Monday, December 28, 2020

உனதருள்

 


உனதருளே உலகினிலே உலவிடுதே

உனதருளால் உயிர்களெல்லாம் வாழ்ந்திடுதே

(உனதருளே)

உமை நீயே இமை போலே காப்பதினால்

சுமை கூடச் சுகமாகத் தோன்றிடுதே

(உனதருளே)

 

தங்க நிறப் பாதம் அதைத் தந்து விட்டால் போதும்

தஞ்சம் என்று உன்னைத் தானே நாடி வந்தேன் நானும்

கமலம் போல விழிகள் கவின் மிகும் உன் மொழிகள்

செந்தமிழால் பாடப் பாட தீர்ந்து விடும் வலிகள்

(உனதருளே)




--கவிநயா



Tuesday, December 22, 2020

உமையே நமக்குத் துணையே

 

செக்கர் வானம் போலச் செக்கச் சிவந்திருக்கும் அழகி

கருத்த மேகம் போலக் கூந்தல் அலைந்திருக்கும் அழகி

மன்மதனைச் சுட்டவனைக் கவர்ந்திழுக்கும் அழகி

மாயை என்னும் பேரில் நம்மை மயக்கி வைக்கும் அழகி

 

வேதங்களின் வேர்கள் அவள், கிளை இலைகள் அவளே

வேண்டுவதைத் தந்திடுவாள், இல்லை என்காள் அவளே

வீறு கொண்டு காளி எனச் சீறி நிற்பாள் அவளே

மாறு கொண்ட பகைவர்களைச் சிதறடிப்பாள் அவளே

 

கூறி வரும் அடியவர்க்குக் கொடை வள்ளல் அவளே

பாடி வரும் பக்தருக்குப் பதம் அளிப்பாள் அவளே

அண்டி வந்தால் அன்னையென அரவணைப்பாள் அவளே

வஞ்சியவள் நிழலையன்றி ஏது நமக்குத் துணையே

 

கன்றழுதால் தாளாத தாய்ப் பசுவும் அவளே

கலங்கி நின்றால் கை கொடுத்துக் காப்பவளும் அவளே

விடையேறி எந்தையுடன் பவனி வரும் அவளே

விடையாக வந்து நமது வினையறுப்பாள் உமையே



--கவிநயா



Monday, December 14, 2020

அஞ்சுக மொழியாள்

 



அஞ்சுக மொழியாள்

அஞ்சலென் றருள்வாள்

அத்தனுடன் அவள் வீற்றிருப்பாள்

அபயக் கரம் தந்து காத்திருப்பாள்

 

பக்தியுடன் அவளைச்

சித்தத்தில் வைத்தால்

நித்தமும் அவள் நமக்குத் துணை யிருப்பாள்

சுத்த உள்ளந்தனில் குடியிருப்பாள்

 

பங்கய விழியாள்

பரிவுடன் அருள்வாள்

பிள்ளையென நம்மைக் காத்திடுவாள்

பவ வினைகள் யாவும் களைந்திடுவாள்

 

செஞ்சடை யோனின்

நெஞ்சம் கவர்ந்தவள்

தஞ்சமென் றவர்க்கு அருள் புரிவாள்

கஞ்ச மலர்ப்பத நிழல் தருவாள்


--கவிநயா


Tuesday, December 8, 2020

ஆயி மகமாயி


 ஆடி வந்தோம் பாடி வந்தோம்

ஆத்தா ஒன்ன தேடி வந்தோம்

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

சூரக் காத்துப் போல

சுத்தும் ஒலக வாழ்க்க

யாரப் போயிப் பாக்க

ஒம் பாதந்தானே காக்க

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

சூளயிலே இட்டது போல்

வெனகளெல்லாம் சுடுதே

பாளயத்து ஆத்தா

ஒம் பார்வ பட்டா விடுதே

நீலி திரிசூலி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா

 

வேண்டாத நெனப்பெல்லாம்

வேதனயத் தருதே

சஞ்சலத்தில் விழுந்த மனசு

அலஞ்சு பட்டு அழுதே

ஆயி மகமாயி கொஞ்சம் கண் பாரம்மா

நீ பாத்தாலே எறங்கி விடும் என் பாரம் மா



--கவிநயா



Tuesday, December 1, 2020

கண் பாராய்

 

கதறி அழுகின்றேன்

கண் பாராயோ

பதறி ஆழைக்கின்றேன்

குரல் கேளாயோ

சிவனின் அருகிலே

சிலையானாயோ

மகளை மறந்திட்ட

தாயானாயோ

(கதறி)

 

பகல் இரவு யாவும்

            பயனின்றிப் போகிறதே

அகலாமல் துயரம்

            என்னைச் சுற்றி வாழ்கிறதே

சிலையோ இலையோ நீ

            என்னும் ஐயம் எழுகிறதே

எனினும் உன்னையன்றி

            கதியில்லை என்கிறதே

(கதறி)

 

சரணென் அடைந்த பின்னும்

            சஞ்சலங்கள் தீரவில்லை

முரணென் றறிந்த பின்னும்

            மனமேனோ தெளியவில்லை

கடை விழி நோக்கி விட்டால்

            கடைத் தேறிடுவேனே

தடையேதும் இன்றி

            தாளிணை அடைவேனே

(கதறி)


--கவிநயா