ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு நான் எழுதாத, ஆனா என்னுடையது போலவே இருக்கிற ஒரு பாடல் :) போன வாரம் தற்செயலாக இதைக் கேட்க நேர்ந்த போது இதை உங்களுடன் பகிர்ந்துக்கிறதுன்னு முடிவு செய்தேன்... மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மீதான பாடல்களில் ஒண்ணு. எழுதியவர் யார்னு தெரியலை; உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க. பாடியிருப்பவர் வாணி ஜெயராம்.
இந்தப் பாடலின் ஒலிச்சுட்டி.
உன்னெழில் கோலம் என்னிரு கண்ணில் என்று தெரிந்திடுமோ
உன்மலர்ப்பாதம் என்தலைமீதில் என்று பதிந்திடுமோ - அம்மா
என்று பதிந்திடுமோ?
(உன்னெழில்)
அன்னையுன் அருளால் என்னையும் மறந்து இருந்திடும் நாள்வருமோ
பொன்னையும் பொருளையும் பூமியில் வாழ்வையும் வெறுத்திடும் நாள்வருமோ - அம்மா
வெறுத்திடும் நாள்வருமோ?
ஆசையென்னும் வேதனை அகற்றி அருள்தரவருவாயா
அலைகடல் போல அலையுமென் வாழ்வினில் அமைதியைத் தருவாயா - அம்மா
அமைதியைத் தருவாயா?
(உன்னெழில்)
உலையினில் இட்ட மெழுகாய் நானும் உருகித் தவிக்கின்றேன்
உன்னருள் வேண்டி ஒவ்வொரு நாளும் பாடித் துதிக்கின்றேன் - அம்மா
பாடித் துதிக்கின்றேன்
ஊரும் பேரும் உறவும் வேண்டேன் உன்னருள் வேண்டுகின்றேன்
உலகினில் இருக்கும் காலம்வரைக்கும் உன்துணை வேண்டுகின்றேன் - அம்மா
உன்துணை வேண்டுகின்றேன்
(உன்னெழில்)
Monday, November 29, 2010
Monday, November 22, 2010
சிவன் பாதியள்
அரியாசனத்தினில் அரனுடன் அமர்ந்து
சரியாசனம் செய்யும் அம்பிகையே!
அரவாசனத்தினில் துயில் கொண்டிருக்கும்
அரியுடை அன்புச் சோதரியே!
இந்திரன் முதலாம் தேவர்கள் யாவரும்
பணிந்திடத் திகழ்ந்திடும் தாமரையே!
சந்திர னைமுடி சூடிய இறையுடன்
வந்தெமைக் காத்திடு தாரகையே!
அருமறைகளும் தினம் போற்றிடும் துதித்திடும்
நாயகியே எங்கள் நான்முகியே!
திருமுறைகளின் அருந் தலைவனை அணையும்
சாம்பவியே எழில் சங்கரியே!
பவமதை ஒழித்திடு தவமதை நல்கிடு
நாரணியே எங்கள் பூரணியே!
எமதுள்ளம் உறைந்திடு நிறைந்தங்கு ஒளிர்ந்திடு
சோதியளே சிவன் பாதியளே!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.shaivam.org/siddhanta/maardh.html
Monday, November 15, 2010
வர வேண்டும்... வர வேண்டும்...
வர வேண்டும் வர வேண்டும் பரமேஸ்வரி – வரம்
தர வேண்டும் தர வேண்டும் ஜகதீஸ்வரி!
(வர வேண்டும்)
பரம் என்று உனை அடைந்தேன்
ஒரு வரம் தா – என்றன்
சிரம் தனில் பதம் பதித்து
திரு வரம் தா!
(வர வேண்டும்)
திருவடி நினை வொன்றே
நொடி தொறும் வேண்டும் – உன்
நினைவினில் தினம் திளைத்து
மகிழ் வரம் வேண்டும்!
மறுபடி மறுபடி
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்திடும்
சுக வரம் வேண்டும்!
(வர வேண்டும்)
--கவிநயா
படத்துக்கு நன்றி: கைலாஷி
Monday, November 8, 2010
நெஞ்சில் நிறைந்தவள் - 2
சென்ற பதிவில் இட்ட பாடலின் நிறைவுப் பகுதி இது.
