Monday, January 25, 2016

பொறுத்தெனைக் காவாயோ?


 

அம்பிகை அஷ்டகம் - 6

யோகம் யாகம் நானறியேன்

உனக்கென நானெதும் செய்தறியேன்

தியானம் ஞானம் நானறியேன்

தாயே உனக்கெதும் தந்தறியேன்

எனினும் உனையே வேண்டுகிறேன்

இதைத் தா அதைத் தா என்கின்றேன்

நியாயம் இல்லை உணர்கின்றேன்

இருந்தும் பொறுத்தெனைக் காவாயோ?


---கவிநயா 

(தொடரும்)

Monday, January 18, 2016

பிள்ளை எனை நீ காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 5

ஏங்கித் தவிக்கும் குரல் கேட்டும்
ஏனென்காது இருப்பதுமேன்?
தாங்கிக் கொள்ளத் தாயிருந்தும்
தனியாய் நானும் தவிப்பதுமேன்?
காக்கை கூடத் தன்குஞ்சை
பொன்குஞ் சென்றே போற்றிடுமாம்
என்னை ஈன்ற என் தாயே
பிள்ளை எனை நீ காவாயோ?


--கவிநயா

(தொடரும்)


 

Monday, January 11, 2016

பரிவாய் நீயும் காவோயோ?

அம்பிகை அஷ்டகம் - 4

 
பிறந்து விட்டேனென் றழுவேனோ?
பிழைசெய் தேனென் றழுவேனோ?
பிரமன் எழுத்திற் கழுவேனோ?
பிரமை தெளிதற் கழுவேனோ?
இருளைக் கண்டு அழுவேனோ?
அருளை வேண்டி அழுவேனோ?
பலவாய்க் கலங்கித் திரிவேனை
பரிவாய் நீயும் காவோயோ?


--கவிநயா 

(தொடரும்)

Monday, January 4, 2016

கனிவாய் என்னைக் காவாயோ?


அம்பிகை அஷ்டகம் - 3

பலவாய்ப் பாவம் புரிந்தேனை

பணியா துன்னைத் திரிந்தேனை

நிலையா துலகில் உழன்றேனை

நினையா துன்னை மறந்தேனை

நீயும் நினையா திருப்பாயோ?

நின்றன் பிள்ளை மறப்பாயோ?

காயும் உள்ளம் பாராயோ?

கனிவாய் என்னைக் காவாயோ?


--கவிநயா 

(தொடரும்)