உள்ளம் என்னும் ஊரிலே
பக்தி என்னும் தேரிலே
உவகையுடன் வலம் வருவாள்
உத்தமி உமையாள், அவளை
அன்னை என்று அழைத்து விட்டால்
அருள் மழை பொழிவாள்
நெஞ்சமென்னும் வானிலே
நிலவு போல அவள் முகம்
கஞ்ச மலர்ப் பாதங்களோ
தங்க நிழல் தரும், அவளை
நினைவினிலே நிறுத்தி விட்டால்
நிம்மதி பிறக்கும்
செந்தமிழை விரும்புவாள்
சந்தங்களை அருளுவாள்
கருப் பொருளாய் அவள் வருவாள்
கவிதையைத் தருவாள், அவளை
புகழ்ந்து பணிபவர்க்கு
அருள் மழை பொழிவாள்
--கவிநயா