
மாம்பழத்தைப் பெற இவன் இப்போது இந்தக் க்ண்ணாடியையும் உடைக்க வேண்டும்!
இத்தனை தடைகளைத் தாண்டி வந்து விட்டோமே என்னும் பெருமிதம் உள்ளில் எழ, எதிரில் தெரியும் பரம்பொருளைக் கண்ட திருப்தியில், இடையில் ஒரு கண்ணாடி தடுக்கிறது என்பதை அறியவிடாமல் மாயை தடுக்கும் இப்போது!
அண்ட சராசரத்தையும் அடக்கிவிட்டோம் என்கிற பெருமிதமும், தன்னை ஆட்கொள்ள அன்னையே எதிரில் நிற்கிறாள் எனப் புரியாமல் அவளையே சண்டைக்கு அழைக்கின்ற அறியாமையும் மாயை வடிவில் மறைத்த கதைதான் சும்ப நிசும்பர் கதை!
இந்த மாயையை எங்ஙனம் வெல்வது?
கல்விக் கடவுள் மஹா சரஸ்வதி இப்போது உதவிக்கு வருகிறாள்!
***************************************************************************************** [தொடரும்]