Monday, December 25, 2017

உலகேழும் பூத்தவள்


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

விழி நீரில் விளையாடும் வெள்ளன்னமே
பொழி அன்பில் எங்கெங்கும் அருள் தங்குமே
(விழி)

ஓரவிழிப் பார்வையாலே உலகேழும் பூத்தவளே
கோலவிழிப் பார்வையாலே கருணை கொண்டு காப்பவளே
(விழி)

உன் நினைவில் வாழும் போது துன்பம் மறைந்து போகுதம்மா
உன் நினைவில் ஆழும் போது இன்பம் நெஞ்சில் பொங்குதம்மா
இன்ப துன்பம் எது வந்தாலும் உன் நினைவு ஒன்றே வேண்டும்
நெஞ்சில் எழும் அலைகள் யாவும் உன் புகழே பாட வேண்டும்

(விழி)


--கவிநயா

Monday, December 18, 2017

அழகானவள்!


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகானவள் அருள் வடிவானவள்
அன்போடு எழில் கூடி உருவானவள்
(அழகானவள்)

முத்தாணி மண்டபத்தில் முத்துப் போல் ஒளிர்ந்திருப்பாள்
சிற்றாடைப் பெண்ணைப் போலே சிரித்து மகிழ்ந்திருப்பாள்
தொட்டோடும் தென்றல் காற்றாய் நெஞ்சகத்தில் குளிர்ந்திருப்பாள்
பற்றில்லாச் சிவனைக் கூடப் பித்துக் கொள்ளச் செய்திடுவாள்
(அழகானவள்)

ஸ்ரீசக்ர ராணியவள், சிம்ம வாகினி யவள்
வக்ர காளியும் அவள், துர்கா தேவியு மவள்
செல்வங்களை அள்ளித் தரும் ஸ்ரீலக்ஷ்மி தாயுமவள்
ஞானந் தன்னை நல்கும் போது மாசரஸ்வதி யவள்

(அழகானவள்)


--கவிநயா

Monday, December 11, 2017

காலடியில்...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

காலடியில் விழ வேணும், கண்ணீரால் தொழ வேணும்
பூவடியில் ஓர் மலராய் நானும் வந்து விட வேணும்
(காலடியில்)

இதயத்திலே ஈரமில்லை, துயரம் அதைத் துரத்தியதோ?
விழிகளிலே நீருமில்லை, வேதனையால் வற்றியதோ?
(காலடியில்)

உன்னை எண்ணும் போதினிலே உள்ளம் உருகி விட வேணும்
உன் பெயரைக் கேட்டாலும் கண்கள் பெருகி விட வேணும்
அன்பெல்லாம் உனக்காக, ஆசையெல்லாம் உனக்காக
சொந்தம் பந்தம் பாசம் என்ற அத்தைனையும் நீயாக

(காலடியில்)


--கவிநயா

Monday, December 4, 2017

நினையாத நாளில்லை


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

நினையாத நாளில்லையே, உன்னை
பணியாமல் நானில்லையே, அம்மா
(நினையாத)

அலையினில் சிக்கிய துரும்பாய் என் மனம்
உலகினில் சிக்கி உழல்கின்ற போதும்
(நினையாத)

முத்து முகம் நினைத்தால் சித்தத்தில் தேனூறும்
பத்தும் பறந்து விடும், பக்தி மிகுந்து வரும்
சக்தி உன் பெயர் சொன்னால் முத்தமிழ் பாலூறும்
பண்ணிசை ஓடி வரும் பாமழையாய்ப் பொழியும்

(நினையாத)


--கவிநயா