பகுதி-2
இதயத்தில் இருப்பவள் இயக்கத்தை அளிப்பவள் இமயத்தில் உறைகின்ற உமையவளே
உதயத்தைப் போலவே உள்ளத்தில் ஜொலிப்பவள் ஓம்எனும் பிரணவத்தை ஆள்பவளே
சதமென பதங்களை பற்றிய பேருக்கு இதமுடன் இன்னல்கள் தீர்ப்பவளே
விதவித மாகவே துதிட்ட போதிலும் வேற்று மைகள்இன்றி காப்பவளே! (6)
வான்முதல் வளியவள் தேனினும் இனியவள் வணங்கிடும் அடியவர்க் கெளியவளே
வானவர் வணங்கிட தானவர் பணிந்திட மாதவர் போற்றிட திகழ்பவளே
கானத்தில் கரைபவள் ஞானத்தில் ஒளிர்பவள் மோனத்தில் உறைபவன் மனையவளே
நான்முகன் முதலிய மூவரும் துதித்திட ஐந்தொழில் புரிந்தெம்மை காப்பவளே! (7)
கலைகளின் தாயவள் எழில்வடி வானவள் மலையர சன்மகளும் அவளே
வலையென பின்னிடும் வினைகளை களைந்திட மலையென உடன்துணை இருப்பவளே
அலைந்திடும் மனமதை அசைவற்று நிறுத்திட அருளிடு அன்பினில் சிறந்தவளே
கலங்கிடும் அறிவினை தெளிந்திட வைத்தெம்மை அருமையுடன் தினம் காப்பவளே! (8)
சடைமுடி தரித்தவன் விடைதனில் இருப்பவன் இடமதை வரித்திட்ட உமையவளே
மடையென பெருகிடும் வினைகளை அழித்திட கொடையென பொழிந்தருள் புரிபவளே
படையென பல்திசை பயணிக்கும் புலன்களை அடக்கிட உதவிடும் அருள்மகளே
கடையவ னாயினும் கருணை மிகுந்திட கனிவுட னேவந்து காப்பவளே! (9)
நாயகியாய் நல் நவமணியாய் எழில் நான்முகியாய் திகழ் நாரணியே
காயமிதில் உயிர் காயும்முன்னே வந்து மாயங்கள் களைந்திடு மாதவியே
பாய்கின்ற நதியென ஓடிவந்து எமை பரிவுடன் காத்திடு பரிபுரையே
தாயுன்றன் அடிகளை சரண்புகுந்தோம் எமை ஆதரித் தருள்புரி திரிபுரையே! (10)

Monday, November 1, 2010
நெஞ்சில் நிறைந்தவள்!
200-வது பதிவிற்காக 'அயிகிரி நந்தினி' மெட்டில் 5 பத்திகள் கொண்ட பாடல் ஒன்று எழுதினேன்; அதிலிருந்து 2 எடுத்து பயன்படுத்தினோம். சரியாக நிறைவடையாதது போல் தோன்றியதால், 5 ஆக இருந்தது பிறகு 10 ஆகி விட்டது. அதனை இரண்டு பகுதிகளாக இடுகிறேன்...
பகுதி-1
நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே! (1)
அன்னையவள் இளங் கன்னியவள் எழு உலகையும் ஆள்கின்ற அரசியளே!
முன்னையவள் முதல் முடிவுமவள் எமை கண்ணெனக் காக்கின்ற பெண்ணவளே!
விண்ணுமவள் இந்த மண்ணுமவள் தன்னை உன்னுபவர்க் கருள் புரிபவளே!
கண்ணுமவள் கனி யமுதுமவள் இந்த மன்னுயிர் தனதென காப்பவளே! (2)
கண்ணுதலான் ஒரு பாதியவள் கறைக் கண்டனைக் காத்திட்ட தேவியளே!
விண்ணுறை தேவரும் மண்ணுறை மாந்தரும் பொன்னென போற்றிடும் பூவையளே!
கண்டென இனித்திடும் கன்னலவள் எழிற் செண்டென சிரித்திடும் செவ்வியளே!
உண்டென உணர்ந்துன்னை அண்டிய தொண்டரை அன்புடன் தாயென காப்பவளே! (3)
கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே! (4)
மலையென நின்றவன் மங்கையவள் அவன் மனதினைக் கவர்ந்திட்ட நங்கையளே!
சிலையினை அங்கையில் ஏந்தியவள் எழிற் சிலையென விளங்கிடும் மலைமகளே!
கலையினை திருமுடி சூடியவள் சிலம் பொலித்திட திருநடம் புரிபவளே!
நிலையற்ற வாழ்விதன் நிலையினை உணர்த்தி நிகரற்ற நேசத்தால் காப்பவளே! (5)

Subscribe to:
Posts (Atom)