Monday, August 26, 2013

நிம்மதி தரும் முகம்!


மனதினில் வரும் முகம்
மங்கையின் திரு முகம்
நிலவென ஒளிர் முகம்
நிம்மதி தரும் முகம்!

அலைகளில் துரும்பென
அலைகின்ற போதினில்
கைகளில் எனை யள்ளிக்
காப்பவ ளின் முகம்!

மலையன்ன துயரத்தில்
மலைக்கின்ற போதினில்
மலையினைத் துகளெனத்
தகர்ப்பவ ளின் முகம்!

சிலையெனும் வடிவிலும்
சிரிக்கின்ற அவள் முகம்
சிந்தையுள்ளே என்றும்
நிலைத்திட்ட எழில் முகம்!


--கவிநயா

Monday, August 19, 2013

மனசெல்லாம் மணக்குதடி!

கற்பூர நாயகியே கனகவல்லி மெட்டில்...

மனசெல்லாம் மணக்குதடி மாரியம்மா
மாயி உன் பேரைச் சொன்னா மாரியம்மா
தரிசெல்லாம் பரிசாகும் மாரியம்மா, நீ
கரிசனமாப் பார்த்துப்புட்டா மாரியம்மா!

சிந்தூரப் பொட்டொளிரும் சிவகாமி
சித்தமெல்லாம் நிறைந்திருக்கும் அபிராமி
சமயத்திலே காப்பவளே சமயபுரத்தா
துயரமெல்லாம் தீர்ப்பவளே தெப்பக்குளத்தா!

பச்சை வண்ணப் பைங்கிளியே மீனாக்ஷி
பார்வையிலே ஆள்பவளே காமாக்ஷி
காசியிலே குடியிருக்கும் விசாலாக்ஷி
காசினி யெல்லாம்அம்மா உனதாட்சி!

காளியான உருவினிலும் கருணைத் தாயடி
சூலிநீலி வாராகி யாவும் நீயடி
வேலியாகிப் பிள்ளைகளைக் காக்கும் தாயடி
வேதனைகள் வேரறுக்கும் வீரி நீயடி!

எண்ணமெல்லாம் நீயாக ஆகிட வேண்டும்
வாக்கினிலே உன் பெயரே ஒலித்திட வேண்டும்
செய்வதெல்லாம் உனக்கென்றே செய்திட வேண்டும்
வாழும் வாழ்க்கை உனக்கென்றே ஆகிட வேண்டும்!

உன்னைஎண்ணும் போதேமனம் உருகிட வேண்டும்
உடலெல்லாம் மெய்புளகம் அரும்பிட வேண்டும்
விழியெல்லாம் ஆறாகப் பெருகிட வேண்டும்
வழியெல்லாம் உனைப்பற்றி நடந்திட வேண்டும்!


--கவிநயா

Thursday, August 15, 2013

ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி..

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்!

வெறும் லட்சுமி -ன்னு சொன்னாலே = அது மங்களம் தான்!
வர லட்சுமி -ன்னு சொல்லும் போது = மங்களம் என்ற சொல்லுக்கே மங்களம்!

வரலட்சும் விரதம்: தமிழகத்தில் ஒரு சாரார் மட்டுமே கொண்டாடினாலும், ஆந்திரம்/ கர்நாடகத்தில், மிகப் பலரும் கொண்டாடுவது;

சிறு வயதிலிருந்தே, எங்கள் வீட்டில், வரலட்சுமி விரதப் பழக்கம் கிடையாது!
ஆனால், பக்கத்து வீட்டிலிருந்து, வட்டிலோடு சர்க்கரைப் பொங்கல் வந்து விடும், இன்ன பிற பலகாரங்களோடு:)
சொய்யம் (சுகியம்), உப்புக் கொழுக்கட்டை, நவதானியச் சுண்டல்!
மிளகு வடை= my fave fave favorite along with athirasam:)

பாட்டு போடச் சொன்னா, இவன் பட்டியல் போடுறானே -ன்னு கவிநயா-க்கா முறைக்கும் முன் நிப்பாட்டிக்குறேன்:)

மங்களமான நாட்களில் மங்களமான இசை கேட்பது பெரும் பாக்கியம்!
*மங்கள இசை -ன்னா = அது நாதசுரம்!
*குரலில் மங்களம் -ன்னா = அது எம்.எஸ் அம்மா/ சுசீலாம்மா

வீணை ஒலிக்க, அப்படியே, கடலில் நிலவு எழுவது போல், எழும் பாட்டு! சுசீலாம்மா, "திருமகளே, திருமகளே" -ன்னு உருகிப் பாடுவது...
ஒரு கட்டத்தில் வீணையா? சுசீலாம்மாவா? என்பது போல் போட்டியிட்டுச் செல்லும் அற்புதப் பாடல்...

ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம் -ன்னு மிக அழகிய வரிகள்.. கவிஞர். கருமாரி. சோமு எழுதியது; கேட்டுக் கொண்டே, படித்து மகிழுங்கள்!


ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!

திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!!
அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கைத் தாயார்!
இசை: கண்மணி ராஜா
குரல்: பி.சுசீலா
வரிகள்: கவிஞர். கருமாரி சோமு

Monday, August 12, 2013

எவரிடத்தில் செல்வேன்?


