Monday, June 30, 2014

அம்மாவின் பூஞ்சிரிப்பு!


செந்தூரப் பொட்டு வைத்து
செவ்வாடை இடையில் கட்டி
செம்பருத்திப் பூவைப் போலே
சிரிப்பாளாம் அம்மா
செங்கரும்பாய் மனசுக்குள்ளே இனிப்பாளாம்!

மலர்மாலை தோளைத் தழுவ
மணியாரம் மார்பில் தவழ
முல்லைப்பூ மலர்ந்தது போலே
சிரிப்பாளாம் அம்மா
மல்லிகையாய் மனசுக்குள்ளே மணப்பாளாம்!

கொஞ்சிக் கொஞ்சி கொலுசுகள் சிணுங்க
கொடியிடையில் மேகலை துலங்க
கனியிதழ்கள் விரியக் கனிவாய்ச்
சிரிப்பாளாம் அம்மா
கற்கண்டாய் மனசுக்குள்ளே இனிப்பாளாம்!

கரங்களிலே வளைகள் பூட்டி
கண்களிலே முறுவல் காட்டி
காசுகொட்டிக் கவிழ்த்தது போலே
சிரிப்பாளாம் அம்மா
கள்ளமில்லாப் பிள்ளை அன்பில் களிப்பாளாம்!


--கவிநயா

Monday, June 23, 2014

மனமெல்லாம் நீயே வேண்டும்!



சுப்பு தாத்தா பாடியதை இங்கே கேட்டு மகிழலாம்! மிக்க நன்றி தாத்தா!

நானென்னும் அகந்தையாலே
நசிந்தவர்கள் பலப்பல கோடி!
நானதிலே வேண்டா மென்றே
நவிலுகின்றேன் உன்னை நாடி!

கானன்ன என்றன் வாழ்வில்
கதிரொளியாய் நீயே வேண்டும்!
மானன்ன உன்றன் விழிகள்
மக்கள்தமைப் பேணிடல் வேண்டும்!

தேனன்ன உன்றன் நாமம்
தினமும் நான் செப்பிடல் வேண்டும்!
வானன்ன விரிந்த என்னன்பில்
விரும்பிநீ திளைத்திடல் வேண்டும்!

கணமொன்றும் தவறாமல் நான்
உனையேதான் நினைத்திடல் வேண்டும்!
மனமெல்லாம் அம்மா நீயே
நிறைந்தென்னுள் நிலைத்திடல் வேண்டும்!


--கவிநயா

Monday, June 16, 2014

ஏன் இன்னும் தாமதமோ?

 

சுப்பு தாத்தா சிவரஞ்சனியில் இனிமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தா மீண்டும் சிந்து பைரவியிலும் பாடியிருக்கிறார்.... கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 
தாமரைப் பாதங்கள் சரணம் அம்மா
தாமதம் இல்லாமல் வரணும் அம்மா
(தாமரை)

ஏன் இன்னும் தாமதமோ ஏழை எனக்கருள
கார்குழல் கனியமுதே கருணை மழை பொழிய
(தாமரை)

கஞ்ச மலர்ப் பாதங்கள் நாட்டியம் ஆடி வர
கொஞ்சும் இன்பச் சதங்கை ஒலி சங்கீதம் பாடி வர
பஞ்சம் என்ன அன்பிற்கென்று அன்னை நீ ஓடி வர
தஞ்சம் என உனை அடைந்த நெஞ்சமெல்லாம் பூ மலர
 (தாமரை)


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://poetrypoem.com/cgi-bin/index.pl?poemnumber=1126482&sitename=viswabrahma&displaypoem=t&item=poetry

Monday, June 9, 2014

மனங் குளிர்வாய்!


சுப்பு தாத்தா அடானாவில் அருமையாகப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!



மனங் குளிர்வாய் மகிழ்வாய் மரகத மாமணியே
மழுவினை ஏந்துகின்ற மன்னவனின் மனையே!
(மனங்)

கண்ணுதலான் காதல் கனியமுதே களியே
வண்டுவிழி மாதே வாஞ்சைமிகு வனிதே!
(மனங்)

பச்சை மயிலாக வந்து பரமனை பூசித்தாய்
நித்தம் அவனை நினைந்து நித்திலமே நேசித்தாய்
ஊசி முனையில் நின்று அவனன்பை யாசித்தாய்
பேசும் மலர்ப் பாதனுடன் ஏழுலகும் போஷித்தாய்!
(மனங்)


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://sam.aminus3.com/image/2012-07-25.html


Monday, June 2, 2014

உன்னை விட்டால் எவருண்டு எனக்கு?


சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு அனுபவியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



உன்னை விட்டால் எவருண்டு எனக்கு? என்னைக்
காப்பாற்றுதல் உந்தன் பொறுப்பு…
(உன்னை)

உந்தன் திருப் பாதங்கள் கருத்தினிலே பதித்தேன்
பதமலர் தனையன்றி மற்றதெல்லாம் வெறுத்தேன்!
விதி என்ன விதி என்று தள்ளி வைத்தேன், பொறுத்தேன்
நீயே என் கதியென்று உன்னை இறுக்கிப் பிடித்தேன்!
(உன்னை)

பற்றிக் கொண்டேன் உந்தன் பஞ்சுமலர்ப் பாதம்
சுற்றிக் கொண்டேன் கொடியாய், வெட்டிடுதல் பாவம்!
கொட்டும் உன் அருள் மழையில் நனைவதுவே யோகம்
சற்று நீ அருகில் வந்தால் விலகிடும் என் சோகம்!

(உன்னை)


--கவிநயா