வடிவான ஒன் அழக மனசில் வடிச்சு வச்சேன் - நீ
பரிவா ஒரு வார்த்த பேசக் காத்துக்கிட்டு கெடக்கேன்
சூரியன் நீ எங் கெழக்கில் உதிக்கப் போறதெப்போ - எஞ்
சூரியனப் பாத்தெம் மனசு மலரப் போறதெப்போ?
காரிகையே ஒங் கருண கெடைக்கப் போறதெப்போ - நா
பகலிரவு பாராம பொலம்புறனே தப்போ?
பேரிகையா மொழங்கினாலும் கேக்கலையோ ஒனக்கு - நா
படற பாட்டப் பாத்தும் தீரலையோ பிணக்கு?
காடு பாக்கப் போகும் முன்னே வீடு பாக்க வேணும் - ஒன்
வீட்டுக்குள்ள என்னையும் நீ சேத்துக்கிட வேணும்
ஆயிரந்தான் அறிவிலியா இருந்தபோதும் நானும் - ஒம்
பிள்ளைகளில் ஒருத்திதானே நெனச்சுப் பாரு நீயும்
--கவிநயா
Monday, November 30, 2009
Monday, November 23, 2009
நெஞ்சம் இனித்திடும்...
|
இந்தப் பாடல் "மாதா ஸ்ரீ புவநேச்வரீ மனமகிழ் மாலை" என்ற இசைத்தட்டிலிருந்து...
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
பாடல் & இசை: மாஸ்டர் ஸ்ரீதர்
நெஞ்சம் இனித்திடும் நினைவும் இனித்திடும்
நிர்மல வேணி உன்னை நினைக்கையிலே
நேரம் இனித்திடும் நாளும் இனித்திடும்
நித்யகல் யாணி உன்னை துதிக்கையிலே
(நெஞ்சம்)
பசியும் பறந்திடும் ருசியும் மறந்திடும்
பார்வதி தேவி உன்னை பார்க்கையிலே
பக்தி பிறந்திடும் சக்தி கிடைத்திடும்
பாலாம் பிகை உன்னைப் பணிகையிலே
(நெஞ்சம்)
வளமை பெருகிடும் வறுமை ஒழிந்திடும்
வரலக்ஷ்மி தேவி உந்தன் வருகையிலே
வாழ்வு மலர்ந்திடும் வாழ்க்கை மகிழ்ந்திடும்
வைஷ்ணவி தேவி உந்தன் கருணையிலே
(நெஞ்சம்)
கவலை விலகிடும் கலைகள் தெரிந்திடும்
சரஸ்வதி தேவி உந்தன் சரணத்திலே
ஞானம் நிலைத்திடும் ஞாலம் புகழ்ந்திடும்
புவனேஸ் வரி உந்தன் பாதத்திலே
(நெஞ்சம்)
அன்புடன்
கவிநயா
Monday, November 16, 2009
அண்டியவர்க்கவள் அன்னை!
அண்டியவர்க் கவள் அன்னை!
அல்லாதவர்க் கவள் சண்டி!
உன்னுபவர்க் கவள் அருள்வாள்!
உன்னா திருப்பினும் வருந்தாள்!
துண்டாய் அசுரரைத் துணிப்பாள்!
வெண்டா மரையிலும் இருப்பாள்!
கண்டா மணியெனச் சிரிப்பாள்!
செண்டாய் மலர்ந்துள் ளிருப்பாள்!
கண்ணாய் மணியெனக் காப்பாள்!
கரம்பிடித்தே கரை சேர்ப்பாள்!
விண்ணே வீழ்ந்திடும் போழ்தும்
பெண்ணே துணைநமக் கருள்வாள்!
எந்தன் அன்னை அவளே!
எதுவரினும் இனித் துவளேன்!
புதுமலர்ப் பாதம் பணிந்தே
மதுவன்பினில் முழுகிக் களிப்பேன்!
--கவிநயா
Monday, November 9, 2009
யாரிந்தப் பெண்?
வணக்கம். நலந்தானே?
ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கு. அவற்றுக்குமே மூலம் பெங்காலியா இருக்கும்னு நினைக்கிறேன். அதில் ஒரு பாடல்தான் இது. "Who is this Woman yonder who lights the field of battle?", என்று தொடங்கும்.
ஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் படிச்ச ஒரு பாடலைத் தழுவி இந்த பாட்டை எழுதினேன். "The Gospel of Sri Ramakrishna" புத்தகத்தில் பல அருமையான பாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கு. அவற்றுக்குமே மூலம் பெங்காலியா இருக்கும்னு நினைக்கிறேன். அதில் ஒரு பாடல்தான் இது. "Who is this Woman yonder who lights the field of battle?", என்று தொடங்கும்.
யாரிந்தப் பெண்?
இருள் சூழ்ந்த போர்க் களத்தில்
கதிரவன்போல் திரிகின்றாள்!
கருமேக நிறம் விஞ்சும்
பளபளக்கும் கருமேனி
கண்கூசச் செய்கின்ற
மின்னல்போல் பல்வரிசை
அலைகின்ற வேகத்தில்
கலைகின்ற கருங்கூந்தலுடன்
ஆங்காரச் சிரிப்புடனே
அசுரர்களை வதைக்கின்றாள்!
அச்சமூட்டும் போர்நடுவே
அயராமல் இருக்கின்றாள்!
முத்துமுத்தாய் வியர்வையவள்
புருவங்கள் மேல்துளிர்க்க
கொத்துமலர் இவள் கூந்தலென
தேனீக்கள் மொய்த்திருக்க
முழுமதியும் இவள் அழகைக்
கண்டுநாணி ஒளிந்துகொள்ள
அதிசயங்களுக் கெல்லாம் அதிசயமாய்
திகழ்கின்ற இந்தத் தேவதை யாரோ?
கண்டவர் மயங்குகின்ற
இந்த அதிரூப சுந்தரி யாரோ?
சிவன்கூட பிணம்போல
அவள் காலடியில் கிடக்கின்றானே!
பிடியதனின் கம்பீரத்துடன்
போர்க்களத்தில் திரிகின்ற இவள்...
யாரென்று நான் கண்டு கொண்டேன்!
இவள்தான் காளி!
அண்டங்களனைத்தையும் ஈன்ற என் அன்னை!!
--கவிநயா
Subscribe to:
Posts (Atom)