Monday, December 25, 2017

உலகேழும் பூத்தவள்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

விழி நீரில் விளையாடும் வெள்ளன்னமே
பொழி அன்பில் எங்கெங்கும் அருள் தங்குமே
(விழி)

ஓரவிழிப் பார்வையாலே உலகேழும் பூத்தவளே
கோலவிழிப் பார்வையாலே கருணை கொண்டு காப்பவளே
(விழி)

உன் நினைவில் வாழும் போது துன்பம் மறைந்து போகுதம்மா
உன் நினைவில் ஆழும் போது இன்பம் நெஞ்சில் பொங்குதம்மா
இன்ப துன்பம் எது வந்தாலும் உன் நினைவு ஒன்றே வேண்டும்
நெஞ்சில் எழும் அலைகள் யாவும் உன் புகழே பாட வேண்டும்

(விழி)


--கவிநயா

Monday, December 18, 2017

அழகானவள்!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகானவள் அருள் வடிவானவள்
அன்போடு எழில் கூடி உருவானவள்
(அழகானவள்)

முத்தாணி மண்டபத்தில் முத்துப் போல் ஒளிர்ந்திருப்பாள்
சிற்றாடைப் பெண்ணைப் போலே சிரித்து மகிழ்ந்திருப்பாள்
தொட்டோடும் தென்றல் காற்றாய் நெஞ்சகத்தில் குளிர்ந்திருப்பாள்
பற்றில்லாச் சிவனைக் கூடப் பித்துக் கொள்ளச் செய்திடுவாள்
(அழகானவள்)

ஸ்ரீசக்ர ராணியவள், சிம்ம வாகினி யவள்
வக்ர காளியும் அவள், துர்கா தேவியு மவள்
செல்வங்களை அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி தாயுமவள்
ஞானந் தன்னை நல்கும் போது மாசரஸ்வதி யவள்

(அழகானவள்)


--கவிநயா

Monday, December 11, 2017

காலடியில்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

காலடியில் விழ வேணும், கண்ணீரால் தொழ வேணும்
பூவடியில் ஓர் மலராய் நானும் வந்து விட வேணும்
(காலடியில்)

இதயத்திலே ஈரமில்லை, துயரம் அதைத் துரத்தியதோ?
விழிகளிலே நீருமில்லை, வேதனையால் வற்றியதோ?
(காலடியில்)

உன்னை எண்ணும் போதினிலே உள்ளம் உருகி விட வேணும்
உன் பெயரைக் கேட்டாலும் கண்கள் பெருகி விட வேணும்
அன்பெல்லாம் உனக்காக, ஆசையெல்லாம் உனக்காக
சொந்தம் பந்தம் பாசம் என்ற அத்தைனையும் நீயாக

(காலடியில்)


--கவிநயா

Monday, December 4, 2017

நினையாத நாளில்லை


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

நினையாத நாளில்லையே, உன்னை
பணியாமல் நானில்லையே, அம்மா
(நினையாத)

அலையினில் சிக்கிய துரும்பாய் என் மனம்
உலகினில் சிக்கி உழல்கின்ற போதும்
(நினையாத)

முத்து முகம் நினைத்தால் சித்தத்தில் தேனூறும்
பத்தும் பறந்து விடும், பக்தி மிகுந்து வரும்
சக்தி உன் பெயர் சொன்னால் முத்தமிழ் பாலூறும்
பண்ணிசை ஓடி வரும் பாமழையாய்ப் பொழியும்

(நினையாத)


--கவிநயா


Monday, November 27, 2017

இன்பம் அவள் பாதம்கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகெல்லாம் அளந்தோனின் உடன்பிறந்தவளே
உத்தமியே உமையவளே சத்தியத்தின் வடிவே
(உலகெல்லாம்)

சின்னஞ்சிறு உயிருக்கும் உணவளிப்பவளே
பென்னம் பெரும் கடலெனவே கருணை செய்பவளே
(உலகெல்லாம்)

அம்மா வென்ற ழைத்து விட்டால் அள்ளி அணைத்துக் கொள்வாள்
கன்னத்திலே ஓடும் நீரை முந்தானையால் துடைத்திடுவாள்
துன்பம் இனி இல்லையென்னும் நம்பிக்கையை அவள் அளிப்பாள்
இன்பம் அவள் பாதம் என்று அன்பால் உணர்த்திடுவாள்
(உல்கெல்லாம்)


--கவிநயா


Monday, November 20, 2017

ஊஞ்சலாடி வருகின்றாள்!கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஊஞ்சலாடி வருகின்றாள் உலக நாயகி, நம்மை

வாஞ்சையோடு காக்கும் எங்கள் தையல் நாயகி

பொன்னூஞ்சல் ஆடி வரும் புவன நாயகி, நம்மை

பாசமுடன் காக்கும் எங்கள் நேச நாயகி

(ஊஞ்சலாடி வருகின்றாள்)ஆடி வரும் அவள் அழகில் உலகம் மயங்கும், அவளை

பாடிப் பாடிக் திளைப்பதிலே உள்ளம் மகிழும்

கூடுகின்ற பக்தர் கூட்டம் கொண்டாடி வணங்கும், பல

கோடிக் கண்ணும் போதாது போல் அவள் எழில் விளங்கும்

(ஊஞ்சலாடி வருகின்றாள்)

மாடு மனை வீடு சுற்றம் எல்லாம் தருவாள், அவளை

நாடி விட்டால் பிறவி இல்லாப் பேறும் தருவாள்

கூவி அம்மா என்றழைத்தால் ஓடி வருவாள், அவளைக்

கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாலோ குழைந்து விடுவாள்

(ஊஞ்சலாடி வருகின்றாள்)


--கவிநயா


Monday, November 13, 2017

சின்னஞ்சிறு பெண் போலேகீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

என்னோடு வருவாயே அம்மா, உன்னைப்

பிள்ளையெனப் பாராட்டி, செல்லமெனச் சீராட்ட

(என்னோடு)சிற்றாடை கட்டிக் கொண்டு சின்னஞ்சிறு பெண் போலே

முத்தாரம் மார்பசைய முல்லை மலர்ப் பூப் போலே

காலிரண்டில் கொலுசொலிக்க துள்ளும் புள்ளி மான் போலே

பால் நிலவைப் பழிக்கின்ற வட்ட எழில் வதனமுடன்

(என்னோடு)ஒரு முறை உனை நினைந்தால் உலகெல்லாம் ஒளி மயமே

ஒரு கணம் உனை மறந்தால் உள்ளம் மூழ்கும் இருளிடமே

என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே

உன்னருகில் நான் இருந்தால் இப்பிறவி பயன் பெறுமே

(என்னோடு)


--கவிநயா