Monday, December 31, 2012

அவளை மட்டும் நம்பு!


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
வரும் வருடம் வசந்தமாய் அமைய, அம்மா அருளட்டும்!




சுப்பு தாத்தா நாட்டுப்புறப் பாடல் மெட்டில் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



வண்ணப் பாவாடை கட்டிக் கொண்டு அவள்
 வாசல் தோறுமே வந்திடுவாள்
கன்னஞ் சிவந்திட முத்தமிட்டால் அந்த
 அன்பில் கனிந்தவள் கரைந்திடுவாள்
செல்லக் கண்மணியாய்ச் சீராட்ட கள்ளம்
 இல்லா உள்ளமெல்லாம் பாராட்ட
வெல்லம் போலவே இனித்திடுவாள் நம்
 இல்ல மெல்லாம் வந்து நிறைந்திடுவாள்!
                             
பக்தி செய்தாலவள் மகிழ்ந்திடுவாள் நம்
 பக்கம் வந்தவள் அமர்ந்திடுவாள்
பித்தனுட னவள் வீற்றிருப்பாள் எழில்
 பிச்சியா யவள் கொலுவிருப்பாள்
சித்தத்தி னுள்நின்று சிரித்திடுவாள் நல்ல
 தித்திக்கும் தேனென இனித்திடுவாள்
வித்துக்குள் மரமொன்று இருப்பதுபோல் நம்
 பக்திக் குள்ளே யவள் குடியிருப்பாள்!

 சந்தத மும்துதி செய்து வந்தால் நெஞ்சில்
 சந்தனம் போலவே மணத்திடுவாள்
முந்தைய வினை யெல்லாம் விரட்டிடவே
 கந்தனைத் தந்தவள் அருளிடுவாள்
விந்தையாம் அவளது பேரன்பு தன்னைச்
 சொந்தமாய்த் தருவது அவள் பண்பு
கந்தையாய்த் துயரங்கள் கிழித்தாலும் என்றும்
 பந்தமாய் அவளை மட்டும் நம்பு!  


--கவிநயா

Monday, December 24, 2012

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!



சுப்பு தாத்தா சிந்து பைரவி ராகத்தில் அப்படி ஒரு அன்போடு அம்மாவை ஊஞ்சல் ஆட்டுகிறார். நாமும் சேர்ந்து கொள்வோம், வாருங்கள்! மிக்க நன்றி தாத்தா! ஊஞ்சலில் அமைத்திருக்கும் படம் மிக அழகு. அதற்கும் மிகவும் நன்றி!





ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!

கண்டங் கறுத்த சிவனுடனே
கண்ணாய் மணியாய் இருப்பவளே
கண்ணாரமுதே உமையவளே
கனிவாய் ஊஞ்சல் ஆடுகவே!

கஜமுகப் பிள்ளை உடனிருக்க
கந்தப் பிள்ளை துணையிருக்க
கண்ணுதலான் உன் அருகிருக்க
கனியமுதே நீ ஆடுகவே!

வானவ ரெல்லாம் வணங்கி நிற்க
தானவ ரெல்லாம் தெண்டனிட
மானிட ரெல்லாம் பணிந்திருக்க
மகிழ்ந்தே ஊஞ்சல் ஆடுகவே!

நான்முக னுடனே நாமகளும்
அரிதுயில் அரியுடன் பூமகளும்
அரனுடன் அகிலமும் போற்றிடவே
அம்மா நீயும் ஆடுகவே!

ஐந்தொழில் புரியும் தேவியளே
அன்பே உருவாம் அன்னையளே
கொஞ்சம் நீயும் ஓய்வெடுக்க
ஊஞ்சல் அமைத்தோம் ஆடுகவே!    

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா ஊஞ்சல் ஆடுகவே
அகிலம் எல்லாம் போற்றிடவே
ஆனந்தமாய் நீ ஆடுகவே!


--கவிநயா


படத்துக்கு நன்றி: http://navarathrii.blogspot.com/2010/10/4.html

Monday, December 17, 2012

கண்ணீரை ஏன் தந்தாயோ?






சுப்பு தாத்தா மோஹன ராகத்தில் பாடியது இங்கே. கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 

கண்ணீரை ஏன் தந்தாயோ?
கவிதை பெறவே தந்தாயோ?
கண்ணீரின்றிக் கவிதை புனையும்
காரணம் எனக்குத் தாராயோ?

கண்ணீர் இன்னும் வற்றவில்லை
அதனால் என்ன குற்றமில்லை
பெற்றவள் உன்றன் துணை யிருக்க
விட்டொழித்தேன் என் மனக்கவலை!

பன்னீர் போலே உன் சிரிப்பு
பனியைப் போலுன் அருள் எனக்கு
வினையின் தகிப்பைத் தணித்திடுமே
சுனையைப் போலது சுகந் தருமே!

உனக்காய் மட்டும் அழ வேணும்
உன் பாதங்களில் விழ வேணும்
கண்ணீர் அதற்காய் சேமிக்க
காமாக்ஷி உனதருள் வேணும்!


--கவிநயா