Monday, November 24, 2014

உனக்குத் தெரியாதா?



சுப்பு தாத்தா தன்யாஸி ராகத்தில் தண்மையாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


உள்ளத்தில் உள்ளவளே

உள்ளைத்தை அறியாயோ?

கள்ளம் விட்டு வந்து உந்தன்

பிள்ளைக் கருள் புரியாயோ?



கருணை மழை என் மேலும்

கொஞ்சம் நீயும் தூவாயோ?

காத்திருந்த கண்ணுக்காக

பூத்து வர மாட்டாயோ?



காலத்தைக் கடந்தவளே

உன்காலைப் பிடித்து விட்டேன்

காலன் வரும் முன்னே என்னைக்

கரைசேர்க்க வாராயோ?



வேலனுக்கு வேல் தந்தாய்

கணபதிக்கு உயிர் தந்தாய்

பிள்ளைக்கென்ன வேண்டுமென்று

அன்னை உனக்குத் தெரியாதோ?


--கவிநயா

Monday, November 17, 2014

அம்மா வருவாயோ?


ஹிந்தோளம் ராகத்தில் சுப்பு தாத்தா மனமுருகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


 
கன்னத்தில் நீர்வழிய 
கன்னி உன்னைத் தேடுகிறேன்
எண்ணத்தில் உன்னை நிறுத்தி 
ஏக்கத்துடன் பாடுகிறேன்

தாயுன்னைத் தேடுகிறேன்
தட்டுத்தடுமாறுகிறேன்
தாங்கிக் கொள்ள யாருமில்லை
தத்தளித்து வாடுகிறேன்
(கன்னத்தில்)

கண்ணிருந்தும் ஒளி இழந்தேன்
காதிருந்தும் ஒலி மறந்தேன்
உன்னருமை தெரிந்திருந்தும்
ஊழ்வினையால் உழலுகிறேன்

அன்னை நீவருவாயோ
ஆறுதல் தருவாயோ
பிள்ளை என்னை ஏக்கத்திலே
பேதலிக்க விடுவாயோ
(கன்னத்தில்)

--கவிநயா

Monday, November 10, 2014

விந்தை என்னம்மா?

என் அம்மா என் அம்மா...
எந்தன் கண்ணம்மா

உன்னைக் காண ஓடி வந்தேன் எந்தன் கண்ணம்மா  – நீ
எங்கே சென்று ஒளிந்து கொண்டாயோ கொஞ்சம் சொல்லம்மா

கண்ணாமூச்சி ஆடும் நேரம் இதுவோ சொல்லம்மா  - உன்னைக்
காண ஏங்கும் எந்தன் கண்ணின் முன்னே வா அம்மா

அறிவில்லாமல் என்னைப் படைத்தாய் ஏனோ நீயம்மா  - இனி
எனைஅலைக்கழித்தல் தகுமோ முறையோ நீயே சொல்லம்மா

நிதமும் உந்தன் பேரைச் சொன்னால் ஊழ்வினை அழியுதம்மா  - எந்தன்
நெஞ்சம் வருத்தும் துன்பம் யாவும் பொடிப் பொடியாகுதம்மா

உந்தன் பாதம் தொட்டுப் பார்க்க இதயம் ஏங்குதம்மா  - அம்மா
உன்மடிதனிலே அடைக்கலமாக  மார்க்கம் தேடுதம்மா

எங்கும் எதிலும் இருப்பவள் நீயே எந்தன் கண்ணம்மா  - ஆனால்
என்கண்ணில் மட்டும் நீ படவில்லை, விந்தை என்னம்மா?

(என் அம்மா)


--கவிநயா

Monday, November 3, 2014

உண்மை ரூபம்!

 
உன்னை என்றும் வணங்கி வந்தேன்
உண்மை ரூபமே
உன்னைப் பாடித் தீர்த்துக் கொண்டேன்
இதய தாபமே
(உன்னை)

பச்சை மண்ணாய் என்னைத் தந்தேன்
உந்தன் கரத்திலே
இச்சை போல என்னைச் செய்வாய்
உந்தன் வரத்திலே
(உன்னை)

பெற்ற தாயே பிள்ளையை மறந்த
சரித்திரம் உண்டோ, என்னை
விட்டு விட்டால் என் தாயுனக்கே
இழுக்கா றன்றோ?
(உன்னை)



--கவிநயா