சுப்பு தாத்தா சூப்பராகப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே நீங்களும் பாடுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


(குறவஞ்சி மெட்டு)

தானேனன்னே தானேனன்னே தனதானேனன்னே தானேனன்னே
தானேனன்னே தானேனன்னே தனதானேனன்னே தானேனன்னே

அம்மா நான் உன்னிடத்தில் ஓடோடியும் வந்து விட்டேன்
அம்மா என்னை முழுதாக உன்னிடத்தில் தந்து விட்டேன்

வாழ்நாளும் தீரும் முன்னே அம்மா உன்னை வாழ்த்த வேணும்
வாழுகின்ற நொடிதோறும் அம்மா உன்னை வணங்க வேணும்

சோதனைகள் வந்தாலும் அதை சாதனையாய்க் கொள்வேனம்மா
வெந்துயரில் வீழ்ந்தாலும் அதை செய்தவமாய்க் கொள்வேனம்மா

அம்மா உன்னை நெஞ்சில் வைத்து அதைக் கோயிலாகச் செய்தேனம்மா
அம்மா நான் உன்னையன்றி எவரிடத்தில் செல்வேனம்மா?

(fast)
தனததின்னா தனததின்னா தனததின்னா திரனா
தனததின்னா தனததின்னா தனததின்னா திரனா

உன் பெயரைச் சொல்லிடவே இந்தப் பிறப்பெடுத்தேன்
உன் புகழைப் பாடிடவே செந்தமிழைப் படித்தேன்
வஞ்சி உன்னை வணங்கிடவே வஞ்சி வடிவெடுத்தேன்
கெஞ்சி உன்றன் பஞ்சு மலர்ப் பாதங்களைப் பிடித்தேன்…
                                                பாதங்களைப் பிடித்தேன்…


--கவிநயா

Thursday, August 8, 2013

கரை இதுவே !



 கரை  இதுவே !
(subbu sir  sings  http://www.youtube.com/watchv=YyvaCODGQpI  )                                         

மாயைக் கடலிலென் மனக்கலம் நிலையின்றி
                                                       ஆடி அலையுதம்மா .
 மதியோ  திசைகாட்டியற்ற   மாலுமியாய் 
                                         கரைதேடித் தவிக்குதம்மா.


புலன்களாம் முதலைகள்  ஆசைப் பற்களால்
                        கலந்தனைத் துளைக்குதம்மா .
துளைவழி புகுந்த மாயை நீர் கலந்தனை
                                     மூழ்க்கிட முயலுதம்மா.


உள்ள  இடமெது  என்று  உணருமுன்
                       இருள்வந்து சூழ்ந்ததம்மா.
செல்லுந்திசை புரியாத மதியோ
                      கரைதேடிச் சோர்ந்ததம்மா.


 கலங்கரை விளக்கமாம் கண்களால்  கருணையாம்
                                    ஒளிதனைப்  பாய்ச்சிடம்மா !.
கலங்கிடும் மதிக்கு " கரை இதுவே! " என்றுன்
                                        மலர்க்கழல் காட்டிடம்மா !


பேரருட்காற்றாலென்  மனக்கலந்தன்னையுன்
                                         திசையினில் திருப்பிடம்மா.!
பாசத்தாலதனைக் கட்டியுன்  திருக்கழற்
                                             கரைதனில் நிறுத்திடம்மா!

Monday, August 5, 2013

அம்மா உன் கருணைக்கு அளவேது?




சுப்பு தாத்தா ஹம்ஸானந்தி ராகத்தில் கலக்கியிருப்பது இங்கே... நீங்களும் கேட்டு பரவசமடையுங்கள்! 

 
அம்மா உன் கருணைக்கு அளவேது? உன்

பதமலர் பணிந்த பின்னே பயமேது?

(அம்மா)



மனமுருகித் துதிக்க மறுஜென்மம் கொடுத்தாய்

மன்மதனை இரதியினுக்குப் பரிசெனவே அளித்தாய்

பட்டருக்குப் புகல்தந்து பரிந்துயிரைக் காத்தாய்

வட்டநில வைவானில் வடிவுடனே அமைத்தாய்

(அம்மா)



நஞ்சை யமுதாக்கி யுன்றன் நாயகனைக் காத்தாய்

பஞ்சுநிகர் கரத்தாலே நீலகண்டனாக்கி வைத்தாய்

காளிதாசன் நாவினிலே கவிமுகிலாய் அமர்ந்தாய்

காழிப்பிள்ளை பசிதீர்க்க ஞானமெனும் அமுதளித்தாய்

(அம்மா)



மாதவனின் சோதரியே மாதவங்கள் செய்தவளே

கோதையரில் மாமணியே கொஞ்சுமிளம் பைங்கிளியே

நாதவடி வானவளே நாமம் சொல்ல மகிழ்பவளே

வேதவடி வானவளே வெந்துயரைத் தீர்ப்பவளே

(அம்மா)



--கவிநயா

Friday, August 2, 2013

அம்மன்துதி பாடிடுவோம் .


அம்மன்துதி பாடிடுவோம்  .

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .

ஆத்தாளாம்  அபிராமி 
பார்த்தாலே போதுமடி!
பூத்திடுமே புதுவாழ்வு !
தோத்தோடும் தரித்திரமே !

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .
 


நாத்திகரை ஆத்திகராய் 
மாத்திடுவாள் மகமாயி !
காத்திடுவாள் , நம்மைக்கரை 
சேர்த்திடுவாள்  காத்தாயி !

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .